கெண்ட் கிக் கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் இன்று நடைபெற்ற இரண்டாவது கால் இறுதிப் போட்டியில் மருதமுனை கோல்ட் மைன்ட் விளையாட்டுக் கழக அணி 5-1 என்ற கோல்கள் அடிப்படையில் காத்தான்குடி பாலமுனை நெசனல் விளையாட்டுக் கழக அணியைத் தோற்கடித்து அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவானது.
இரண்டாவது கால் இறுதிப் போட்டி இன்று மாலை 4.30 மணிக்கு ஆரம்பமானது. மருதமுனை கோல்ட் மைன்ட் விளையாட்டுக் கழக அணியும், காத்தான்குடி பாலமுனை நெசனல் விளையாட்டுக் கழக அணியும் மோதிக்கொண்டன.
போட்டியின் 10ஆவது நிமிடத்தில் கோல்ட் மைன்ட் விளையாட்டுக் கழக அணி வீரர் சுகைப் கொடுத்த பந்து பரிமாற்றத்தைப் பெற்றுக் கொண்ட ஆத்தீப் நெசனல் அணி பின்கள வீரர்கள் இருவரைத் தாண்டி கோல் கம்பத்திற்குள் மிக வேகமாக அடித்த பந்து கோலாக மாறியது. இதனால் கோல்ட் மைன்ட் அணி 1 -0 என்ற கோல் அடிப்படையில் முன்னிலை பெற்றது.
போட்டியின் 12ஆவது நிமிடத்தில் நெசனல் அணி வீரர் பாமிஸ் ஹக் பெனால்டி எல்லைக்குள் தனக்குக் கிடைத்த பந்தை மிக வேகமாக கோல் கம்பத்தை நோக்கி அடித்தபோது கோல்ட் மைன்ட் கோல் காப்பாளர் ராபி மௌலானா பாய்ந்து பந்தைக் குத்தியதால் பந்து கம்பத்திற்கு மேலால் சென்றது. நெசனல் அணியின் கோல் போடும் நல்லதொரு வாய்ப்பு இதனால் இல்லாமல் போனது.
இதேவேளை கோல்ட் மைன்ட் அணிக்குக் கோணர் கிக் கிடைத்தது. நுபைஸ் அதை அடித்தபோது நெசனல் அணி கோல்காப்பாளர் மேல் உயர்ந்து பந்தைக் குத்தி வெளியில் அனுப்பினார்.
போட்டியின் 33ஆவது நிமிடத்தில் நுபைஸ் பரிமாறிய பந்தைப் பெற்றுக் கொண்ட எம்.ரி.அஸ்லம் வலது பக்கத்திலிருந்து கோல் கம்பத்தை நோக்கி உதைத்தார். கோல் காப்பாளர் பந்தைத் தடுக்க முற்பட்டபோதும் அவரையும் தாண்டி பந்து கம்பத்திற்குள் சென்றது. இதனால் கோல்ட் மைன்ட் அணி தமது இரண்டாவது கோலையும் பெற்றுக் கொண்டு 2 -0 என்ற கோல்கள் அடிப்படையில் முன்னிலை பெற்றது.
கெண்ட் கிக் கால்பந்து தொடரின் அரையிறுதிக்கு நுழைந்த சனி மௌன்ட்
போட்டியின் முழுக்கட்டுப்பாட்டையும் தமக்குள் எடுத்த கோல்ட் மைன்ட் வீரர்கள் மிக ஆக்ரோசமாக நெசனல் அணியின் கோல் கம்பத்தை நோக்கி ஊடுருவினர். இந்த சந்தர்ப்பத்தில் 38ஆவது நிமடத்தில் முன்கள வீரர் சுகைப் கொடுத்த பந்தை பெற்றுக் கொண்ட நட்சத்திர வீரர் நுபைஸ் மிக வேகமாக கோல் கம்பத்தை நோக்கி அடித்தபோது கோல் கம்பத்திற்குள் பந்து சென்று, கோல்ட் மைன்ட் அணிக்கு 3ஆவது கோலும் பதிவானது. இதனால் 3 -0 என்ற கோல்களினால் கோல்ட் மைன்ட் முன்னிலை பெற்றது.
மூன்று கோல்களினால் பின்னிலை அடைந்த நெசனல் அணி வீரர்கள் கோல் ஒன்றினை அடித்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தனர். அதற்கேற்றவாறு தமது வீரர்களை முன் நகர்த்தினர். இவ்வேளை 42ஆவது நிமிடத்தில் நெசனல் அணி வீரர் செட்.எம்.சஹீல் பெனால்டி எல்லைக்குள் கொடுத்த பந்தை பாமிஸ் ஹக் பெற்றுக் கொண்டபோது கோல்ட் மைன்ட் கோல் காப்பாளர் ராபி மௌலானா பந்தைப் பிடிக்க முன் நகர்ந்தபோது அவசரமாக கோல் கம்பத்தை நோக்கி உதைத்தார். பந்து கம்பத்தில் பட்டு வெளியில் சென்றது. இதனால் கோல் போடும் மிக இலகுவான வாய்ப்பு நெசனல் அணிக்கு கைநழுவிப்போனது.
இந்த சந்தர்ப்பத்தில் பிரதான மத்தியஸ்தர் எஸ்.எல்.வை.அறபாத் போட்டியின் முதல் பாதி முடிவுற்றதாக அறிவித்தார்.
முதல் பாதி : கோல்ட் மைன்ட் விளையாட்டுக் கழகம் 3 – 0 நெசனல் விளையாட்டுக் கழகம்
இரண்டாவது பாதி ஆட்டத்தில் நெசனல் அணி ஆக்ரோஷத்துடன் பந்துகளை எதிரணிப் பக்கம் கொண்டு சென்றபோதும் முன்கள வீரா்கள் கோல் கம்பத்தை நோக்கி அடிப்பதில் தவறுகளை விட்டனர்.
போட்டியின் 55ஆவது நிமிடத்தில் எம்.ரி.தஸ்ரிப் முறையற்ற விதத்தில் பந்தைப் பறிக்க முற்பட்டபோது மத்தியஸ்தர் அறபாத் அவருக்கு மஞ்சள் அட்டை காண்பித்தார்.
62ஆவது நிமிடத்தில் கோல்ட் மைன்ட் அணியில் விளையாடும் நட்சத்திர வீரர் நுபைஸ் தனது உடன் பிறந்த சகோதரர் நுபைலுக்கு பந்தினைப் பரிமாறியபோது கோல் கம்பத்திற்குள் பந்தை அடிக்க, பந்து கம்பத்தில் பட்டு வெளியே சென்றது.
இச்சந்தர்ப்பத்தில் பந்து கோல்ட் மைன்ட் அணி வீரர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. போட்டியின் 64ஆவது நிமிடத்தில் ஜே.எம்.ரஸான் வலது பக்கத்திலிருந்து கொடுத்த பந்தைப் பெற்றுக் கொண்ட எம்.ரி.அஸ்லம் தரை மட்டமாக பந்தை உதைத்தபோது பந்து கோல் காப்பாளரையும் தாண்டி கம்பத்திற்குள் சென்றது. இதனால் 4ஆவது கோலையும் கோல்ட் மைன்ட் அணி பெற்றதுடன் அஸ்லம் தனது இரண்டாவது கோலையும் பதிவு செய்தார்.
போட்டியில் கோல்ட் மைன்ட் அணி தமது ஆதிக்கத்தை செலுத்தியபோது நெசனல் அணி தமது பங்கிற்கு கோல் ஒன்றையாவது பெற்றுவிட வேண்டும் என்ற நோக்குடன் மும்முரமாக விளையாடியது.
போட்டியின் 78ஆவது நிமடத்தில் வஸீம் சஜாத் பரிமாறிய பந்தை தம்வசம் எடுத்த எம்.ரி.அஸ்லம் பெனால்டி எல்லைக்கு வெளியில் வைத்து வேகமாக கோல் கம்பத்தை நோக்கி அடித்தபோது, கோல்காப்பாளரையும் தாண்டி பந்து கம்பத்திற்குள் சென்று கோலாக மாறியது. இதன் மூலம் கோல்ட் மைன்ட் அணி தமது 5ஆவது கோலையும் பெற்றுக் கொண்டது.
போட்டி முடிவடைவதற்கு ஒரு நிமிடமே எஞ்சியுள்ள நிலையில் தமக்குக் கிடைத்த பந்தை பெனால்டி எல்லைக்குள் வைத்து உதைத்தபோது பந்து கம்பத்திற்குள் சென்று கோலாக மாறியது. இதன் மூலம் நெசனல் அணி தமது முதலாவது கோலைப் பெற்றுக் கொண்டது.
இதன் பின்னர் பிரதான மத்தியஸ்தர் போட்டி முடிவடைந்ததாக அறிவித்தார்.
முழு நேரம் : கோல்ட் மைன்ட் விளையாட்டுக் கழகம் 5 – 1 நெசனல் விளையாட்டுக் கழகம்
இவ்வெற்றியின் மூலம் மருதமுனை கோல்ட் மைன்ட் அணி அரையிறுதிப் போட்டிக்கு இரண்டாவது அணியாகத் தெரிவானது.
இப்போட்டியில் வெற்றி பெற்ற கோல்ட் மைன்ட் அணியின் பயிற்றுவிப்பாளர் ஏ.சீ.எம்.பைசால் கருத்துத் தெரிவிக்கும்போது, ”எமது அணி வீரர்கள் மிகவும் திறமையாக விளையாடினார்கள். சிறந்த பந்து பரிமாற்றம்தான் கூடுதலான கோல்கள் அடிப்பதற்கு காரணமாக அமைந்தது. கடந்த போட்டியையும்விட இப்போட்டியில் வீரர்கள் சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சியளிப்பதாகவும்” தெரிவித்தார்.
தோல்வியடைந்த காத்தான்குடி நெசனல் அணியின் பதில் பயிற்றுவிப்பாளர் எம்.எம்.ஏ.மரித் கருத்துத் தெரிவிக்கும்போது, ”இன்றைய போட்டியில் முன்னணி வீரர்கள் மற்றும் பிரதான கோல் காப்பாளர் விளையாடாதது தோல்விக்குக் காரணமாகும். இந்தப் போட்டியில் வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவாவோம் என்றுதான் நம்பியிருந்தோம். முன்னணி வீரர்கள் விளையாடாமை கவலையளிக்கின்றது. மற்றும் வீரா்கள் கோல் அடிப்பதில் விட்ட பல தவறுகளும் காரணமாகும்” என்றார்.
இப்போட்டிக்கு பிரதம மத்தியஸ்தராக எஸ்.எல்.வை. அறபாத் கடமையாற்றியதுடன் துனை நடுவர்களாக ஏ.எம்.ஜப்ரான், றிபாஸ் செயற்பட்டதுடன் நான்காவது நடுவராக எம். றஸீட் செயற்பட்டார்.