பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரிலிருந்து அவுஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் கேன் ரிச்சட்சன் நீக்கப்பட்டுள்ளார்.
மெல்போர்னில் இடம்பெற்ற பயிற்சியின் போது, கேன் ரிச்சட்சனுக்கு தசைப்பிடிப்பு உபாதை ஏற்பட்டதன் காரணமாக அவரால் பாகிஸ்தான் தொடரில் விளையாட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
>>நியூட்டனின் அபார பந்துவீச்சுடன் யாழ்.மத்திக்கு இலகு வெற்றி
எனவே, பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20i போட்டிகள் கொண்ட தொடருக்கான அவுஸ்திரேலிய அணியுடன் கேன் ரிச்சட்சன் பயணிக்கமாட்டார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கேன் ரிச்சட்சன் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக புதுமுக இடதுகை வேகப் பந்துவீச்சாளர் பென் டுவார்ஷுய்ஸ் அணியில் இணைக்கப்பட்டுள்ளார் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது. எனினும், கேன் ரிச்சட்சனின் நீக்கம் அவுஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சுத்துறையின் அனுபவத்தை குறைத்துள்ளது.
அவுஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர்களான மிச்சல் ஸ்டார்க், பெட் கம்மின்ஸ் மற்றும் ஜோஸ் ஹெஷல்வூட் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதில், கம்மின்ஸ் மற்றும் ஹெஷல்வூட் ஆகியோர் இந்தியாவில் நடைபெறவுள்ள IPL தொடரில் விளையாடவுள்ளனர்.
இதன் காரணமாக 11 போட்டிகளில் மாத்திரமே விளையாடியுள்ள ஜேசன் பெஹ்ரண்ட்ரொப் அணியின் வேகப் பந்துவீச்சை வழிநடத்தவுள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக சீன் அபோட் 2 போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ளார். இவர்களுடன் இணைக்கப்பட்டுள்ள பென் டுவார்ஷுய்ஸ் மற்றும் நெதன் எல்லிஸ் ஆகியோர் இதுவரை அவுஸ்திரேலிய அணிக்காக அறிமுகமாகவில்லை.
இவ்வாறான அனுபவமற்ற வேகப் பந்துவீச்சாளர்களுடன் மிச்சல் மார்ஷ், மார்கஸ் ஸ்டொய்னிஸ் மற்றும் கெமரோன் கிரீன் ஆகிய சகலதுறை வீரர்கள் வேகப் பந்துவீச்சுக்கு பலம் கொடுப்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<