டயலொக் றக்பி லீக் போட்டிகளில் 2ஆம் சுற்று போட்டியில், முதற் பாதியில் ஆதிக்கம் செலுத்தியதன் மூலம் கண்டி கழகமானது 34-23 என்ற புள்ளிகள் அடிப்படையில் பொலிஸ் கழகத்தை தோற்கடித்து தமது சம்பியன் கனவை தக்கவைத்துக்கொண்டது.
பொலிஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், பொலிஸ் கழகமானது ஆரம்பத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. அற்புதமான ஆரம்பத்தை பெற்றுக்கொண்ட பொலிஸ் அணியானது கண்டி அணிக்கு அழுத்தம் கொடுத்து ரதீஷ செனவிரத்ன மூலமாக முதலாவது ட்ரையை பெற்றுக்கொண்டது. எனினும் உதையை தவறவிட்டது. (பொலிஸ் 05 – கண்டி 00)
ஆனால் அதன் பின்னர் போட்டியில் கண்டி அணியே அதிகம் ஆதிக்கம் செலுத்தியது. கண்டி அணி வீரர் ஷெஹான் திமித்ரி, பல பொலிஸ் அணி வீரர்களை கடந்து சென்று 22 மீட்டர்கள் ஓடி, தமது முதலாவது ட்ரையை வைத்தார். திலின விஜேசிங்க உதையை சரியாக உதைத்து 5ஆவது நிமிடத்தில் கண்டி அணியை போட்டியில் முன்னிலைப்படுத்தினார். (பொலிஸ் 05 – கண்டி 07)
சிறிது நேரத்தின் பின்னர், பொலிஸ் அணி ஓப் சைட் காணப்பட்டதால் கிடைக்கப்பெற்ற பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி, பெனால்டி உதையை வெற்றிகரமாக உதைத்து மேலும் 3 புள்ளிகளை கண்டி அணி சார்பாக திலின விஜேசிங்க பெற்றுக்கொடுத்தார். பொலிஸ் அணி புள்ளிகளை பெற முயற்சித்தாலும் அவற்றில் தோல்விகண்டது. எனினும் 22 மீட்டர்கள் தொலைவில் கிடைக்கப்பெற்ற பெனால்டி வாய்ப்பினை பயன்படுத்தி ராஜித சன்சோனி மூலமாக 3 புள்ளிகளை பெற்றுக்கொண்டது. (பொலிஸ் 08 – கண்டி 10)
கண்டி அணியானது பந்தை பெற்றுக்கொண்ட வேளைகளில் சிறப்பாக விளையாடியது. பொலிஸ் அணி இவர்களை தடுக்க முயன்றாலும், அவ்வணியால் கண்டி அணியை தடுக்க முடியவில்லை. ஆகையால் ஷெஹான் லீமா கண்டி அணிக்கு ட்ரை வைத்து மேலும் புள்ளிகளை கொண்டு வந்து சேர்த்தார். திலின இவ் உதையையும் தவறவிடவில்லை. மேலும் கண்டி அணியானது தனுஷ் தயான் மூலமாக மேலும் ஒரு ட்ரையை பெற்றுக்கொண்டது. ஷெஹான் திமித்ரியிடம் இருந்து பந்தை பெற்றுக்கொண்ட தனுஷ் கம்பங்களின் அடியே ட்ரை வைத்து அசத்தினார். திலின இலகுவான உதையை தவறவிடவில்லை. (பொலிஸ் 08 – கண்டி 24)
முதற் பாதி நிறைவடைவதற்கு முன்னர் கண்டி அணியின் ஸ்ரீநாத் சூர்யபண்டார மேலும் ஒரு ட்ரை வைத்து கண்டி அணிக்கு பலம் சேர்த்தார். திலின உதையை வெற்றிகரமாக உதைத்தார்.
முதற் பாதி: பொலிஸ் விளையாட்டு கழகம் 08 – கண்டி விளையாட்டு கழகம் 31
இரண்டாம் பாதியில் 54ஆவது நிமிடத்தில் பொலிஸ் அணியின் சந்தேஷ் ஜெயவிக்ரவும், 59ஆவது நிமிடத்தில் கண்டி அணியின் யாகூப் அலியும் மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டனர். ராஜித சன்சோனி 30 மீட்டர் தொலைவிலான பெனால்டி உதையை வெற்றிகரமாக உதைத்து பொலிஸ் அணிக்கு 3 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார், அதே போல் திலின விஜேசிங்கவும் பெனால்டியின் மூலம் கண்டி அணிக்கு 3 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். (பொலிஸ் 11 – கண்டி 34)
70ஆவது நிமிடத்தில் பொலிஸ் அணியின் விங் நிலை வீரரான ரீசா ரபாய்டீன், தனுஷ்க ரஞ்சன் பண்ட் செய்த பந்தை தடுத்து எடுத்து ஓடிச் சென்று ட்ரை வைத்து அசத்தினார். ராஜித சன்சோனி உதையை வெற்றிகரமாக உதைத்தார். (பொலிஸ் 18 – கண்டி 34)
பொலிஸ் அணியானது இறுதியில் ரொமேஷ் ஆராச்சிகே மூலமாக ஒரு ஆறுதல் ட்ரை வைத்தது. ராஜித சன்சோனி இம்முறை உதையை தவறவிட்டார். இறுதியில் பொலிஸ் அணியானது கண்டி அணியின் இலக்கை அடைய முடியாமல் தோல்வியுற்றது
முழு நேரம்: பொலிஸ் விளையாட்டு கழகம் 23 – கண்டி விளையாட்டு கழகம் 34
Thepapare.com போட்டியின் சிறந்த வீரர் – திலின விஜேசிங்க (கண்டி விளையாட்டு கழகம்)
புள்ளிகள் பெற்றோர்
பொலிஸ் விளையாட்டு கழகம் –
ட்ரை – ரதீஷ செனவிரத்ன, ரீசா ரபாய்டீன், ரொமேஷ் ஆராச்சிகே
பெனால்டி – ராஜித சன்சோனி 2
கொன்வெர்சன் – ராஜித சன்சோனி
கண்டி விளையாட்டு கழகம்
ட்ரை – திமித்ரி விஜேதுங்க, ஷெஹான் லீமா, தனுஷ் தயான், ஸ்ரீநாத் சூரியபண்டார
பெனால்டி – திலின விஜேசிங்க 2
கொன்வெர்சன் – திலின விஜேசிங்க 4