பாகிஸ்தான் அணிக்கு எதிராக ராவல்பிண்டியில் நிறைவுக்கு வந்த முதலாவது டெஸ்ட் போட்டியின் போது இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளரான கசுன் ராஜித உபாதைக்குள்ளாகியுள்ளார்.
இதன் காரணமாக, எதிர்வரும் 19ஆம் திகதி லாகூரில் ஆரம்பமாகவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகத்திற்கிடமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையால் ஒரு இன்னிங்ஸுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்ட இந்தப் போட்டியில் கசுன் ராஜித கால் தசை உபாதைக்கு முகங்கொடுத்தார்.
எனினும், குறித்த போட்டியில் இலங்கை அணிக்காக ஆரம்ப பந்துவீச்சாளராக களமிறங்கிய அவர், இறுதி நாளான நேற்று (15) தொடர்ந்து 6 ஓவர்கள் பந்துவீசி 2 ஓட்டமற்ற ஓவர்களுடன் 5 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். அதன்பிறகு அவர் பந்துவீச வரவில்லை.
இதுதொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் அசந்த டி மெல் கருத்து தெரிவிக்கையில், ”அடுத்த டெஸ்ட் போட்டியில் கசுன் ராஜித விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அவர் விரைவில் இலங்கைக்கு புறப்பட்டுச் செல்வார்” என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கசுன் ராஜிதவுக்குப் பதிலாக மாற்று வீரராக யாரை களமிறக்குவது என்பது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை என தெரிவித்த அசந்த டி மெல், அதுதொடர்பில் அடுத்துவரும் நாட்களில் அறிவிக்கப்படும் என குறிப்பிட்டார்.
ஏற்கனவே, இந்தத் தொடருக்காக பெயரிடப்பட்டிருந்த சுரங்க லக்மாலுக்கு டெங்குக் காய்ச்சல் ஏற்பட்டமையினால், அவரது இடத்திற்கு இளம் வேகப்பந்து வீச்சாளர் அசித்த பெர்னாண்டோ இணைக்கப்பட்டார்.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2ஆவதும், இறுதிமான டெஸ்ட் போட்டி எதிர்வரும் 19ஆம் திகதி வியாழக்கிழமை லாகூரில் நடைபெறவுள்ளது.