முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட் காப்பாளராக அதிக சதங்களைக் குவித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல் படைத்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்படும் உள்ளூர் முதல்தர கழகங்களுக்கிடையிலான குவாயிட் ஈ அசாத் போட்டித் தொடரின் இரண்டாவது சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.
வெற்றியின் எதிர்பார்ப்புடன் பாகிஸ்தான் சென்றது இலங்கை அணி
பாகிஸ்தான் செல்லும் இலங்கை அணி, அதிக இளம் வீரர்களை கொண்டிருந்தாலும், சம….
இதில் மத்திய பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் பாகிஸ்தான் அணியின் சிரேஷ்ட வீரர்களில் ஒருவரான கம்ரான் அக்மல், பைசலாபாத்தில் 21ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை நடைபெற்ற வடக்கு பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக விளையாடி 157 ஓட்டங்களைக் குவித்தார்.
முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் கம்ரான் அக்மலின் 31ஆவது சதம் இதுவாகும். இதன்மூலம், முதல்தர கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த இரண்டாவது விக்கெட் காப்பளார் என்ற சாதனையை படைத்த அவர், ஆசிய வீரர்களில் முதலிடத்தையும் பெற்றுக் கொண்டார்.
இந்த பட்டியலில் முதலிடத்தில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் லெஸ் ஆம்ஸ் இருக்கிறார். 31 சதங்களுடன் அக்மல் இரண்டாமிடத்திலும் 29 சதங்களுடன் அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் அடெம் கில்கிறிஸ்ட் மூன்றாமிடத்திலும் உள்ளனர்.
அத்துடன், ஆசிய வீரர்களைப் பொறுத்தமட்டில் கம்ரான் அக்மலுக்கு அடுத்தபடியாக இலங்கையின் கௌஷால் சில்வா (26 சதங்கள்) இடம்பிடித்துள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
2002ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக அறிமுகத்தைப் பெற்றுக் கொண்ட கம்ரான் அக்மல், 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்த அணிக்காக எந்தவொரு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடவில்லை. எனினும், 2017ஆம் ஆண்டு வரை ஒருநாள் மற்றும் டி-20 அணிகளில் அவ்வப்போது இடம்பிடித்து விளையாடி வந்தார். அதன்பின்னர் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளிலும் அவர் அணியில் இடம்பெறவில்லை.
இந்நிலையில், தற்போது பாகிஸ்தானின் உள்ளூர் முதல்தர கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வரும் கம்ரான் அக்மல், முதல்தர கிரிக்கெட்டில் இந்த அரிய சாதனையைப் படைத்துள்ளார்.
இதுவ்வாறிருக்க, குறித்த போட்டியின் பிறகு தனது சாதனை குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட கம்ரான், ”எனது திறமை என்னை விட்டு செல்லும் வரை நான் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவேன். அதேபோல, தேசிய அணிக்காக விளையாடுகின்ற இயலுமை தற்போது என்னிடம் இல்லை. எனினும், யூனிஸ் கான் மற்றும் மிஸ்பாஉல் ஹக் ஆகிய இருவரும் 30 களின் பிற்பகுதியிலும் 40 களின் முற்பகுதியிலும் பாகிஸ்தான் அணிக்காக பங்களிப்பினை வழங்கியிருந்தமை எமக்கு சிறந்த முன்உதாரணமாக உள்ளது” என தெரிவித்தார்.
10 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் வரவுள்ள ஐ.சி.சி நடுவர்கள்
சுற்றுலா இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் மற்றும் டி-20…
எது எவ்வாறாயினும், 37 வயதான கம்ரான் அக்மலுக்கு இனிவரும் காலங்களில் பாகிஸ்தான் அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பும் குறைவாக இருந்தாலும், தான் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதேநேரம், குறித்த போட்டியில் முதல் இன்னிங்ஸுக்காகத் துடுப்பெடுத்தாடிய அசார் அலி தலைமையிலான மத்திய பஞ்சாப் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 433 ஓட்டங்களை எடுத்தது.
துடுப்பாட்டத்தில் கம்ரான் அக்மல் 157 ஓட்டங்களையும், அசார் அலி 155 ஓட்டங்களையும் எடுத்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வடக்கு பஞ்சாப் அணி, முதல் இன்னிங்ஸில் 114 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 219 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதனால் இன்னிங்ஸ் மற்றும் 100 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மத்திய பஞ்சாப் அணி வெற்றியீட்டியது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<