காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் இந்தியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து நியூசிலாந்து அணியின் சிரேஷ்ட வீரரான கேன் வில்லியம்சன் விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், புனேவில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டியில் 113 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் நியூசிலாந்து அணி வெற்றியீட்டி 2க்கு 0 என டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.
இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நவம்பர் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இதனிடையே, இந்தியாவுடனான 3ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து நியூசிலாhந்து அணியின் சிரேஷ்ட வீரரான கேன் வில்லியம்சன் விலகியுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது கேன் வில்லியம்சனுக்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதில் இருந்து அவர், முழுமையாக குணமடையாததால் இந்தியாவுடனான முதலிரெண்டு டெஸ்ட் போட்டிகளையும் தவறவிட்டார். இதன் காரணமாக முதலிரண்டு டெஸ்ட் போட்டிக்கான நியூசிலாந்து அணியின் இறுதிப் பதினொருவரில் வில் யங் சேர்க்கப்பட்டிருந்தார்.
- இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வில்லியம்சனை இழக்கும் நியூசிலாந்து
- முதற் தடவையாக முதல் 10 இடங்களுக்குள் கமிந்து மெண்டிஸ்
- டேவிட் வோர்னருக்கு எதிரான தடையை நீக்கிய அவுஸ்திரேலியா
இந்த நிலையில், காயம் முழுமையாக குணமடையாததால் கேன் வில்லியம்சன் இந்தியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என நியூசிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. 3ஆவது டெஸ்ட் போட்டியிலாவது கேன் வில்லியம்சன் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இப்போட்டியில் இருந்தும் அவர் விலகியுள்ளது அணிக்கு பின்னடவைவாகவே பார்க்கப்படுகிறது.
இருப்பினும், அவர் எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் நியூசிலாந்து அணிக்கு திரும்புவார் என அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டீட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இலங்கையுடனான டெஸ்ட் தொடரை அடுத்து மேலதிக சிகிச்சைகளுக்காக நியூசிலாந்துக்குச் சென்ற அவர், இன்னும் சிகிச்சைக்கான வழிமுறைகளை தொடர்வதாகவும் அவரது உடற்தகுதி கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், காயத்தில் இருந்து ஓரளவு குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கிலாந்து அணிக்கு எதிராக நவம்பர் 28ஆம் திகதி சொந்த மண்ணில் ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் தொடரில் கேன் வில்லியம்சன் விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் நியூசிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<