தனது பொறுப்புக்கள் தொடர்பில் தெளிவாக இருக்கும் திமுத் கருணாரத்ன

730
Getty Images

முதல் 10 ஓவர்களுக்குள் சிறந்த துடுப்பாட்ட ஆரம்பத்தை பெறுவதும், வீரர்களை ஒன்றிணைப்பதுமே அடுத்த ஏழு வாரங்களுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவரான திமுத் கருணாரத்னவின் இரண்டு முக்கிய பொறுப்புக்களாக இருக்கின்றன.

திமுத் கருணாரத்னவின் போராட்டம் வீண்; பயிற்சிப் போட்டியில் இலங்கை தோல்வி

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க… 

உலகக் கிண்ணத் தொடரில் கடந்த வெள்ளிக்கிழமை (24) தமது முதல் பயிற்சிப் போட்டியில் விளையாடிய இலங்கை அணி, தென்னாபிரிக்க அணியிடம் 87 ஓட்டங்களால் தோல்வியினை தழுவியிருந்தது.

இந்த பயிற்சி போட்டியில் தோல்வியினை தழுவிய போதிலும் அதில் கிடைத்த அனுபவம் நியூசிலாந்து அணிக்கு எதிராக கார்டிப் நகரில் இடம்பெறவுள்ள உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் இலங்கை செய்ய வேண்டிய விடயங்கள் என்ன என்பதை உணர்த்தியிருந்ததாக திமுத் கருணாரத்ன குறிப்பிட்டிருந்தார்.

“தேர்வாளர்களுக்கு மிக நீண்ட நேரம் துடுப்பாட வேண்டிய வீரர் ஒருவர் தேவையாக இருந்தார். அவர்கள் என்னை முதல் 10 ஓவர்களுக்கும் நல்ல முறையில் துடுப்பாடுமாறு பணித்தனர். இதனால், நல்ல உத்வேகம் ஒன்றை உருவாக்கி ஏனைய விடயங்களை திசர (பெரேரா) மற்றும் அவர் போன்ற வீரர்களுக்கு கொடுப்பது எதிர்பார்ப்பாக இருந்தது. இதுதான் அவர்கள் என்னிடம் சொல்லிய விடயம். டெஸ்ட் போட்டிகளில் நீங்கள் என்ன செய்வீர்களோ அதையே இங்கேயும் செய்யுங்கள்.”

தேர்வாளர்கள் சொன்னதன்படியே திமுத் கருணாரத்னவும் நடந்திருக்கின்றார். லுன்கி ன்கிடி மற்றும் ககிஸோ றபாடா போன்ற திறமைமிக்க பந்துவீச்சாளர்களை கொண்ட தென்னாபிரிக்க அணிக்கு எதிராக கருணாரத்ன 92 பந்துகளில் 87 ஓட்டங்களை குவித்திருந்ததோடு, குறித்த போட்டியில் 10 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து காணப்பட்டிருந்த இலங்கை அணியினையும் சரிவிலிருந்து மீட்டிருந்தார். இதேநேரம், தென்னாபிரிக்க அணியுடனான பயிற்சிப் போட்டியில் திமுத் கருணாரத்ன முதல் 20 ஓவர்களுக்குள் தனது விக்கெட்டினை பறிகொடுக்காமல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

“நாம் சிறப்பாக சரிவிலிருந்து மீண்டோம்.” எனத் தெரிவித்த திமுத் கருணாரத்ன. “துரதிஷ்டவசமாக (போட்டியின்) மத்திய ஓவர்களில் விக்கெட்டுகளை மீண்டும் பறிகொடுத்தோம்.” எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கை அணி, தென்னாபிரிக்க அணியுடனான பயிற்சிப் போட்டியில் ஒரு கட்டத்தில் 199 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து காணப்பட்டிருந்தது. பின்னர், தமது எஞ்சிய 6 விக்கெட்டுகளையும் 52 ஓட்டங்களுக்குள் பறிகொடுத்த இலங்கை அணி 251 ஓட்டங்களை மட்டுமே பெற்று, 87 ஓட்டங்களால் தோல்வியினை தழுவியது.

திமுத் கருணாரத்னவிற்கு தென்னாபிரிக்க அணியுடனான பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி சரிவிலிருந்து மீண்டது மகிழ்ச்சி தந்த போதிலும், துடுப்பாட்டத்திற்கு சாதகமாக இருந்த மைதானத்தில் இலங்கை வீரர்கள் இன்னும் போராட்டத்தை காண்பித்திருக்க தவறியிருந்தது கவலை தந்திருந்தது.

“போட்டியின் ஆரம்பத்தில் அவர்கள் நல்ல முறையில் பந்துவீசியிருந்தனர்.  சில இடங்களில் மிகவும் நன்றாக இருந்தது. அந்த நேரத்தில் நாம் அவர்களை அனுமானித்து, இலகுவான பந்துகளுக்காக காத்திருக்க வேண்டும். பந்து இலகுவாக மாறும் தருணத்தில், துடுப்பாட இலகுவாக இருக்கும், அதன்படி பந்து இலகுவாகும் சந்தர்ப்பத்தில் ஓட்டங்கள் பெற முடியும் என எதிர்பார்த்திருந்தோம்.”

இதேநேரம், தென்னாபிரிக்க அணியுடனான பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைய மற்றுமொரு காரணமாக அமைந்தது தென்னாபிரிக்க அணி நிர்ணயம் செய்த போட்டியின் வெற்றி இலக்காகும்.

இசுரு உதான மற்றும் அவிஷ்கவின் உபாதை குறித்து திமுத் கருணாரத்ன

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நேற்று (24)…

போட்டியில் முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்க அணிக்காக ஹஷிம் அம்லா மற்றும் பாப் டு ப்ளேசிஸ் ஜோடி சிறந்த ஆரம்பத்தை கொடுத்த பின்னர், பின்வரிசையில் ஆடிய அன்டைல் பெஹ்லுக்வேயோ, கிறிஸ் மொர்ரிஸ் போன்றோரும் அதிரடியான துடுப்பாட்டம் மூலம் ஓட்டங்களை அதிகரித்தனர். இதனால், இலங்கை அணிக்கு போட்டியின் வெற்றி இலக்காக 339 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது. லசித் மாலிங்கவின் வருகைக்கு பின்னர் இவ்வாறாக எதிரணி ஓட்டங்கள் பெறுவது கட்டுப்படுத்தப்படும் என திமுத் கருணாரத்ன குறிப்பிட்டார்.

“எங்களுக்காக லசித் வர இருக்கின்றார். அவர் டெத் ஓவர்கள் என அழைக்கப்படும் போட்டியின் பிற்பகுதி ஓவர்களில் சிறப்பாக பந்துவீசக்கூடியவர்.”

“நாம் ஜீவன் (மெண்டிஸ்), ஜெப்ரி (வன்டர்செய்) ஆகியோருக்கும் வலதுகை துடுப்பாட்ட வீரர்களுக்கு எதிராக பந்துவீச வழங்கியிருந்தோம். அது இலகுவான விடயம் அல்ல. இதேமாதிரியாகவே நாம் டெத் ஓவர்களில் பந்துவீச வேண்டும், இல்லை எனில், வரும் நாட்களில் நாம் வேறு வித்தியாசமான விடயங்களை சிந்திக்க வேண்டும்.”

இதுமட்டுமில்லாது இலங்கை அணிக்குள் ஒற்றுமையினை ஏற்படுத்துவது தொடர்பிலும் திமுத் கருணாரத்ன, தனது கருத்துக்களை பதிவு செய்திருந்தார்.

“அவர்கள் (தேர்வாளர்கள்) என்னிடம் அணியினை ஒன்றினைத்து வைப்பதினை வலியுறுத்தியிருந்தனர்.  நீங்கள் உலகக் கிண்ணம் ஒன்றை விளையாடும் போது அது இலகுவான விடயம் கிடையாது. ஒன்பது போட்டிகள் இருக்கின்றன. அனைத்து போட்டிகளிலும் நீங்கள் அணியினை உறுதியாக வைத்திருக்க வேண்டும். இதுவே தேர்வாளர்கள் என்னிடம் இருந்து எதிர்பார்ப்பது.”

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<