பாடசாலை கிரிக்கெட்டினை மேம்படுத்தும் நோக்கில், கல்முனை வெஸ்லி கல்லூரி மற்றும் மட்டக்களப்பின் EPP அணி ஆகியவற்றின் 15 வயதுக்குட்பட்ட அணிகள் இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் கல்முனை வெஸ்லி கல்லூரி அணி 149 ஓட்ட வித்தியாசத்தில் அபார வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
>> EPP கிரிக்கெட் தொடரின் வெற்றியாளரான சிவானந்தா கல்லூரி
அணிக்கு 35 ஓவர்கள் கொண்டதாக நடைபெற்ற இந்தப் போட்டி சனிக்கிழமை (13) கல்முனை வெஸ்லி கல்லூரியினது சொந்த மைதானத்தில் ஆரம்பமாகியது.
தொடர்ந்து போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கல்முனை வெஸ்லி கல்லுரி அணியினர், முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமது தரப்பிற்காக பெற்றுக் கொண்டனர்.
பின்னர், போட்டியின் நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைய முதலில் துடுப்பாடிய கல்முனை வெஸ்லி கல்லூரி அணியினர் 32.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 224 ஓட்டங்களை குவித்தனர்.
வெஸ்லி அணியின் துடுப்பாட்டம் சார்பில் அரைச்சதம் விளாசிய சர்பான் 5 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 76 ஓட்டங்கள் பெற்றார். அதேநேரம், சஜித் 41 ஓட்டங்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
EPP அணியின் பந்துவீச்சு சார்பில் சுழல்பந்துவீச்சாளரான சோபி தனது அபார திறமையினால் 41 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தார்.
பின்னர், வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 225 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய மட்டக்களப்பு EPP அணி 27.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 75 ஓட்டங்கள் மாத்திரம் எடுத்து போட்டியில் தோல்வியடைந்தது.
EPP அணியின் துடுப்பாட்டம் சார்பில், சாரு 13 ஓட்டங்கள் பெற்று தனது தரப்பில் வீரர் ஒருவர் பெற்ற கூடுதல் ஓட்டங்களை பதிவு செய்ய கேசன் வெறும் 11 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைச் சாய்த்து தனது தரப்பு வெற்றியினை உறுதி செய்தார். அதோடு, நதீஷனும் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றி வெஸ்லி அணியின் வெற்றிக்கு பங்களிப்பு வழங்கினார்.
>> EPP கிரிக்கெட் தொடரின் வெற்றியாளரான சிவானந்தா கல்லூரி
இப்போட்டியில் பங்குபற்றியிருந்த EPP அணியினர், மட்டக்களப்பு சிறார்களின் கிரிக்கெட் விருத்தியினை எதிர்பார்த்து ஸ்தாபிக்கப்பட்ட ஒரு கிரிக்கெட் அணி என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
கல்முனை வெஸ்லி கல்லூரி – 224 (32.4) சர்பான் 76, சஜித் 41, சோபி 6/41
EPP அணி – 75 (27.3) சாரு 13, கேசன் 5/11, நதீஷன் 2/17
முடிவு – கல்முனை வெஸ்லி கல்லுரி 149 ஓட்டங்களால் வெற்றி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<