டயலொக் கழக ரக்பி லீக்கிக் முதல் வார போட்டிகளில் தமது முதல் போட்டியில் இன்று கண்டி கழகம் மற்றும் CH & FC கழகங்கள் மோதின. இப்போட்டியில் கண்டி கழகம் 96-00 என்ற புள்ளிகள் கணக்கில் அபார வெற்றியீட்டியது.
Visit the Dialog Rugby League Hub
கண்டி நித்தவெல ரக்பி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டிக்கு மழையின் பாதிப்பு காணப்படவில்லை. எனவே போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. சென்ற வருட லீக் வெற்றியாளர்களான கண்டி அணியானது இவ்வருடம் மேலும் திறமை வாய்ந்த பல வீரர்களை அணியில் கொண்டுள்ளமை அணிக்கு பெரும் பலமாகும். பல நட்சத்திரங்களை தமது அணியில் உள்ளடக்கி பலம் வாய்ந்து காணப்பட்ட கண்டி அணியே போட்டியில் வெற்றிபெறும் என அனைவராலும் முன்னரே எதிர்பார்க்கப்பட்டது.
சென்ற வருடம் சிறப்பாக அமையாத CH & FC அணி இவ்வருடம் பல மாற்றங்களுடனும் எதிர்பார்ப்புகளுடனும் களமிறங்கியது. இம்முறை CH & FC அணியின் பயிற்றுவிப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் இலங்கை ரக்பி அணியின் முன்னாள் தலைவருமான நாமல் ராஜபக்ஷ கடைமையாற்றுவது சிறப்பம்சமாகும்.
போட்டியின் ஆரம்பத்திலிருந்து ஆதிக்கம் செலுத்திய கண்டி அணி ஆட்டம் ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே ட்ரை வைத்து முன்னிலை அடைந்தது. திலின விஜேசிங்கவின் உதவியுடன் ரொஷான் வீரரத்ன கண்டி அணி சார்பாக முதல் ட்ரை வைத்தார். பின்னர் இலகுவான உதையை அர்ஷாத் ஜமால்தீன் தவறவிடவில்லை.
முதல் போட்டி – போனஸ் புள்ளியுடன் முதல் போட்டியை வென்ற கடற்படை அணி
முதல் ட்ரை வைத்து 3 நிமிடங்களில் மீண்டும் ஒரு முறை திலின விஜேசிங்கவின் உதவியுடன் ரிச்சர்ட் தர்மபால கண்டி அணி சார்பாக ட்ரை வைத்தார். கண்டி அணி சார்பாக 3ஆவது ட்ரையை அணிக்கு புதிய வீரரும் இலங்கை அணி வீரருமான தனுஷ்க ரஞ்சன் பெற்றுக்கொடுத்தார்.
3ஆவது ட்ரை வைத்து அடுத்த நிமிடத்திலேயே அர்ஷாத் ஜமால்தீன் நான்காவது ட்ரை வைத்து தனது அணியின் முன்னிலையை அதிகரித்து சென்றார். அதன்போதும் ஜமால்தீன் உதையை தவறவிடவில்லை.
தனுஷ்க ரஞ்சன் மூலமாக மீண்டும் ஒரு ட்ரை வைத்த கண்டி அணியானது 15 நிமிடங்களில் 5 ட்ரைகளை வைத்து CH & FC அணியை மிரட்டியது. மீண்டும் ஒரு முறை ட்ரை வைத்த தனுஷ்க ரஞ்சன் ஹட்ரிக் முறையில் ட்ரை வைத்து கலக்கினார். 5 நிமிடங்களில் மீண்டும் ஒரு முறை ட்ரை வைத்தது கண்டி அணி.
கண்டி அணி சார்பாக 8ஆவது ட்ரையை முன் வரிசை வீரர் சஷிக ஜயவர்தன பெற்றுக்கொடுத்தார். 30 நிமிடங்களில் 8 ட்ரைகளை வைத்து கண்டி அணி பலம் வாய்ந்து காணப்பட்டது. CH & FC அணியை ஆக்கிரமித்த கண்டி முதல் பாதியில் 54 புள்ளிகளை பெற்று முன்னிலையில் காணப்பட்டது.
முதல் பாதி : கண்டி கழகம் 54 – 00 CH & FC அணி
இரண்டாம் பாதியில் மீண்டும் தனது திறமையை வெளிக்காட்டிய கண்டி அணி, இரண்டாம் பாதி ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே தனுஷ்க ரஞ்சன் மூலமாக மீண்டும் ஒரு ட்ரை வைத்தது. இது தனுஷ்க ரஞ்சனின் 4ஆவது ட்ரை ஆகும்.
கண்டி அணியின் 10ஆவது ட்ரையை பெற்றுக்கொடுத்தார் தரிந்து சதுரங்க. இரண்டாவது முறையாகவும் ட்ரை வாய்த்த ரிச்சர்ட் தர்மபால கண்டி அணியை மேலும் முன்னிலைப் படுத்தினார். CH & FC அணிக்கு எந்த ஒரு வாய்ப்பையும் கண்டி அணி வழங்கவில்லை. மேலும் இப்போட்டியில் CH & FC அணியானது மிக மோசமான விளையாட்டை வெளிக்காட்டியமை கண்டி அணிக்கு மேலும் சாதகமாகியது.
12ஆவது ட்ரையாக கண்டி அணிக்கு பெனால்டி ட்ரை ஒன்று வழங்கப்பட்டது. போட்டியின் பின் பகுதியில் CH & FC அணி அழுத்தம் கொடுத்த பொழுதும் அவர்களால் எந்த ஒரு புள்ளியையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
போட்டியின் தனது முதல் ட்ரையாக இலங்கை அணி வீரர் காஞ்சன ராமநாயக்க சிறப்பான ஓட்டம் ஒன்றின் மூலம் ட்ரை வைத்தார். கண்டி அணி இரண்டாம் பாதியில் எந்த ஒரு உதவியையும் தவறவிடவில்லை. போட்டி நிறைவடையும் தருணத்தில் யாகூப் அலியும் தன் பங்கிற்கு கண்டி அணிக்கு ட்ரை ஒன்றை பெற்றுக்கொடுத்தார்.
முழு நேரம் : கண்டி அணி 96 – 00 CH & FC அணி
இந்தப் போட்டியின்மூலம் சிறப்பான விளையாட்டை வெளிக்காட்டி ஏனைய அணிகளை அச்சுறுத்திய கண்டி அணி, இம்முறையும் கிண்ணத்தை சுவீகரிக்கப்போவது தாம்தான் என்பதை காண்பித்தனர். CH & FC அணி பலவீனமானதாக கருதப்பட்ட அதேவேளை, CH & FC அணிக்கு மிக மோசமான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்து இருக்கிறது.
போட்டியின் முக்கிய காட்சிகள்