தென்னாபிரிக்கா கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 3 அணிகள் மோதும் அங்குரார்ப்பண 3TC என்றழைக்கப்படும் புதிய வகை கிரிக்கெட் போட்டியிலிருந்து வேகப் பந்துவீச்சாளரான கங்கிஸோ ரபாடா மற்றும் சகலதுறை வீரரான கிறிஸ் மொரிஸ் ஆகியோர் விலகுவதாக அறிவித்துள்ளனர்.
அத்துடன், ஏபி.டி.வில்லியர்ஸ் தலைமையிலான ஈகல்ஸ் அணியில் இடம்பிடித்த மற்றுமொரு வேகப் பந்துவீச்சாளரான சிசந்த மகாலாவும் இந்தத் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
3TC கிரிக்கெட் போட்டியின் திகதி அறிவிப்பு
கொவிட் – 19 வைரஸ் காரணமாக மற்ற நாடுகளைப் போலவே தென்னாபிரிக்காவிலும் கடந்த நான்கு மாதங்களாக கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் உள்ளது.
இந்த நிலையில், கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளை ஆரம்பிக்கும் விதமாக 3TC என்ற புதிய வகை கிரிக்கெட் தொடர் நாளை (18) செஞ்சூரியனில் உள்ள சுப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
தென்னாபிரிக்காவின் உள்ளூர் வீரர்களை உள்ளடக்கிய மூன்று அணிகள் இந்த போட்டித் தொடரில் விளையாடவுள்ளதுடன், அணிக்கு தலா 8 வீரர்கள் இணைக்கப்படவுள்ளனர்.
கிங்பிஷர்ஸ், கைட்ஸ் மற்றும் ஈகல்ஸ் ஆகிய அணிகள் இந்தத் தொடரில் களமிறங்கவுள்ளதுடன், கிங்பிஷர்ஸ் அணியின் தலைவராக கங்கிஸோ ரபாடா, கைட்ஸ் அணியின் தலைவராக குயிண்டன் டி கொக் மற்றும் ஈகல்ஸ் அணியின் தலைவராக ஏபி.டி.வில்லியர்ஸ் ஆகியோர் செயற்படவுள்ளனர்.
இதனிடையே, இந்த லீக் தொடரில் விளையாடுவதற்காக இருந்த வேகப் பந்துவீச்சாளரும், கிங்பிஷர்ஸ் அணியின் தலைவருமான கங்கிஸோ ரபாடா, அதே அணியைச் சேர்ந்த கிறிஸ் மொரிஸ் மற்றும் ஈகல்ஸ் அணி வீரர் சிசந்த மகாலா ஆகிய மூன்று வீரர்களும் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தப் போட்டித் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
இதில் ரபாடா மற்றும் சிசந்த மகாலா ஆகிய இருவரும் தமது குடும்பத்தைச் சேர்ந்த உறவினர் ஒருவர் திடீரென உயிரிழந்ததாகத் தெரிவித்து இந்தத் தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளனர். எனினும், சகலதுறை வீரரான கிறிஸ் மொரிஸ் விலகியதற்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், வெளியேறிய இந்த மூன்று வீரர்களுக்குப் பதிலாக முறையே தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளரான மக்காயா நிட்டினியின் மகன் தன்டோ நிட்டினி, பீஜோர்ன் போர்ச்சுன் மற்றும் ஜெரால்ட் கோட்ஸி ஆகியோர் மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தென்னாபிரிக்கா கிரிக்கெட்டில் புதிதாக 6 பேருக்கு கொவிட் 19 தொற்று
அத்துடன், கங்கிஸோ ரபாடா விலகியதன் காரணமாக கிங்பிஷர்ஸ் அணியின் தலைவராக ஹெய்ண்ரிட்ச் க்ளாசென் நியமிக்கப்பட்டுள்ளார்.
சொலிடரிட்டி கிண்ணம் என்ற பெயரில் நடைபெறவுள்ள இந்த ப் போட்டி முடிவடைந்த பின்னர் தென்னாபிரிக்காவில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பிக்கப்படும் என அந்நாட்டு கிரிக்கெட் சபை ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க