ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்

Zimbabwe Cricket

194
Zimbabwe Cricket

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக தென்னாபிரிக்கா நாட்டவரான ஜஸ்டின் சம்மன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி நடப்பு T20 உலகக் கிண்ணத் தொடருக்கு தகுதி பெறவில்லை. ஆபிரிக்கா பிராந்திய தகுதிகாண் சுற்றில் உகாண்டா மற்றும் நமீபியாவிடம் தோல்வியடைந்த ஜிம்பாப்வே புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

இதனையடுத்து அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த டேவ் ஹூட்டன் தனது பதவியை இராஜினாமா செய்தார். இதன் காரணமாக கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற இலங்கை சுற்றுப்பயணத்தின் போது ஜிம்பாப்வே அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக வோல்டர் சாவகுடா நியமிக்கப்பட்டார். அதேபோல, கடந்த மே மாதம் பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தின் போது ஜிம்பாப்வே அணியின் பயிற்சியாளராக ஸ்டூவர்ட் மட்சிகென்யேரி பணியாற்றினார்.

இந்நிலையில், ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக தென்னாபிரிக்காவாவைச் சேர்ந்த ஜஸ்டின் சம்மன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை இன்று (20) உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஜஸ்டின் சம்மன்ஸ் முன்னதாக தென்னாபிரிக்கா கிரிக்கெட் உயர் செயல்திறன் திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தார் மற்றும் பல உள்ளூர் அணிகளுடன் பணியாற்றியுள்ளார். அவர் 2021 மற்றும் 2023 இடைப்பட்ட காலப்பகுதியில் தென்னாபிரிக்கா அணியின் துடுப்பாட்ட ஆலோசகராகவும் பணியாற்றினார்.

இதனிடையே, ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் உதவிப் பயிற்சியாளராக முன்னாள் வீரர டியொன் இப்ராஹீம் நியமிக்கப்பட்டுள்ளார். ஜிம்பாப்வே அணிக்காக 29 டெஸ்ட் மற்றும் 82 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு நியூசிலாந்தில் பயிற்சியாளர் வாழ்க்கையை ஆரம்பித்தார்.

இதேவேளை, ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் சம்மன்ஸுடன் கலந்துரையாடிய பிறகு அணியின் ஏனைய பயிற்சியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அந்நாட்டு கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இது இவ்வாறிருக்க, ஜிம்பாப்வே 19 வயதுக்குட்பட்ட ஆடவர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஜிம்பாப்வே அணியின் முன்னாள் தலைவர் எல்டன் சிகும்புரா நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் ஜிம்பாப்வேயில் முதல்தரப் போட்டிகளில் ஆடி நமீபியா அணிக்காக ஆடிய முன்னாள் வீரர் ரங்காரிராய் நார்பர்ட் மன்யாண்டே உதவிப் பயிற்சியாளராகவும், துடுப்பாட்ட பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

அதேபோல, ஜிம்பாப்வே 19 வயதுக்குட்பட்ட ஆடவர் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக தென்னாபிரிக்காவின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் போல் ஆடம்ஸ் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<