டயலொக் ரக்பி லீக் முதற் சுற்றின் இறுதிப் போட்டியில் கண்டி மற்றும் ஹெவலொக் அணிகள் கண்டி நித்தவெல மைதானத்தில் மோதிக்கொண்டன. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் கண்டி கழகம் 39 – 30 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றது.
ஹெவலொக் அணியானது இது வரை எப்போட்டியிலும் தோல்வியடையாத நிலையில் இன்றைய போட்டியில் களமிறங்கியது. மறுமுனையில் கண்டி கழகமானது இப்போட்டியில் வெற்றிபெற்று லீக் கனவை தக்கவைத்துக்கொள்ளும் எதிர்பார்ப்போடு களமிறங்கியது.
போட்டி ஆரம்பித்ததிலிருந்து இரு அணிகளும் கடினமாக மோதிக்கொண்டன. கண்டி அணி அதிகமாக பந்தை வைத்திருந்தாலும் பல தவறுகளினால் பந்தை இழந்தது. ஹெவலொக் அணியானது போட்டி ஆரம்பித்து சில நிமிடங்களில் பெனால்டி வாய்ப்பின் மூலம் புள்ளிகளை பெற முயற்சித்தாலும் அதனைத் தவறவிட்டது. துலாஜ் பெரேரா 47 மீட்டர் தூரத்தில் இருந்து உதையை தவறவிட்டார். எனினும் அடுத்த சில நிமிடங்களில் கிடைத்த பெனால்டி வாய்ப்பின் மூலம் 45 மீட்டர் தூரத்தில் இருந்து கம்பத்தின் நடுவே உதைத்து 3 புள்ளிகளை ஹெவலொக் அணிக்கு பெற்றுக்கொடுத்தார். (ஹெவலொக் 03- கண்டி 00)
கண்டி அணியானது தமது முதல் புள்ளியை பெற்றுக்கொள்வதற்கு முயற்சித்தாலும் சில தவறுகளை மேற்கொண்டது. எனினும் எதிரணியின் கோட்டையினுள் கிடைத்த பெனால்டி வாய்ப்பின் மூலம் முதல் புள்ளியை பெற்றுக்கொண்டது. பெனால்டியின் சில கட்டங்களின் பின்னர் அர்ஷாத் ஜமால்தீன் உதைத்த பந்தை ஓடிச் சென்று கைப்பற்றிக்கொண்ட கயான் ரத்நாயக்க முதல் ட்ரை வைத்தார். எனினும் திலின விஜேசிங்க உதையை தவறவிட்டார்.(ஹெவலொக் 03- கண்டி 05)
இந்த லீக்கில் அதிக புள்ளிகளுக்கு உரிமை கொண்ட துலாஜ் பெரேரா 48 மீட்டர் தூரத்தில் இருந்து இன்னுமொரு அற்புதமான பெனால்டி உதையை கம்பத்தின் நடுவே உதைத்து ஹெவலொக் அணிக்கு மேலும் 3 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார் (ஹெவலொக் 06 – ஹெவலொக் 05). திலின முதல் உதையை தவறவிட்டாலும் கண்டி அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பினை 23 மீட்டர் தூரத்திலிருந்து வெற்றிகரமாக கம்பத்தினுள் உதைத்து கண்டி அணிக்கு 3 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். (ஹெவலொக் 06- கண்டி 08)
அதன் பின் கண்டி அணியே தொடர்ந்து போட்டியில் ஆதிக்கம் செலுத்தினாலும், கண்டி அணியின் முறையற்ற விளையாட்டினாலும், வீரர்கள் பந்தை நழுவவிட்டதினாலும் பல ட்ரை வைக்கும் வாய்ப்புகளை இழந்தது. அவ்வாறே கண்டி அணி வீரர் பந்தை நழுவவிட்டாலும் நடுவர் அது ’நொக் ஒன்’ இல்லை என்று கூறியதால் போட்டியை நிறுத்தாது தொடர்ந்து செயற்பட்ட கண்டி அணியானது விஸ்வமித்ர ஜயசிங்க மூலமாக மைதானத்தின் ஓரத்தில் ட்ரை வைத்தது. திலின வெற்றிகரமாக கம்பத்தினூடே உதைத்தார். (ஹெவலொக் 06 – கண்டி 15)
33ஆவது நிமிடத்தில் ஹெவலொக் அணி உயர உதைத்த பந்தை கண்டி அணி வீரர் நழுவவிட்டதால், பந்தை கைப்பற்றிக்கொண்ட ஹெவலொக் அணியின் மிஷோன் பெரேரா தனியாக ஓடிச் சென்று கம்பத்தின் அடியில் ட்ரை வைத்தார். துலாஜ் பெரேரா வெற்றிகரமாக உதைந்து அணிக்கு ஊக்கம் அளித்தார்.(ஹெவலொக் 13 – கண்டி 15)
போட்டியின் முதற் பாதியின் இறுதிக் கட்டம் மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது. 40 நிமிடங்கள் முடிவடைந்த நிலையில் மேலதிக நேரத்தில் கண்டி அணியானது எதிரணியின் எல்லைக்குள் ஹெவலொக் அணிக்கு அழுத்தம் கொடுத்து வந்தது. இவ்வேளையில் ஹெவலொக் அணியின் ஷாரோ பெர்னாண்டோ மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட ஹெவலொக் அணி 14 வீரர்களுடன் விளையாடியது. ஹெவலொக் அணியின் 22 மீட்டர் எல்லைக்குள் கண்டி அணியானது பல பெனால்டி வாய்ப்புகளை பெற்றது. இறுதியில் பல கட்டங்களுக்குப் பின்னர் கண்டி அணியானது ட்ரையோடு முதல் பாதியை முடித்துக்கொண்டது. தமித் திஸாநாயக்க இம் முறை ட்ரை வைத்தார். திலினவின் வெற்றிகரமான உதையுடன் முதற் பாதி முடிவடைந்தது.
முதற் பாதி : ஹெவலொக்ஸ் 13 – கண்டி 22
வெறும் 9 புள்ளிகள் வித்தியாசத்துடன் இரண்டாம் பாதியை இரு அணியும் ஆரம்பித்தது. இதனால் இரண்டாம் பாதி தீர்மானம் மிக்க பாதியாக அமைந்தது.
போட்டி ஆரம்பித்த சில செக்கனிலேயே கண்டி அணி மறுபடியும் பந்தை ’நொக் ஒன்’ செய்தது, இதனை பயன்படுத்தி முன் நகர்ந்த ஹெவலொக் அணியானது 25 மீட்டர் தூரத்தில் கிடைத்த பெனால்டி வாய்பின் மூலம் 3 புள்ளிகளை பெற்றுக்கொண்டது. துலாஜ் பெரேரா சிறப்பாக உதைந்து 3 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார்.( ஹெவலொக் 16 – கண்டி 22)
56 ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பினை பயன்படுத்தி ரோலிங் மோல் மூலம் கண்டி அணியின் தமித் திஸாநாயக்க ட்ரை வைத்து கண்டி அணிக்கு ஊக்கம் அளித்தார். திலின கடினமான உதையை தவறவிட்டார்.(ஹெவலொக் 16 – கண்டி 27)
போட்டியை விட்டுக்கொடுக்காத ஹெவலொக் அணியானது 60ஆவது நிமிடத்தில் ப்ளட்னி லிஸ்டன் மூலம் ட்ரை வைத்தது. துலாஜ் பெரேரா மீண்டும் ஒரு முறை கம்பத்தின் நடுவே உதைந்து ஹெவலொக் அணிக்கு நம்பிக்கை கொடுத்தார்.(ஹெவலொக்ஸ் 23 – கண்டி 27)
அடுத்த சில நிமிடங்களுக்கு கண்டி அணியானது ஹெவலொக் அணிக்கு கடும் அழுத்தத்தை கொடுத்தது. 4 புள்ளிகள் வித்தியாசத்தில் போட்டியிட்டுக் கொண்ட இரு அணியும் வெற்றிபெறுவதற்காக கடினமாக மோதிக்கொண்டன. ஹெவலொக் அணியின் 22 மீட்டர் எல்லையினுள் கிடைத்த பல பெனால்ட்டி வாய்ப்புகளை பயன்படுத்தி பல கட்டங்களின் பின்னர் கண்டி அணியானது லசித அத்தனகொட மூலமாக ட்ரை வைத்தது. எனினும் திலின உதையை தவறவிட்டார். (ஹெவலொக் 23 – கண்டி 32)
10 நிமிடங்களே எஞ்சி இருக்கும் நிலையில் ஹெவலொக் அணியானது கண்டி அணிக்கு பெரும் அழுத்தம் கொடுத்தது. கண்டி அணியின் 22 மீட்டர் எல்லையினுள் ஹெவலொக் அணி ட்ரை வைக்கும் நோக்கில் கடுமையாக மோதிய பொழுதும், கண்டி அணியின் தடுப்பை அவர்களால் தாண்ட முடியவில்லை.
அதிர்ச்சி அளிக்கும் விதமாக தமது 22 மீட்டர் எல்லையினுள் ஹெவலொக் அணியிடம் இருந்து பந்தை கைப்பற்றிக்கொண்ட கண்டி அணியின் வீரர் 50 மீட்டர்கள் ஓடி வந்த நிலையில் கெவின் டிக்ஸனினால் தடுக்கப்பட்டார். ஹெவலொக் அணி வீரர்கள் இருவர் மட்டுமே தமக்கு முன்னால் இருக்கும் நிலையில் பந்தை பெற்றுக்கொண்ட கயான் ரத்நாயக்க இடது காலால் மைதானத்தில் ஓரத்தில் இருக்கும் ரிச்சர்ட் தர்மபாலாவிற்கு பந்தை உதைந்தார். ஓடிச் சென்று பந்தை கைப்பற்றிக்கொண்ட ரிச்சர்ட் போட்டியின் சிறந்த ட்ரையை வைத்தார். ரொஷான் வீரரத்ன உதையை வெற்றிகரமாக உதைத்தார்.(ஹெவலொக் 23 – கண்டி 39)
வெற்றிபெற ஹெவலொக் அணி முயற்சி செய்த பொழுதும் 80ஆவது நிமிடத்தில் நிஷோன் பெரேரா மூலம் ஆறுதல் ட்ரை ஒன்றை மட்டுமே பெற்றுக்கொள்ள முடிந்தது. துலாஜ் பெரேராவின் உதையுடன் போட்டி நிறைவடைந்தது.
முழு நேரம் : ஹெவலொக் 30 – கண்டி 39
ThePapare.com போட்டியின் சிறந்த வீரர் – ரொஷான் வீரரத்ன
புள்ளிகளை பெற்றோர்
கண்டி கழகம்
ட்ரை – கயான் ரத்நாயக்க , தமித திஸாநாயக்க 2, விஸ்வமித்ர ஜயசிங்க, லசித அத்தனகொடபெனால்டி – திலின விஜேசிங்க 2
கொன்வெர்சன் – திலின விஜேசிங்க 2, ரொஷான் வீரரத்ன 1ஹெவலொக் கழகம்
ட்ரை – மிஷோன் பெரேரா 2, ப்ளட்னி லிஸ்டன்
பெனால்டி – துலாஜ் பெரேரா 3
கொன்வெர்சன் – துலாஜ் பெரேரா 3