குளோபல் விளையாட்டுக் கழகத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு நுழைந்த கிறின் மெக்ஸ்

405
kent kick Green Max SC - Global SC/

நிந்தவுர் கெண்ட் விளையாட்டுக் கழகம் அம்பாரை மாவட்ட கால்பந்தாட்ட லீக்கின் ஆதரவுடன் நடத்திவரும் கெண்ட் கிக் கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் நிந்தவுர் பொது விளையாட்டு மைதானத்தில் இன்று (21) நடைபெற்ற நான்காவது கால் இறுதிப் போட்டியில் மருதமுனை கிறின் மெக்ஸ் விளையாட்டுக் கழக அணி 1- 0 என்ற கோல்கள் அடிப்படையில் காத்தான்குடி குளோபல் விளையாட்டுக் கழக அணியைத் தோற்கடித்து அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவானது.

நான்காவது கால் இறுதிப் போட்டி இன்று மாலை 4.15 மணிக்கு ஆரம்பமானது. மருதமுனை கிறின் மெக்ஸ் விளையாட்டுக் கழக  அணியும், காத்தான்குடி குளோபல் விளையாட்டுக் கழக அணியும் இப்போட்டியில் மோதிக்கொண்டன.

போட்டியின் 15ஆவது நிமிடத்தில் கிறின் மெக்ஸ் விளையாட்டுக் கழக அணி வீரா் கொடுத்த பந்து பரிமாற்றத்தைப் பெற்றுக் கொண்ட மர்பான் கோல் கம்பத்திற்குள் மிக வேகமாக அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டுச் சென்றது.

குளோபல் அணி வீரர்கள் பந்து பரிமாற்றத்தை முன் நகர்த்திச் சென்ற போது கோல் கம்பத்திற்கு அருகில் வைத்து கோல் போடும் அரிய வாய்ப்பை பி.எம்.எம்.முஹ்ஸினால் தவறவிடப்பட்டது. அவர் உதைத்த பந்து கோல் கம்பத்திற்கு வெளியில் சென்றது.

இரண்டு அணி வீரா்களும் தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பது போல் மிகச்சிறப்பாக பந்துகளை எதிர்தரப்பு எல்லைக்கு நகர்த்திச் சென்றனர். குளோபல் அணி வீரா் முகம்மட் பெனால்டி எல்லைக்கு வெளியில் இருந்து இடது பக்கமாக இடது காலினால் பந்தை அடித்தபோது பந்து கோல் கம்பத்தை உரசிச் சென்றது.

ஜாவித்தின் ஹட்ரிக் கோலினால் எவரடி அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது ஒலிம்பிக்

அதேபோன்று கிறின் மெக்ஸ் கழக வீரர் ஹக் பெனால்டி எல்லைக்குள் வைத்து அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியில் சென்றது. இரு அணிகளுக்கும் அதிர்ஷ்டம் கை கொடுவில்லை. கடந்த மூன்று கால் இறுதிப் போட்டிகளையும் விட இப்போட்டி விறுவிறுப்பாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

முதல் பாதி: கிறின்மெக்ஸ் விளையாட்டுக் கழகம் 0 – 0 குளோபல் விளையாட்டுக் கழகம்

இரண்டாவது பாதி ஆட்டத்தின் 67ஆவது நிமிடத்தில் கிறின் மெக்ஸ் அணிக்கு கோணர் கிக் வாய்ப்புக் கிடைத்தது. அதனை எம்.சலா கோணர் திசையிலிருந்து பந்தை உதைத்தபோது யு.எஸ். ஹஸீப் உயர்ந்து தலையால் முட்டி கோல் போட்டார்.

இதன் மூலம் கிறின் மெக்ஸ் விளையாட்டுக் கழகம் 1 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலை அடைந்தது.

கோல் ஒன்றைப் பெற்று போட்டியை சமப்படுத்திவிட வேண்டும் என்று குளோபல் கழக வீரா்கள் முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை.

போட்டியின் 75ஆவது நிமிடத்தில் குளோபல் அணிக்கு மிக இலகுவான கோல் போடும் வாய்ப்பு கிடைத்தது. மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கோல் கம்பத்திற்குள் பந்து சென்றுவிட்டதாகவே கரகோசமிட்டனர். ஆனால் பந்து கம்பத்திற்கு வெளியில் சென்றது.

முழு நேரம்: கிறின்மெக்ஸ் விளையாட்டுக் கழகம் 1 – 0 குளோபல் விளையாட்டுக் கழகம்

இப்போட்டியில் வெற்றி பெற்ற கிறின் மெக்ஸ் விளையாட்டுக் கழகத்தின் பயிற்றுவிப்பாளர் எம்.தாரீக் கருத்து தெரிவிக்கும்போது, ”எமது அணி வீரா்கள் மிகவும் திறமையாக விளையாடினார்கள். எதிரணி வீரா்களின் உத்திகள் சற்று எமக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. நிச்சயம் அரையிறுதிப் போட்டியிலும் நம்பிக்கையுடன் களமிறங்குவோம்” என்றார்.

தோல்வியடைந்த குளோபல் விளையாட்டுக் கழகத்தின் பயிற்றுவிப்பாளர் முஸ்ரிப்  கருத்துத் தெரிவிக்கும்போது, ”இந்தப் போட்டியில் வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவு செய்யப்படுவோம் என்று நம்பியிருந்தோம். பல சந்தர்ப்பங்களில் கோல் போடும் வாய்ப்பை எமது அணி வீரர்கள் தவறவிட்டுள்ளனர். அதனால் இப்போட்டியில் தோல்வியடைந்தோம்” எனக் கூறினார்.

இப்போட்டிக்கு பிரதம மத்தியஸ்தராக முகம்மட் றியாஸ் கடமையாற்றியதுடன் துணை நடுவர்களாக சீ.எம்.அஸ்கர், எஸ்.எம். உபைதீன் செயற்பட்டதுடன் நான்காவது நடுவராக எம். றஸீட் செயற்பட்டார்.

கோல் பெற்றவர்கள்

கிறின் மெக்ஸ் விளையாட்டுக் கழகம் – யு.எஸ். ஹஸீப்

மஞ்சள் அட்டை

குளோபல் விளையாட்டுக் கழகம் – எச்.எம்.றிபாய்டீன் 48’