தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிவரும் இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் கசுன் ராஜித உபாதை காரணமாக முதல் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதுடன், மற்றுமொரு வேகப் பந்துவீச்சாளரான லஹிரு குமார மற்றும் சுழல் பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க ஆகியோரும் உபாதைக்கு முகங்கொடுத்துள்ளனர்.
தென்னாபிரிக்க டெஸ்ட் தொடர் ஆரம்பித்ததில் இருந்து இலங்கை அணி, வீரர்களின் உபாதைகளால் தடுமாறி வருகின்றது. குறிப்பாக, சுரங்க லக்மால் போட்டிக்கு முன்னரே தசைப்பிடிப்பு உபாதை காரணமாக தொடரை தவறவிட்டிருந்ததுடன், அதற்கு முதல் அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் ஓசத பெர்னாண்டோ ஆகியோர் லங்கா ப்ரீமியர் லீக்கில் வைத்து உபாதைக்கு முகங்கொடுத்திருந்தனர்.
முதல்நாள் சரிவிலிருந்து மீண்ட தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி
ஓசத பெர்னாண்டோ லங்கா ப்ரீமியர் லீக்கில் தான் விளையாடிய முதல் போட்டியில் உபாதைக்குள்ளாகிய நிலையில், அஞ்செலோ மெதிவ்ஸ் லங்கா ப்ரீமியர் லீக்கில் அரையிறுதிப் போட்டியில் வைத்து உபாதைக்குள்ளானார். இதில், ஓசத பெர்னாண்டோ மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் அடுத்த போட்டியில் விளையாடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ள போதும், மெதிவ்ஸ் அடுத்த தொடராக இடம்பெறவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறான உபாதைகளுக்கு பின்னர், இலங்கை அணி முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய போதும், அணிக்கு துடுப்பாட்டத்தில் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்த, தனன்ஜய டி சில்வா (79*) தொடை பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக தென்னாபிரிக்க தொடரிலிருந்து நீக்கப்பட்டார்.
இவரின் உபாதையை தொடர்ந்து, நேற்றைய தினம் (27) இலங்கை அணி பந்துவீச ஆரம்பித்திருந்த போது, 2.1 ஓவர்களை மாத்திரம் வீசியிருந்த கசுன் ராஜித இடுப்பின் கீழ் பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக களத்திலிருந்து வெளியேறியிருந்ததுடன், பின்னர், மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனையில், அவர் முதல் போட்டியிலிருந்து வெளியேறுவார் என அறிவிக்கப்பட்டது.
தொடர் உபாதைகள் காரணமாக இலங்கை அணி 2 வீரர்களை இழந்து 9 வீரர்களுடன் தங்களது ஆட்டத்தை தொடரவேண்டிய கட்டாயத்துக்கு முகங்கொடுத்திருந்த நிலையில், இன்றைய தினம் (28) அணியின் மற்றுமொரு வேகப் பந்துவீச்சாளரான லஹிரு குமார இடுப்பின் கீழ் பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக களத்திலிருந்து வெளியேறியதுடன், மீண்டும் பந்துவீச களத்துக்கு வரவில்லை.
லஹிரு குமார வெளியேறிய சில நிமிடங்களில், இலங்கை அணியின் ஒரேயொரு சுழல் பந்துவீச்சாளரான வனிந்து ஹசரங்க பௌண்டரி எல்லையில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த போது, உபாதைக்கு உள்ளானார். இதனால், இலங்கை கிரிக்கெட் அணி முழுமையான ஏமாற்றத்தை சந்தித்திருந்தது. இருப்பினும், வனிந்து ஹசரங்க சிகிச்சைக்கு பின்னர், சில நிமிடங்களில் களம் நுழைந்ததுடன், சிறப்பாக பந்துவீசி மொத்தமாக 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
Video – நேர்த்தியாக பந்துவீசினால் தொன்னப்பிரிக்காவை வீழ்த்தலாம் – Dasun Shanaka
எவ்வாறாயினும், லஹிரு குமார மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோரின் உபாதைகள் தொடர்பிலான முழுமையான தகவல்களை இலங்கை கிரிக்கெட் சபை இதுவரை வெளியிடவில்லை. இந்த இருவரின் உபாதைகள் பாரதூரமானால், இலங்கை அணிக்கு, இதுவொரு மிகப்பெரிய சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை அணியில் தற்போது உபாதை அதிகரித்துவரும் நிலையில், எதிரணியான தென்னாபிரிக்க அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் காகிஸோ ரபாடா, உபாதையிலிருந்து மீண்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமாத்திரமின்றி, இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான குழாத்திலும் இவர் இணைக்கப்பட்டுள்ளார் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<