மஹேலவின் சாதனையை முறியடித்த வில்லியம்சன்

2008
©AFP

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி தற்சமயம் லண்டன் லோட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து மற்றும் கேன் வில்லியம்சஸ் தமையிலான நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்று வருகிறது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது. அதன் பிரகாரம் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 

இலங்கை வீரர்களின் சாதனையை முறியடித்த ஜேசன் ரோய் – பெயர்ஸ்டோ

தற்சமயம் நடைபெற்றுவரும் 12ஆவது ஐ.சி.சி உலகக் கிண்ண தொடரில் பல சாதனைகள் முறியடிக்கப்பட்டு புதிய சாதனைகள்…

இப்போட்டியில் நியூஸிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் கேன் வில்லியம்சன் 30 ஓட்டங்களை பெற்ற வேளையில் லியம் பிளன்கெட்டின் பந்துவீச்சில் பிடியெடுப்பு முறையில் ஆட்டமிழந்தார். இருந்தாலும் இன்றைய போட்டியில் கேன் வில்லியம்சன் உலகக்கிண்ண சாதனை ஒன்றை முறியடித்து ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாக மாறியுள்ளது.

இன்றைய போட்டியில் கேன் வில்லியம்சன் ஒரு ஓட்டத்தை கடந்த போது உலகக்கிண்ண வரலாற்றில் அணித்தலைவராக புதிய சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார். அணித்தலைவராக கடமையாற்றிய ஒரு உலகக்கிண்ண தொடரில் அதிக ஓட்டங்களை குவித்த அணித்தலைவர் எனும் பெருமையை தன்வசம் வைத்திருந்த இலங்கையின் மஹேல ஜெயவர்த்தனவின் 12 ஆண்டுகால சாதனையை கேன் வில்லியம்சன் இன்று முறியடித்துள்ளார். 

கடந்த 2007ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் போது இலங்கை அணியின் தலைவராக மஹேல ஜெயவர்த்தன செயற்பட்டார். இறுதிப்போட்டி வரை சென்ற இலங்கை அணி அவுஸ்திரேலிய அணியிடம் தோல்வியை தழுவியது. 

குறித்த தொடரில் இலங்கை அணியின் தலைவராக செயற்பட்ட மஹேல ஜெயவர்த்தன 11 போட்டிகளில் விளையாடி ஒரு சதம், நான்கு அரைச்சதங்களுடன் மொத்தமாக 548 ஓட்டங்களை குவித்து, அவுஸ்திரேலிய வீரர் மெத்யூ ஹெய்டனுக்கு அடுத்தாக தொடரில் அதிக ஓட்டங்களை குவித்தவர் வரிசையில் இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்டார். மஹேல ஜெயவர்த்தனவினால் குவிக்கப்பட்ட 548 ஓட்டங்களும் அணித்தலைவர் என்ற ரீதியில் பெறப்பட்டதாகும். 

மேலும் அதே தொடரில் அவுஸ்திரேலிய அணியின் தலைவராக செயற்பட்ட ரிக்கி பொன்டிங் 539 ஓட்டங்களை பெற்று நேற்று வரையில் இரண்டாமிடத்தை பெற்றிருந்தார். இந்நிலையில் இன்றைய உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் 30 ஓட்டங்களை பெற்று குறித்த சாதனையை முறியடித்துள்ளார் கேன் வில்லியம்சன்.

உலகக் கிண்ணத்தை உலுக்கிய ஆர்ச்சரின் டுவீட்டுகள்

சர்வதேச கிரிக்கெட்டை பொருத்தவரையில் உலகக் கிண்ணத் தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து அணியின் வேகப்…

ஒரு உலகக்கிண்ணத் தொடரில் அதிக ஓட்டங்களை குவித்த அணித்தலைவர்கள்

  • கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து) – 578 ஓட்டங்கள் (2019)
  • மஹேல ஜெயவர்த்தன (இலங்கை) – 548 ஓட்டங்கள் (2007)
  • ரிக்கி பொன்டிங் (அவுஸ்திரேலியா) – 539 ஓட்டங்கள் (2007)
  • எரோன் பிஞ்ச் (அவுஸ்திரேலியா) – 507 ஓட்டங்கள் (2019)
  • ஏபி. டி வில்லியர்ஸ் (தென்னாபிரிக்கா) – 482 ஓட்டங்கள் (2015)

இதேவேளை உலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இதுவரையில் நான்கு அணித்தலைவர்கள் மாத்திரமே 500 ஓட்டங்களுக்கு மேல் கடந்துள்ளனர். இதில் இவ்வருடம் இரண்டு அணித்தலைவர்கள் 500 ஓட்டங்களை கடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

2019 உலகக்கிண்ண தொடரில் அணித்தலைவர்கள் பெற்ற ஓட்டங்கள் பட்டியல் (இயன் மோர்கனின் இன்றைய துடுப்பாட்டம் உள்ளடக்கப்படவில்லை)

  • கேன் வில்லியம்சன் (நியூஸிலாந்து) – 578 ஓட்டங்கள்
  • எரோன் பிஞ்ச் (அவுஸ்திரேலியா) – 507 ஓட்டங்கள்
  • விராட் கோஹ்லி (இந்தியா) – 443 ஓட்டங்கள்
  • பெப் டு ப்ளெஸிஸ் (தென்னாபிரிக்கா) – 387 ஓட்டங்கள்
  • இயன் மோர்கன் (இங்கிலாந்து) – 362 ஓட்டங்கள்
  • திமுத் கருணாரத்ன (இலங்கை) – 222 ஓட்டங்கள்
  • குல்பதின் நயீப் (ஆப்கானிஸ்தான்) – 194 ஓட்டங்கள், 9 விக்கெட்டுக்கள்
  • ஜேசன் ஹோல்டர் (மேற்கிந்திய தீவுகள்) – 170 ஓட்டங்கள், 8 விக்கெட்டுக்கள்
  • சர்ப்ராஸ் அஹமட் (பாகிஸ்தான்) – 143 ஓட்டங்கள்
  • மஸ்ரபீ மொர்டஸா (பங்களாதேஷ்) – 34 ஓட்டங்கள், ஒரு விக்கெட்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<