லங்கா பிரீமியர் லீக்கில் (LPL) கண்டி வொரியர்ஸ் அணிக்காக விளையாடிவரும் ரோவ்மன் பவல் மற்றும் டேவோன் தோமஸ் ஆகியோருக்கு பதிலாக இங்கிலாந்து வீரர்கள் இருவர் இணைக்கப்பட்டுள்ளனர்.
ரோவ்மன் பவல் மற்றும் டேவோன் தோமஸ் ஆகியோர் கண்டி வொரியர்ஸ் அணிக்காக கடந்த மூன்று போட்டிகளில் விளைாடியிருந்தனர். எவ்வாறாயினும், பாகிஸ்தான் தொடருக்கான, மேற்கிந்திய தீவுகள் குழாத்தில் இவர்கள் இருவரும் இடம்பெற்றுள்ள நிலையில், அணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்திருந்தனர்.
>>திசர, அவிஷ்கவின் அதிரடியால் ஜப்னா கிங்ஸ் திரில் வெற்றி
எனவே, இவர்கள் இருவருக்கும் பதிலாக இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் ரவி பொப்பாரா மற்றும் துடுப்பாட்ட வீரர் டொம் மூர்ஸ் ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர் என கண்டி வொரியர்ஸ் நிர்வாகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
டொம் மூர்ஸ் மற்றும் ரவி பொப்பாரா ஆகியோர் இலங்கையை வந்தடைந்துள்ளதுடன், இவர்கள் இருவரும் அடுத்தப்போட்டிக்கான வீரர்கள் தெரிவிலும் உள்வாங்கப்படுவர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்தவகையில் ரோவ்மன் பவல் பாகிஸ்தான் தொடருக்காக இன்றைய தினம், நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். இவர், நேற்றைய தினம் நடைபெற்ற ஜப்னா கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், 15 பந்துகளில் அரைச்சதம் விளாசியிருந்தார். குறித்த இந்த அரைச்சதமானது, LPL தொடரில் பெறப்பட்ட இரண்டாவது வேகமான அரைச்சதமாக பதிவாகியிருந்தது.
லங்கா பிரீமியர் லீக்கில் கண்டி வொரியர்ஸ் அணி மூன்று போட்டிகளில் விளையாடி, மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<