ஜப்பானில் தங்கம் வென்றார் காலிங்க குமாரகே

1th Kinami Michitaka Memorial Athletics Meet 2024

121

உலக மெய்வல்லுனர் கண்டங்களுக்கிடையிலான சுற்றுத் தொடரின் வெண்கலப் பிரிவின் கீழ் இன்று (12) ஜப்பானில் நடைபெற்ற 11ஆவது கினாமி மிச்சிடகா ஞாபகார்த்த மெய்வல்லுனர் தொடரில் (1th Kinami Michitaka Memorial Athletics Meet 2024) பங்குகொண்ட இலங்கை வீரர் காலிங்க குமாரகே தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

ஒசாகாவில் உள்ள நகெய் (யென்மர்) விளையாட்டரங்கில் இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட காலிங்க, போட்டித் தூரத்தை 45.92 செக்கன்களில் நிறைவு செய்தார். எனினும், அவருக்கு பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவிற்கான உரிய அடைவு மட்டத்தை எட்ட முடியாமல் போனது.

ஆண்களுக்கான 400 மீற்றரில் ஒலிம்பிக் போட்டிக்கான அடைவு மட்டம் 45.00 செக்கன்களாகும். எனவே காலிங்க குமாரகே இன்று பெற்றுக் கொண்ட வெற்றியின் மூலம் உலக தரவரிசையில் 1179 புள்ளியில் இருந்து 1186 புள்ளிகளை எடுத்துள்ளதுடன், 57ஆவது இடத்தில் இருந்து 50ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

எனினும் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் அவர் இதுவரை பெற்றுள்ள தரவரிசைப் புள்ளிகளின் அடிப்படையில் ஒலிம்பிக் தகுதியைப் பெறுவார் என இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

அதேபோல, இம்மாதம் 19ஆம் திகதி ஜப்பானில் நடைபெறவுள்ள சீக்கோ க்ரோன் ப்றீ மெய்வல்லுனர் போட்டியிலும் காலிங்க குமாரகே பங்குபற்றவுள்ளதால், அதில் திறமைகளை வெளிப்படுத்தி ஒலிம்பிக் அடைவு மட்டத்தை அவர் எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே, பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட நதீஷா ராமநாயக்கவிற்கு 4ஆவது இடத்தையே பெற்றுக் கொள்ள முடிந்தது. போட்டித் தூரத்தை நிறைவு செய்ய 54.02 செக்கன்களை அவர் எடுத்துக்கொண்டார்.

முன்னதாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் பொலிஸ் கழக விளையாட்டரங்கில் கடந்த 3ஆம் திகதி நடைபெற்ற டுபாய் கிராண்ட் பிரிக்ஸ் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் பங்குகொண்ட நதீஷா ராமநாயக்க பெண்களுக்கான 400 மீற்றரில் 2ஆவது இடத்தையும் பிடித்தார். குறித்த போட்டியை அவர் 54.01 செக்கன்களில் நிறைவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

எனவே, அடுத்தடுத்து இரண்டு மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றிய நதீஷாவிற்கு ஒலிம்பிக் அடைவு மட்டமான 50.95 செக்கன்களை அவரால் எட்ட முடியாமல் போனது.

இதேவேளை, பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபெற இருந்த தருஷி கருணாரத்ன, சுகயீனத்தைக் காரணம் காட்டி கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். இது இலங்கை ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தைக் கொ:டுத்தது.

இம்முறை ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டுள்ள தருஷி, இறுதியாக கடந்த வாரம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற டுபாய் கிராண்ட் பிரிக்ஸ் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் களமிறங்கினார். எனினும், போட்டியின் போது ஏற்பட்ட சோர்வு காரணமாக, 600 மீற்றர் தூரத்தை ஓடி முடித்த பிறகு போட்டியிலிருந்து அவர் வெளியேறினார்.

இலங்கை மெய்வல்லுனர்கள் அடுத்ததாக தாய்லாந்தில் இம்மாதம் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளள ஆசிய அஞ்சலோட்ட சம்பியன்ஷிப்பில் பங்குபற்றவுள்ளனர். இதில் 4×100 மீற்றர் மற்றும் 4x 400 மீற்றர் போட்டிகளில் இலங்கையின் ஆண்கள் மற்றும் பெண்கள் அஞ்சாலோட்ட அணிகள் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<