டயலொக் ரக்பி லீக் 6ஆம் வார போட்டியொன்றில் இரண்டாம் பாதியில் அபாரமாக விளையாடிய கண்டி விளையாட்டுக் கழக அணி CR & FC அணியை 53 – 29 என்ற புள்ளிகள் அடிப்படையில் வென்று தமது ரசிகர்களுக்கு விருந்தளித்தது.
கண்டி நித்தவள மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டிக்கு காலநிலை சீராக இருந்து கைகொடுத்தது. சென்ற வார போட்டியில் கடற்படை அணியிடம் தோல்வியுற்ற கண்டி அணி, இவ்வாரம் தமது ரசிகர்களுக்கு மத்தியில் சொந்த மைதானத்தில் சாதிக்குமா என அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர். மறு முனையில் சென்ற வாரம் பொலிஸ் அணியை வென்ற திருப்தியோடு CR & FC அணி களத்தில் இறங்கியது.
CR & FC அணி பந்தை உதைந்து போட்டியை ஆரம்பித்து வைத்தது. ஆரம்ப உதையை பெற்றுக்கொண்ட கண்டி அணியின் பாசில் மரிஜா திரும்பவும் உதைத்த பந்தை கைப்பற்றிக்கொண்ட கண்டி அணியின் தமித் திஸாநாயக்க சிறப்பாக சில வீரர்களை கடந்து ரிச்சர்ட் தர்மபாலாவிற்கு பந்தை பரிமாறினார். பந்தை பெற்றுக்கொண்ட ரிச்சர்ட் கண்டி அணி சார்பாக முதல் ட்ரை வைத்தார். திலின விஜேசிங்க உதையை தவறவிடவில்லை. (CR & FC 00 – கண்டி 07)
கண்டி அணியின் முன்னிலைக்கு பின்னர் உடனடியாக செயற்பட்ட CR & FC அணி பெனால்டி வாய்ப்பொன்றை பெற்றுக்கொண்டது. 45 மீட்டர் தூரத்தில் இருந்து பெனால்டி உதையை தரிந்த ரத்வத்த வெற்றிகரமாக கம்பத்தின் நடுவே உதைத்து 3 புள்ளிகளை CR & FC அணிக்கு பெற்றுக்கொடுத்தார். (CR & FC 03- கண்டி 07)
கடந்த வாரங்களில் CR & FC அணியின் நட்சத்திர வீரராக காணப்பட்ட தரிந்த ரத்வத்த மீண்டும் ஒரு முறை தமது அணி சார்பாக அற்புதமான ட்ரை ஒன்றை வைத்தார். பந்தை உதைத்து, பின்னர் அதை துரத்தி சென்று தானே பெற்றுக்கொண்ட ரத்வத்த கம்பங்களின் கீழ் ட்ரை வைத்தார். உதையையும் அவர் தவறவிடவில்லை. (CR & FC 10 – கண்டி 07)
போட்டியில் தொடர்ந்து CR & FC அணியே ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஸ்க்ரம் மூலமாக பந்தை பெற்றுக்கொண்ட கவிந்து பெரேரா 30 மீட்டர்கள் ஓடிச் சென்று தரிந்த ரத்வத்தவிற்கு பந்தை பரிமாற்றினார். பந்தை பெற்றுக்கொண்ட ரத்வத்த இரண்டாவது முறையாக CR & FC அணியின் சார்பில் ட்ரை வைத்து அணியை மேலும் முன்னிலை அடைய செய்தார். (CR & FC 15- கண்டி 07)
சில நிமிடங்களின் பின்னர் CR & FC அணி வீரர் ஓப் சைட் காணப்பட்டமையால் கண்டி அணிக்கு பெனால்டி வாய்ப்பொன்று வழங்கப்பட்டது. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கம்பத்தின் இடையே பந்தை உதைத்து கண்டி அணிக்கு 3 புள்ளிகளை திலின பெற்றுக்கொடுத்தார். (CR & FC 10 – கண்டி 15)
இதன் பிறகு போட்டியில் கண்டி அணியே அதிகம் ஆதிக்கம் செலுத்தியது எனக் கூறலாம். CR & FC அணிக்கு அழுத்தம் கொடுத்து அவ்வணியின் கோட்டைக்குள் நுழைந்த கண்டி அணி, விஸ்வமித்ர மூலமாக மைதானத்தின் ஓரத்தில் ட்ரை வைத்தது. எனினும் திலின உதையை தவறவிட்டார். (CR & FC 15- கண்டி 15)
நீண்ட இடைவேளையின் பின்னர் CR & FC அணி புள்ளிகளை பெற்றுக்கொண்டதன் பின்னரும், கண்டி அணி வீரர் பந்தை நழுவவிட்டதை வாய்ப்பாக பெற்றுக்கொண்ட CR & FC அணி, வேகமாக முன்நோக்கி நகர்ந்தது. ஒரு சில கட்டங்களின் பின்னர் கவிந்து பெரேரா மூலமாக மைதானத்தின் ஓரத்தில் ட்ரை வைத்தது CR & FC அணி. தரிந்த ரத்வத்த சிறப்பான உதையின் மூலம் தமது அணியை பலப்படுத்தினார். (CR & FC 22- கண்டி 15)
எனினும் விட்டுக்கொடுக்காத கண்டி அணி சொயுறு அந்தோணி மூலமாக ட்ரை ஒன்று வைத்தது. திலினவின் வெற்றிகரமான உதவியுடன் புள்ளிகளையும் சமப்படுத்தியது.
முதல் பாதி: CR & FC 22 – 22 கண்டி விளையாட்டுக் கழகம்
இரண்டாம் பாதி ஆரம்பத்திலிருந்து கண்டி அணி தமது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் பாதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய CR & FC அணி இப்பாதியில் தமது திறமையை வெளிப்படுத்த தவறியது. இரண்டாம் பாதி ஆரம்பித்து சில நிமிடங்களில் லைன் அவுட் மூலம் பந்தை பெற்ற கண்டி வீரர்கள் சிறப்பாக பந்தை பரிமாறி தனுஷ்க ரஞ்சன் மூலமாக ட்ரை வைத்தது. திலின உதையை தவறவிடவில்லை. (CR & FC 22 – கண்டி 29)
இதன் பின்னர் கண்டி அணியின் ட்ரை மழை பொழிந்தது. கண்டி அணியின் யாகூப் அலி, அணி சார்பாக தனது முதல் ட்ரையை வைத்தார். கிடைத்த பெனால்டி வாய்ப்பினை பயன்படுத்தி மோல் மூலமாக முன்னோக்கி நகர்ந்த கண்டி அணி, அலி மூலமாக ட்ரை வைத்தது. திலின இவ்உதையையும் சிறப்பாக உதைந்தார். (CR & FC 22 – கண்டி 36)
CR & FC அணியின் கோட்டையினுள் பந்தை பெற்றுக்கொண்ட அஷான் தி கொஸ்தா மீது அழுத்தம் கொடுத்ததன் காரணமாக பந்தை பெற்றுக்கொண்ட தனுஷ்க ரஞ்சன் இப்போட்டியில் தமது இரண்டாவது ட்ரையை வைத்து அசத்தினார். திலின கடினமான உதையை இலகுவாக உதைத்தார். (CR & FC 22 – கண்டி 43)
கண்டி அணி மீண்டும் ஒரு பெனால்டி வாய்ப்பினை CR & FC அணியின் 5 மீட்டர் எல்லையின் அருகே பெற்றுக்கொண்டது. இம்முறை கிடைத்த பெனால்டியில் இருந்து உடனடியாக பந்தை பெற்றுக்கொண்ட பாசில் மரிஜா, மைதானத்தின் குறுக்கே விங் நிலை வீரரை நோக்கி உதைத்தார். தம்மை தடுக்க யாருமே இல்லாத நிலையில் பந்தை பெற்றுக்கொண்ட தனுஷ் தயான் இலகுவாக கண்டி அணியின் சார்பாக இறுதி ட்ரையை வைத்தார். திலின உதையை மீண்டும் தவறவிடாது உதைத்தார். (CR & FC 22 – கண்டி 50)
போட்டியை வெற்றிகொள்வது கடினம் என்ற நிலையில் CR & FC அணி, அஷான் தி கொஸ்தா மூலமாக ஆறுதல் ட்ரை ஒன்றை பெற்றுக்கொண்டது. கண்டி அணி வீரர் தனுஷ்க ரஞ்சனின் கைகளில் இருந்து பந்தை பறித்து எடுத்த அஷான் தனியாளாக ஓடி சென்று ட்ரை வைத்தார். ரத்வத்த உதையை சரியாக உதைந்தார். (CR & FC 29 – கண்டி 50)
இந்தப் போட்டியில் சில அபாரமான உதைகளை உதைத்த திலின விஜேசிங்க மீண்டும் ஒரு முறை 22 மீட்டர் தூரத்தில் இருந்து ட்ராப் கோல் ஒன்றை உதைத்து கண்டி அணிக்கு 3 மேலதிக புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். (CR & FC 22 – கண்டி 53)
முதல் பாதியில் இரண்டு அணிகளும் சமனான புள்ளிகளை பெற்றுக் காணப்படினும் இரண்டாம் பாதியில் கண்டி அணியின் அபார ஆட்டம் போட்டியில் வெற்றியினை பெற்றுக் கொடுத்தது. முதல் பாதியில் அபாரமாக விளையாடிய CR & FC அணி இரண்டாம் பாதியில் கண்டி அணியின் அசத்தல் ஆட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் தவித்து வந்தது எனலாம்.
முழு நேரம்: CR & FC 29 – 53 கண்டி விளையாட்டுக் கழகம்
ThePapare.com இன் போட்டியின் சிறந்த வீரர் – கயான் வீரரத்ன (கண்டி விளையாட்டுக் கழகம்)
புள்ளிகள் பெற்றோர்
கண்டி விளையாட்டுக் கழகம்
ட்ரை – தனுஷ்க ரஞ்சன் 2s, ரிச்சர்ட் தர்மபால, விஸ்வமித்ர, தனுஷ் தயான், யாகூப் அலி , சயுறு அந்தோணி
பெனால்டி / ட்ராப் கோல் – திலின விஜேசிங்க – 2
கொன்வேர்ஷன் – திலின விஜேசிங்க – 6CR & FC அணி
ட்ரை – தரிந்த ரத்வத்த 2, அஷான் தி கொஸ்தா, கவிந்து பெரேரா
பெனால்டி – தரிந்த ரத்வத்த 1
கொன்வேஷன் – தரிந்த ரத்வத்த 3