ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குறிப்பிட்ட நேரத்தில் பந்துவீசாததால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவர் கேன் வில்லியம்சனுக்கு 12 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
புணேவில் நேற்று நடைபெற்ற IPL தொடரின் 5ஆவது போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 210 ஓட்டங்களைக் குவித்தது.
பின்னர் 211 என்ற இமாலய ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 149 ஓட்டங்கள் எடுத்து 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த நிலையில், குறித்த போட்டியில் 20 ஓவர்களை வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் சன்ரைசர்ஸ் அணித் தலைவர் கேன் வில்லியம்சனுக்கு 12 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற டெல்லி கெபிடல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்ட குற்றத்திற்காக மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோஹித் சர்மாவுக்கும் 12 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<