டயலொக் ரக்பி லீகின் 10ஆம் வாரத்திற்கான போட்டியொன்றில் கண்டி விளையாட்டுக் கழகம் மற்றும் கடற்படை விளையாட்டுக் கழக அணிகள் மோதிக் கொண்டன.
முதற் சுற்றில் பலமிக்க கண்டி அணியை கடற்படை அணியானது 37-32 என்ற புள்ளிகள் அடிப்படையில் தோற்கடித்திருந்த நிலையில், இப்போட்டி விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் நித்தவளை மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் முழு ஆதிக்கத்தையும் செலுத்திய கண்டி கழகம் 50-22 என்ற புள்ளிகள் அடிப்படையில் இலகு வெற்றியை பெற்றுக் கொண்டது.
கடற்படை அணியின் திலின வீரசிங்க தனது உதையின் மூலம் போட்டியை ஆரம்பித்து வைத்தார். ஆரம்பம் முதலே போட்டியை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த கண்டி அணி போட்டியின் நான்காவது நிமிடத்தில் முதல் ட்ரையினை வைத்தது. பின்வரிசை வீரர்களின் சிறப்பான பந்து கைமாற்றல்களின் பின்னர் தனுஷ்க ரஞ்சன் இடப்பக்க மூலையில் ட்ரையினை பெற்றுக் கொடுத்தார். கடினமான கொன்வெர்சன் உதையினை திலின விஜேசிங்க தவறவிட்டார். (கண்டி அணி 05 – கடற்படை அணி 00)
சில நிமிடங்களின் பின்னர் எதிரணியின் பாதிக்குள் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கம்பத்தை நோக்கி உதைக்க கண்டி அணி தீர்மானித்தது. இம்முறை இலகுவான உதையை திலின விஜேசிங்க வெற்றிகரமாக உதைத்தார். (கண்டி அணி 08 – கடற்படை அணி 00)
தொடர்ந்து கடற்படை அணியும் பெனால்டி உதை ஒன்றின் மூலம் போட்டியில் தமது முதல் புள்ளிகளை பெற்றுக் கொண்டது. 53m தூரத்தில் இருந்து அபாரமான உதை ஒன்றின் மூலம் கடற்படை அணியின் திலின வீரசிங்க புள்ளிகளை பெற்றுக் கொடுத்தார். (கண்டி அணி 08 – கடற்படை அணி 03)
14 ஆவது நிமிடத்தில் கண்டி அணிக்கு மற்றுமொரு பெனால்டி வாய்ப்பு கிடைத்ததுடன், 22m தூரத்தில் கம்பங்களுக்கு அருகாமையில் கிடைத்த இலகுவான உதையை திலின விஜேசிங்க புள்ளிகளாக மாற்றினார். (கண்டி அணி 11 – கடற்படை அணி 03)
போட்டியின் 24ஆவது நிமிடத்தில் அபாரமான ஓட்டத்துடன் தடுப்பாளர்களை ஊடுருவி முன்னேறிய ரிச்சர்ட் தர்மபால, பாசில் மரிஜாவிற்கு லாவகமாக பந்தை பரிமாற்ற, அவர் கம்பங்களுக்கடியில் ட்ரை வைத்தார். மிகவும் இலகுவான கொன்வெர்சன் உதையை திலின விஜேசிங்க வெற்றிகரமாக உதைத்தார். (கண்டி அணி 18 – கடற்படை அணி 03)
சில நிமிடங்களின் பின்னர் மற்றுமொரு அசத்தலான நகர்வொன்றின் மூலமாக ட்ரை ஒன்றினை ரிச்சர்ட் தர்மபால பெற்றுக் கொடுத்து புள்ளி வித்தியாசத்தினை மேலும் அதிகரித்தார். பந்தினை உதைத்து அதனை துரத்திப் பிடித்து சிறப்பான ஓட்டத்துடன் தடுப்பாளர்களை மீறி முன்னேறிய தர்மபால, கம்பங்களுக்கு அருகினில் ட்ரை வைத்தார். மீண்டும் இலகுவான உதையினை திலின விஜேசிங்க குறிதவறாது உதைத்தார். (கண்டி அணி 25 – கடற்படை அணி 03)
முதற்பாதியின் இறுதி நிமிடங்களில் விதிமுறைக்கு மாறான ஆட்டத்தின் காரணமாக கண்டி கழகத்தின் புவனேக உடன்கமுவவிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இவ்வாய்ப்பை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கடற்படை வீரர்கள் சாலிய ஹந்தபங்கொட மூலமாக ட்ரை ஒன்றை வைத்தனர். கடினமான உதையை திலின வீரசிங்க லாவகமாக உதைத்தார். (கண்டி அணி 25 – கடற்படை அணி 10)
முதற்பாதி நிறைவுபெறும் தருவாயில் தமக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பின் மூலம் கண்டி கழகம் புள்ளிகளை மேலும் அதிகரித்தது. திலின விஜேசிங்கவின் உதை கம்பங்களை ஊடறுத்துச் சென்றது. (கண்டி அணி 28 – கடற்படை அணி 10)
முதல் பாதி: கண்டி அணி 28 – கடற்படை அணி 10
இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் கடற்படை அணி சார்பில் லீ கீகல் ட்ரை ஒன்றினை வைத்து புள்ளி வித்தியாசத்தை குறைத்தார். திலின வீரசிங்க கொன்வெர்சன் உதையினை குறிதவறாது உதைத்தார். (கண்டி அணி 28 – கடற்படை அணி 17)
55ஆவது நிமிடத்தில் கண்டி அணியின் முன்கள வீரர்கள் ‘ரோலிங் மோல்’ ஒன்றின் மூலமாக புவனேக உடன்கமுவவைக் கொண்டு ட்ரை வைத்தனர். இம்முறையும் திலின விஜேசிங்க இலகுவாக உதைத்தார். சில நிமிடங்களில் பின்னர் கிடைத்த பெனால்டி உதையினையும் அவர் புள்ளிகளாக மாற்றினார். (கண்டி அணி 38 – கடற்படை அணி 17)
மற்றுமொருமுறை கண்டி அணிக்கு ட்ரை வாய்ப்பொன்றினை உருவாக்கித் தந்த ரிச்சர்ட் தர்மபால, எதிரணியின் பாதிக்குள் உதைக்க அதனை துரத்திச் சென்று பிடித்த ஸ்ரீநாத் சூரியபண்டார ஷெஹான் பதிரனவிற்கு பந்தை கடத்தினார். ஷெஹான் பதிரன இலகுவாக ட்ரை வைக்க, கண்டி அணியின் வெற்றி உறுதியானது. எனினும் இம்முறை திலின விஜேசிங்க கொன்வெர்சன் உதையை தவறவிட்டார். (கண்டி அணி 43 – கடற்படை அணி 17)
வெற்றி கைநழுவிப் போன நிலையில் கடற்படை அணி தனுஜ மதுரங்க ஊடாக ஆறுதல் ட்ரை ஒன்றினை பெற்றுக் கொண்டது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய திலின வீரசிங்க இந்த கடினமான உதையை தவறவிட்டார். (கண்டி அணி 43 – கடற்படை அணி 22)
எனினும் போட்டியின் இறுதி நிமிடத்தில் தமது பாதியிலிருந்து அபாரமான ஓட்டத்தின் மூலம் ட்ரை ஒன்றை பெற்றுக் கொடுத்த தனுஷ்க ரஞ்சன், அதிக ட்ரை பெற்றுக் கொண்ட வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டார். திலின விஜேசிங்க வெற்றிகரமாக உதைத்து அணியின் புள்ளிகளை 50 ஆக உயர்த்தினார். அத்துடன் போட்டி நிறைவுக்கு வந்தது. (கண்டி அணி 50 – கடற்படை அணி 22)
முழு நேரம்: கண்டி அணி 50 – கடற்படை அணி 22
ThePapare.com இன் ஆட்ட நாயகன் – ரிச்சர்ட் தர்மபால (கண்டி விளையாட்டுக் கழகம்)
புள்ளிகளைப் பெற்றோர்
கண்டி விளையாட்டுக் கழகம் – 50
ட்ரை – தனுஷ்க ரஞ்சன் 2, பாசில் மரிஜா 1, ஷெஹான் பதிரன 1, புவனேக உடன்கமுவ 1, ரிச்சர்ட் தர்மபால 1
கொன்வர்சன் – திலின விஜேசிங்க 4
பெனால்டி – திலின விஜேசிங்க 4கடற்படை விளையாட்டுக் கழகம் – 22
ட்ரை – லீ கீகல் 1, தனுஜ மதுரங்க 1, சாலிய ஹந்தபங்கொட 1
கொன்வர்சன் – திலின வீரசிங்க 2
பெனால்டி – திலின வீரசிங்க 1