பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்றுவரும் டெஸ்ட் தொடருக்கான குழாத்திலிருந்து இலங்கை அணியின் இளம் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் கமில் மிஷார நீக்கப்பட்டுள்ளார்.
கமில் மிஷார முதல் டெஸ்ட் போட்டியில் அணியில் இணைக்கப்படவில்லை. தொடர்ந்து தற்போது நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியிலும் இணைக்கப்படவில்லை.
எனினும் இலங்கை கிரிக்கெட் சபையின் ஒப்பந்த விதிமுறையை (ஒழுக்கம் தொடர்பான குற்றச்சாட்டு) மீறியதாக கமில் மிஷார மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், அவர் உடனடியாக நாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உடனடியாக நாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ள கமில் மிஷாரவிடம் இலங்கை கிரிக்கெட் சபை முழுமையான விசாரணையொன்றை நடத்தவுள்ளதுடன், விசாரணையின் பின்னர் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை டெஸ்ட் அணி, முதல் போட்டியை சமப்படுத்தியிருந்ததுடன், இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்சமயம் டாக்கா – மிர்பூர் மைதானத்தில் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<