பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் தொடரில், நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் விளையாடமாட்டார் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கேன் வில்லியம்சனின் இடது முழங்கையில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக, பங்களாதேஷ் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், உபாதை குணமடைவதற்காக அவருக்கு ஓய்வுக்காலம் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்காவை இலகுவாக வீழ்த்திய இலங்கை லெஜன்ட்ஸ்
கேன் வில்லியம்சன் இந்த பருவகாலம் முழுவதும் முழங்கை உபாதையை எதிர்கொண்டுவந்த போதிலும், குறித்த உபாதை குணமடைவதில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை. எனவே, அவருக்கு உபாதை குணமடைவதற்கான ஓய்வு வழங்கப்படவுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில், நியூசிலாந்து கிரிக்கெட் சபையின் மருத்துவ முகாமையாளர் டேல் செக்கல் குறிப்பிடுகையில், “கேன் வில்லியம்சன் இந்த பருவகாலம் முழுவதும் முழங்கை உபாதையால் அவதிப்பட்டுவந்தார். துரதிஷ்டவசமாக அவரது உபாதையில், எந்தவித முன்னேற்றங்களும் இல்லை.
எமது அனைத்துவகையான போட்டிகள் மற்றும் உயர்தர பயிற்சிகளில் வில்லியம்சன் ஈடுபட்டு வருகின்றார். இதன் காரணமாக அவருக்கு உபாதையிலிருந்து மீள்வதற்கான நேரம் கிடைக்கவில்லை. எனவே, இம்முறை அவருக்கு ஓய்வளித்து, உபாதையிலிருந்து மீளுவதற்கான நேரத்தை வழங்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
அணித்தலைவர் மற்றும் துடுப்பாட்ட வீரர் என்ற ரீதியில், கேன் வில்லியம்சனை இந்த தொடரிலிருந்து வெளியேற்றுவது மிகவும் கடினமான முடிவு. எனினும், இந்த ஆண்டு அதிகமான போட்டிகள் உள்ளதால் இது தவிர்க்கமுடியாத விடயமாக மாறியுள்ளது. அதுமாத்திரமின்றி நியூசிலாந்து அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதேநேரம், ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி ஜூலை மாதம் நடைபெறவுள்ளது.
மேற்குறித்த தொடர்களுக்கு முன்னணி துடுப்பாட்ட வீரர் மற்றும் தலைவர் கேன் வில்லியம்சன் இல்லாமல் களமிறங்குவது எதிர்பார்க்கமுடியாத விடயம். எனவே, தற்போது அவருக்கு ஓய்வு வழங்குவது சரியான விடயம் என நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் கெரி ஸ்டீட் தெரிவித்துள்ளார்.
“கேன் வில்லியம்சன் தனது நாட்டுக்காக விளையாடுவதை விரும்புபவர். அப்படி இருக்கும் போது, அவரை அணியிலிருந்து வெளியேற்றுவது கடினமான விடயம். துடுப்பாட்ட வீரர் ஒருவரின் முழங்கை உபாதை என்பது மிகவும் முக்கியமான விடயம். இந்த உபாதை குணமடையாமல் நீடிக்கிறது என்றால், அதற்கான சரியான தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டும். ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் என்பன உள்ளன. எனவே, வில்லியம்சன் அதற்கு தயாராக இருக்கவேண்டும் என நினைக்கிறேன்” என கெரி ஸ்டீட் குறிப்பிட்டார்.
நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் எதிர்வரும் 20ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<