விராட் கோலி, ஸ்மித் ஆகியோரினை பின்தள்ளிய கேன் வில்லியம்சன்

219
AFP via Getty Images

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) புதிதாக வெளியிட்டுள்ள டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் முதலிடத்தினைப் பெற்று உலகின் முதல்நிலை டெஸ்ட் துடுப்பாட்டவீரராக மாறியிருக்கின்றார். 

இங்கிலாந்து தொடரையடுத்து இலங்கை வீரர்களுக்கு வருடாந்த ஒப்பந்தம்

நேற்று (30) நியூசிலாந்தின் தோரங்கா நகரில் நிறைவுக்கு வந்த பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் ஆட்டநாயகன் விருதினை வென்ற கேன் வில்லியம்சன் குறித்த போட்டியினை அடுத்து ஐ.சி.சி. இன் புதிய டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசைக்காக 13 புள்ளிகளை எடுத்திருந்தார். 

இந்தப் புள்ளிகளின் துணையுடனேயே வில்லியம்சனுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் விராட் கோலி, அவுஸ்திரேலிய வீரர் ஸ்டிவ் ஸ்மித் ஆகியோரினை பின்தள்ளி ஐ.சி.சி. இன் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் முதலிடம் பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. தற்போது கேன் வில்லியம்சன் 890 புள்ளிகளுடன் காணப்படுகின்றார். 

அதோடு, கடந்த 2015ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் கடைசியாக ஐ.சி.சி. இன் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் முதலிடம் பெற்ற கேன் வில்லியம்சன் அதனை அடுத்து டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் முதலிடம் பெறுவது இதுவே முதல் தடவையாகும்.  

அதேநேரம், புதிய டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி 879 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், ஸ்டீவ் ஸ்மித் 877 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. நான்காம், ஐந்தாம் இடங்களில் மார்னஸ் லபச்சேன் (850 புள்ளிகள்) மற்றும் பாபர் அசாம் (789 புள்ளிகள்) ஆகியோர் காணப்படுகின்றனர். 

மறுமுனையில், இந்திய – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பதில் தலைவராக இந்திய அணியினை வழிநடாத்திய அஜிங்கியா ரஹானே அப்போட்டியில் தனது சிறந்த துடுப்பாட்டத்திற்காக தற்போது 784 புள்ளிகளுடன் ஆறாம் இடத்திற்கு முன்னேறியிருக்கின்றார். 

இன்னிங்ஸ் வெற்றியினைப் பதிவு செய்த தென்னாபிரிக்க அணி

இந்த வீரர்களின் முன்னேற்றங்கள் தவிர வேறு பாரிய மாற்றங்கள் எதுவும் புதிய டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் ஏற்பட்டிருக்கவில்லை. அதன்படி, டேவிட் வோனர் (777 புள்ளிகள்) 7ஆம் இடத்திலும், பென் ஸ்டோக்ஸ் (760 புள்ளிகள்) 8ஆம் இடத்திலும், ஜோ ரூட் (739 புள்ளிகள்) 9ஆவது இடத்திலும், செடெஸ்வேர் புஜாரா (728 புள்ளிகள்) 10ஆவது இடத்திலும் காணப்படுகின்றனர். 

இலங்கை அணியினைப் பொறுத்தவரை 652 புள்ளிகளுடன் காணப்படும் திமுத் கருணாரத்ன 17ஆவது இடத்தில் காணப்படுவதே இலங்கை அணி சார்பில் வீரர் ஒருவர் புதிய டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் காட்டும் சிறந்த பதிவாக காணப்படுகின்றது. 

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…