இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் சென்னை சுபர் கிங்ஸ் அணிக்கெதிரான முதல் லீக் போட்டியில் ஏற்பட்ட உபாதையினால் IPL தொடரிலிருந்து விலகிய நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரையும் தவறவிடுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
IPL தொடரின் 16ஆவது அத்தியாயம் கடந்த மார்ச் 31ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில், சென்னை சுபர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் முதல் போட்டியில் விளையாடின.
இந்தப்போட்டியின் போது பௌண்டரி எல்லையில் நின்று பந்தை தடுக்க முயற்சித்த கேன் வில்லியம்சன் மூழங்கால் உபாதைக்குள்ளாகியதுடன், அவர் உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேறியிருந்தார்.
இதனையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் கேன் வில்லியம்சன் குணமடைய எவ்வளவு காலம் ஆகலாம் என்று தற்போது எதுவும் சொல்ல இயலாது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதன் காரணமாக IPL தொடரில் இருந்து முழுமையாக விலகி அவர் நியூசிலாந்து சென்றார். தொடர்ந்து அவருக்குப் பதிலாக தசுன் ஷானகவை குஜராத் டைட்டன்ஸ் அணி அடிப்படை தொகையாக 20 இலட்சத்திற்கு ஒப்பந்தம் செய்தது.
இதனிடையே, நியூசிலாந்து சென்றபோது கேன் வில்லியம்சனுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், கேன் வில்லியம்சனின் வலது முழங்காலில் உள்ள முன்பக்க தசைநார் கிழிந்ததால், விரைவில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த காயம் காரணமாக கேன் வில்லியம்சன் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக நியூசிலாந்து அணி முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, நியூசிலாந்து பயிற்சியாளர் கேரி ஸ்டேட் தெரிவிக்கையில், ‘கேன் வில்லியம்சன் எதிர்வரும் ஒக்டோபரில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் விளையாட வாய்ப்பில்லை’ என்றார்.
இந்த நிலையில் தனது காயம் தொடர்பில் கேன் வில்லியம்சன் கருத்து தெரிவிக்கையில், ‘இயற்கையாகவே இதுபோன்ற காயம் ஏற்படுவது சகஜம்தான். இந்த நேரத்தில் எனக்கு காயம் ஏற்பட்டது ஏமாற்றமளிக்கிறது. ஆனால், காயத்திலிருந்து குணமடைந்து மீண்டு வருவதே சிறந்த முடிவு. என்ன காயம் குணமடைய இன்னும் சிறிது காலம் எடுக்கும். ஆனால் விரைவில் கிரிக்கெட் ஆட என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்’ என்று தெரிவித்தார்.
இம்முறை ஒருநாள் உலகக் கிண்ணத்தில் கேன் வில்லியம்சன் இல்லாதது நியூசிலாந்து அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும். இவரது தலைமையிலான நியூசிலாந்து அணி இதுவரை உலகக் கிண்ணத்தை வெல்லவில்லை என்றாலும், சிறப்பாகவே செயல்பட்டது. இறுதியாக, கடந்த 2015 மற்றும் 2019ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர்களில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி இறுதிப்போட்டி வரை சென்று இரண்டாம் இடம் பிடித்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<