சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார் கரீம் பென்சமா

554
Karim Benzema

உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணியில் இடம்பெறத் தவறிய கரீம் பென்சமா சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ஆடுவதற்கு பென்சமா கட்டார் வந்தபோதும் உபாதை காரணமாக போட்டிக்கு முன்னரே நாடு திரும்பினார். எனினும் ரியல் மெட்ரிட் அணியின் நட்புறவு போட்டியில் ஆடிய அவர் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியில் இணைவார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

>> நடப்புச் சம்பியனை வீழ்த்தி மெஸ்ஸியின் ஆர்ஜன்டீனாவுக்கு உலகக் கிண்ணம்

எனினும் முகாமையாளர் டிடீர் டெசம்ப்ஸ் உடன் கருத்து முரண்பாடு ஏற்பட்ட நிலையில் மீண்டும் கட்டார் திரும்பும் வாய்ப்பை அவர் நிராகரித்ததாக செய்திகள் வெளியாகின. இந்நிலையிலேயே அவர் சமூக ஊடகத்தின் வழியாக சர்வதேச போட்டிகளில் இருந்து விடைபெறும் முடிவை வெளியிட்டுள்ளார்.

“இன்று நான் இருக்கும் இடத்திற்கு வருவதற்கு முயற்சியுடன் தவறுகளையும் செய்திருக்கிறேன் அதற்காக நான் பெருமைப்படுகிறேன். நான் எனது கதையை எழுதிவிட்டேன். எனது கதை முடிந்துவிட்டது” என்று பென்சமா திங்கட்கிழமை (19) இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார்.

உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி ஆர்ஜன்டீனாவிடம் தோல்வியை சந்தித்து 24 மணி நேரத்திற்குள்ளேயே பென்சமா இந்த அதிர்ச்சி அறிவிப்பை விடுத்துள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவேல் மக்ரோன் தனது தனிப்பட்ட விமானத்தில் இறுதிப் போட்டிக்கு பென்சமாவை அழைத்துச் செல்லும் அழைப்பையும் அவர் நிராகரித்ததாக செய்தி வெளியானது.

>> உலகக் கிண்ண வெற்றியுடன் தனது முடிவை மாற்றிய மெஸ்ஸி

இதில் பென்சமா தனக்கு ஆர்வம் இல்லை என்று செய்தி அனுப்பியதன் மூலம் அவர் அணிக்கு மீண்டும் திரும்புவது பற்றி பெரும் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. எனினும் அவர் சக அணியினருக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.

முகாமையாளர் டெசம்ப்ஸ் தனது எதிர்காலம் பற்றி பிரெஞ்ச் கால்பந்து சம்மேளனத்துடன் புத்தாண்டில் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார். அந்தப் பேச்சுவார்த்தை எவ்வாறு அமைந்தபோதும் பென்சமா தனது எதிர்காலம் பற்றிய முடிவை அதிரடியாக வெளியிட்டுள்ளார்.

பிரான்ஸ் தேசிய அணிக்காக 97 போட்டிகளில் ஆடியிருக்கும் 35 வயதான பென்சமா 37 கோல்களை பெற்றுள்ளார். 15 ஆண்டுகளுக்கு முன்னர் பிரான்ஸ் தேசிய அணிக்கு அறிமுகமான பென்சமாவின் பயணம் சுமூகமானதாக இருக்கவில்லை.

2007ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது முதல் போட்டியில் ஆடிய பென்சமா இரண்டாவது பாதியில் பதில் வீரராக வந்து கோல் புகுத்தி இருந்தார்.

எனினும் 2008 யூரோ கிண்ணத்திற்காக பிரான்ஸ் அணியில் சேர்க்கப்பட்டபோதும் அவரது ஆட்டத்திறமை பற்றி கடும் விமர்சனம் எழுந்தது.

உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் தொடர்ந்து அணியில் இடம்பெற்றபோதும் 2010 உலகக் கிண்ணத்திற்கான பிரான்ஸ் குழாத்தில் இருந்து பென்சமா நீக்கப்பட்டார். அப்போது அவர் பாலியல் சர்ச்சை ஒன்றில் சிக்கி இருந்தபோதும், ரியல் மெட்ரிட் அணியில் அவர் சோபிக்காத நிலையிலேயே அணியில் சேர்க்கப்படவில்லை என்று பயிற்சியாளர் ரய்மன்ட் டொமனெச் குறிப்பிட்டார்.

>> குர்பாஸ், அவிஷ்கவின் சாதனை இணைப்பாட்டத்துடன் ஜப்னாவுக்கு வெற்றி

பென்சமா 2012 யூரோ மற்றும் 2014 உலகக் கிண்ண போட்டிகளில் ஆடியபோதும், சக பிரான்ஸ் வீரர் மத்தியு வல்புனோவுடன் தொடர்புபட்ட பாலியல் வீடியோ மிரட்டல் விவகாரத்தில் சிக்கியதால் அவரால் ஐந்து ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் இடம்பெற முடியாமல் போனது. குறிப்பாக 2018 இல் உலகக் கிண்ணத்தை வென்ற பிரான்ஸ் அணியிலும் அவர் இடம்பெறவில்லை.

2020 யூரோ தொடரிலேயே அவர் மீண்டும் பிரான்ஸ் அணிக்குத் திரும்பினார். மொத்தம் நான்கு கோல்களைப் பெற்ற அவர் தொடரில் மூன்றாவது அதிக கோல்களை பெற்றவராகப் பதிவானார்.

UEFA தேசிய லீக் இறுதியில் அபார திறமையை வெளிப்படுத்திய பென்சமா, தேசிய அணிக்காக முதல் கிண்ணத்தை வென்றார்.

தொடர்ந்து சம்பியன்ஸ் லீக் மற்றும் சிறந்த கால்பந்து வீரருக்கான பலொன் டியோர் விருதுகளை வென்ற பென்சமாக பிரான்ஸ் அணியின் தவிர்க்க முடியாத முன்கள வீரராக இடம்பெற்றபோதும் உபாதையால் அவருக்கு உலகக் கிண்ணத்தில் ஆட முடியாமல்போனது.

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<