டயலொக் க்ளிபர்ட் கிண்ண ரக்பி தொடரின் (Clifford Cup) முதலாவது அரையிறுதியில் CR&FC அணியினை 38-26 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்திய கண்டி விளையாட்டுக் கழகம், தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை மீண்டும் பெற்றுள்ளது.
பல்லேகலயில் நேற்று (22) இடம்பெற்ற தீர்மானமிக்க இந்தப் போட்டியில், முதல் புள்ளிகள் சேர்த்த அணியாக கண்டி விளையாட்டுக் கழகம் மாறியிருந்தது. போட்டி ஆரம்பமாகி ஆறு நிமிடங்களில் முதல் ட்ரையினை தனுஷ்க ரஞ்சன் கண்டி அணிக்காக வைத்தார். எனினும் நைகல் ரத்வத்த இந்த ட்ரையினை மேலதிக புள்ளிகளுக்காக கன்வெர்சன் செய்யத் தவறியிருந்தார். (கண்டி 05 – 00 CR&FC)
கடற்படையை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற திலின வீரசிங்க
டயலொக் நிறுவனத்தின் அனுசரணையில் இடம்பெறும் க்ளிபர்ட் கிண்ண (Clifford Cup)…
தொடர்ந்து முன்னேறிய போட்டியில் இரண்டாவது ட்ரையும் தனுஷ்க ரஞ்சன் மூலம், கண்டி அணிக்கு கிடைத்தது. இம்முறை வைக்கப்பட்ட ட்ரையினை கன்வெர்சன் செய்வது நைகல் ரத்வத்தவுக்கு இலகுவாக இருந்தது. மறுமுனையில் மீள் ஆரம்பத்தில் பின்னர் கிடைக்கப்பெற்ற வாய்ப்பு ஒன்றின் மூலம் சானக்க சந்திமால் CR&FC அணிக்கான முதல் ட்ரையினை வைத்தார். இந்த ட்ரைக்கான மேலதிக இரண்டு புள்ளிகளும் தரிந்த ரத்வத்தவினால் பெறப்பட்டிருந்தது. (கண்டி 12 – 07 CR&FC)
தொடர்ந்த நிமிடங்களில் கண்டி அணியின் ஆதிக்கமே காணப்பட்டிருந்தது. கண்டிக்கான அடுத்த ட்ரையினை சிறினாத் சூரியபண்டார வைத்தார். பண்டாரவினை அடுத்து கண்டி அணியின் தலைவர் கயான் வீரரத்ன தனது தரப்புக்கு இன்னுமொரு ட்ரை மூலம் பெறுமதி சேர்த்தார். இதனால், ஆரோக்கியமான முன்னிலை ஒன்றுடன் கண்டி தரப்பு போட்டியின் முதல் பாதி நிறைவின் போது காணப்பட்டிருந்தது.
முதற்பாதி: கண்டி விளையாட்டுக் கழகம் 22 – 07 CR&FC
இரண்டாம் பாதி ஆரம்பித்து மூன்று நிமிடங்களின் பின்னர் கண்டி அணிக்காக தனுஷ்க ரஞ்சன் தனது ஹட்ரிக் ட்ரையினை வைத்திருந்தார். அதோடு இரண்டு பெனால்டி வாய்ப்புக்கள் மூலம் நைகல் ரத்வத்த தனது தரப்பின் புள்ளிகளை மேலும் அதிகரித்திருந்தார்.
இப்படியாக போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நிலையில் CR&FC அணி வீரர் ஹிரந்த மனமேந்திரா மோசமான உபாதை ஒன்றின் பின்னர் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்ட நிகழ்வு பார்வையாளர்கள் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியிருந்தது. இந்த துயர நிகழ்வின் பின்னர் தொடர்ந்த போட்டியில், ஒமல்க குணரத்ன மிக கச்சிதமான ட்ரை ஒன்றினை CR&FC அணிக்காக வழங்கியிருந்தார். இதனை மேலதிக புள்ளிகளாக மாற்ற தரிந்த ரத்வத்தவும் தவறவில்லை. (கண்டி 35 – 14 CR&FC)
வடக்கிற்கு பயணித்துள்ள ரக்பி விளையாட்டு
‘ரக்பியில் இணைவோம்’ (Get into Rugby ) திட்டத்தின் ஐந்தாவது நிகழ்ச்சி யாழ்ப்பாணம் …
நேரம் அதிகரிக்க இரண்டு அணிகளும் தங்களால் முடியுமான முயற்சிகளை மேற்கொண்டிருந்தன. இதில், செமால் விஜயசேகர மற்றும் ரீசா ரபாய்தீன் ஆகியோர் மூலம் CR&FC அணிக்கான ட்ரைகள் பெறப்பட்டு அவை வெற்றிகரமாக கன்வெர்சன் செய்யப்பட்டிருந்தன. எனினும், போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தியிருந்த கண்டி அணியினை வீழ்த்த CR&FC அணிக்கு இந்த ட்ரைகள் மூலம் கிடைத்த புள்ளிகள் போதுமாக இருக்கவில்லை. தொடர்ந்து திலின விஜேசிங்க பெற்றுக்கொண்ட பெனால்டி புள்ளிகளின் மூலம் க்ளிபர்ட் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடும் அணிகளில் ஒன்றாக கண்டி அணி தம்மை உறுதிப்படுத்திக்கொண்டது.
முழு நேரம்: கண்டி விளையாட்டுக் கழகம் 38 (5T,1C,3P) – 28 (4T,4C) CR&FC
இவ்வெற்றி மூலம் கண்டி அணி இத்தொடரிலும் எந்தவொரு போட்டியிலும் தோல்வியுறாத அணியாக காணப்படுகின்றது. கண்டி விளையாட்டுக் கழகம் க்ளிபர்ட் கிண்ண இறுதிப் போட்டியில் வரும் ஞாயிற்றுக்கிழமை (25) கடற்படை விளையாட்டுக் கழகத்தினை எதிர்கொள்கின்றது.
ThePapare.com இன் ஆட்ட நாயகன்: றிச்சர்ட் தர்மபால (கண்டி விளையாட்டுக் கழகம்)
புள்ளிகள் பெற்றோர்
கண்டி விளையாட்டுக் கழகம்
தனுஷ்க ரஞ்சன் (3T)
சிறினாத் சூரியபண்டார (1T)
கயான் வீரரத்ன (1T)
நைகல் ரத்வத்த (1C,2P)
திலின விஜேசிங்க (1P)CR&FC விளையாட்டுக் கழகம்
சானக்க சந்திமால் (1T)
ஒமல்க குணரத்ன (1T)
செமால் வீரசேகர (1T)
ரீசா ரபாய்தீன் (1T)
தரிந்த ரத்வத்த (4C)