தன்மீது சுமத்தப்பட்ட சூதாட்டப் புகாரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் டனிஷ் கனேரியா ஒப்புக்கொண்டுள்ளார்.
கடந்த ஆறு வருடங்களாக தன் மீது இருந்த குற்றச்சாட்டை மறுத்து வந்த கனேரியா, தற்போது தன் மீதான குற்றச்சாட்டுகளை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளதுடன், நீண்ட நாட்கள் பொய்யோடு வாழ முடியாது என கூறி, தன் தவறை மன்னிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், தனது தந்தைக்காகக் குற்றத்தை மறைத்துவந்ததாகவும் அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
பயிற்றுவிப்பாளராகும் கனவுடன் பயிற்சிப் பாடநெறிகளை முன்னெடுக்கும் இலங்கை வீரர்கள்
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பயிற்சியாளர் …
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் டனிஷ் கனேரியா, இங்கிலாந்தின் பிராந்திய அணியான எசெக்ஸ் அணிக்கு விளையாடியபோது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
விசாரணையில் இது உறுதியானதையடுத்து அவருக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை ஆயுள் காலத் தடை விதித்தது. ஆனால் கனேரியா, தான் தவறுசெய்யவில்லை. என் மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது என்று கூறி வந்தார்.
அனு பட் என்ற இந்திய தொழிலதிபர் 2007ஆம் ஆண்டில் பாகிஸ்தான் வீரர்கள் சிலரை அழைத்து விருந்து வைத்து விலை உயர்ந்த பரிசுகளை வழங்கினார். இதையடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மேர்வின் வெஸ்ட்பீல்டை, அனு பட்டிற்கு கனேரியா அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த நிலையில் 2009ஆம் ஆண்டு டர்ஹம் அணிக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரில் 12 ஓட்டங்கள் கொடுத்தால் 6000 பவுண்டுகள் கொடுப்பதாக அணு பட், வெஸ்ட்பீல்டிடம் கூறியுள்ளார். அதை ஒப்புக்கொண்ட வெஸ்ட்பீல்ட் முதல் ஓவரில் 10 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்தார். எனினும், அந்த பணத்தை அவர் பெற்றுக் கொண்டார்.
பாகிஸ்தானின் வெற்றியை பறித்த உஸ்மான் கவாஜாவின் துடுப்பாட்டம்
விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த பாகிஸ்தான் மற்றும் …
இந்த விவகாரத்தை கண்டுபிடித்த இங்கிலாந்து கிரிக்கெட் சபை மேர்வினுக்கு ஐந்து ஆண்டுகள் தடை விதித்ததோடு, குற்றத்தை ஓப்புக்கொண்ட அவர் இரண்டு மாத சிறை தண்டனையும் பெற்றார். டனிஷ் கனேரியா செய்த குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் அவருக்கு இங்கிலாந்து கிரிக்கெட் சபை தடை மட்டும் விதித்தது. எனினும், அவருடன் கைதான கனேரியா தன் தவறை ஒப்புக்கொள்ளாததால் அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது.
இதுஇவ்வாறிருக்க, சுமார் 6 வருடங்களுக்குப் பிறகு அந்த குற்றச்சாட்டை கனேரியா ஒப்புக்கொண்டுள்ளார். அல் – ஜெஸீரா தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், ”ஆம், கவுண்டி போட்டியில் சூதாட்டம் நடைபெற்றது உண்மை தான். எனது வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு. இந்த தவற்றுக்காக ஆழ் மனதிலிருந்து மன்னிப்பு கேட்கிறேன். அந்த நேரத்தில் நான் ஒரு சர்வதேச வீரராக இருந்தேன், நான் மிகவும் வசதியான வாழ்க்கை வாழ்ந்தேன். அதேவேளையில் கவுண்டி அணி மூலமாக அதிக பணம் சம்பாதிக்கும் வீரராகவும் இருந்தேன்.
நான்தான் அனு பட்டிடம் வெஸ்ட்பீல்டை அறிமுகம் செய்து வைத்தேன். அனுவின் ஆசை வார்த்தை காரணமாக, சூதாட்டத்தில் ஈடுபட அவர் ஒப்புக்கொண்டார். அனு பட் குறித்து நான் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையிடம் தெரிவிக்காமல் இருந்து விட்டேன்.
என் தந்தைக்காகவே இத்தனை நாள் குற்றத்தை மறுத்துவந்தேன். சூதாட்ட குற்றச்சாட்டு எழுந்தபோது அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவர் தான் ரோல் மொடல். பாகிஸ்தான் அணிக்காக விளையாடியதை நினைத்து அவர் எப்போதும் பெருமை கொள்வார். அவரை ஏமாற்ற விரும்பவில்லை.
அதனால் குற்றத்தை மறைத்துவந்தேன். ஆனால் பொய்களுடன் நீண்ட நாள் வாழமுடியாது என்பதைப் புரிந்துகொண்டேன். மேலும் உண்மையைச் சொல்லும் வலிமை இப்போது எனக்கு வந்துவிட்டது. இதற்காக மக்கள், ரசிகர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள். கிரிக்கெட் எனக்கு நிறையக் கொடுத்துள்ளது. இப்போது நான் கிரிக்கெட்டுக்கு ஏதாவது திருப்பி செய்ய வேண்டும். பாகிஸ்தான் கிரிக்கெட் சபையும், ஐசிசியும் எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தால் இளம் வீரர்களுக்கு எனது அனுபவத்தைப் பெற்றுக்கொடுக்க தயாராக இருக்கிறேன்‘ என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் வெற்றிகரமான சுழற்பந்துவீச்சாளராக விளங்கிய 37 வயதுடைய கனேரியா, அந்த அணிக்காக 2010ஆம் ஆண்டு ட்ரென்ட் பிரிட்ஜில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார். அத்துடன் 2012ஆம் ஆண்டு இறுதியாக முதல்தரப் போட்டிகளில் அவர் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி, 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 261 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள கனேரியா, 19 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். அத்துடன், 2000 முதல் 2010 வரையான காலப்பகுதியில் பாகிஸ்தான் அணிக்காக அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரராகவும் அவர் இடம்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…