ஆஸியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக ஜஸ்டின் நியமனம்

265

டெரன் லீமனின் பதவி விலகலையடுத்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக அவ்வணியின் முன்னாள் வீரர் ஜஸ்டின் லேங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.  

தென்னாபிரிக்காவுக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் கேப்டவுனில் நடைபெற்ற 3ஆவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்துவதற்கு முன்கூட்டியே திட்டமிட்டமை நிரூபணமாகியது. இதனையடுத்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோருக்கு தலா ஒரு வருடம் போட்டித் தடையும், போன்கிராப்ட்டுக்கு 9 மாதங்கள் போட்டித் தடையும் விதித்தது.

ஆஸியின் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு எழுவர் போட்டி

தென்னாபிரிக்காவுக்கு எதிராக கடந்த மாதம் கேப்டவுனில் நடைபெற்ற 3ஆவது டெஸ்ட் …

அதனைத்தொடர்ந்து தென்னாபிரிக்காவுடனான 4ஆவது டெஸ்ட் போட்டியின் பிறகு அவுஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் டெரன் லீமனும் தனது பதவியை இராஜினாமா செய்தார்.

இந்நிலையில், அவுஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் யார் என்பது தொடர்பில் பரவலாகப் பேசப்பட்டது. அந்த பதவிக்காக 7 பேர் தொடர்பில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அவதானம் செலுத்தியிருந்தது.

இதன்படி, அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்களான ஜஸ்டின் லாங்கர், ஜேஸன் கிளெஸ்பி, ரிக்கி பொண்டிங், பிரெட் ஹெடின், கிறிஸ் ரொஜர்ஸ், டேவிட் சாகர் மற்றும் ட்ரெவர் பெய்லிஸ் ஆகியோர் அவுஸ்திரேலிய அணியின் பயிற்றுவிப்பாளர் பதவிக்கான பட்டியலில் முன்னிலை பெற்றிருந்தனர்.

எனினும், அவுஸ்திரேலிய அணி அடுத்து பங்கேற்கவுள்ள கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஜுன் மாதம் இங்கிலாந்துடன் இடம்பெறவுள்ள நிலையில், உடனடியாகவே பயிற்சியாளரை அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என்பதால், இதற்கான காலத்தையும் அந்நாட்டு கிரிக்கெட் சபை எடுத்துக்கொண்டது.

இவ்வாறான ஒரு நிலையில், தமது பிரதான கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அவ்வணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜஸ்டின் லாங்கரை நியமித்துள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை இன்று(03) அறிவித்தது.

டெஸ்ட் தொடருக்காக அவுஸ்திரேலியா பயணிக்கும் இலங்கை அணி

இலங்கை கிரிக்கெட் அணி, அடுத்த ஆண்டின் (2019) ஆரம்பத்தில் பகலிரவு டெஸ்ட் ஒன்று …

இதன்படி, அவுஸ்திரேலிய அணியின் அனைத்து வகையான போட்டிகளுக்கும் எதிர்வரும் 4 வருடங்களுக்கு ஜஸ்டின் லாங்கர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், எதிர்வரும் மே மாதம் 22ஆம் திகதி அவர் தனது பதவியைப் பொறுப்பேற்கவுள்ளார்.

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் டெரன் லீமனை, பிரதியீடு செய்பவர்களில் முதன்மையானவராக ஜஸ்டின் லாங்கர் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அனுபவமிக்க வீரரான ஜஸ்டின், கடும் போக்குத்தன்மை கொண்டவர் என சொல்லப்பட்டாலும், தற்போதுள்ள நிலையில் அவுஸ்திரேலிய அணியை கட்டியெழுப்புகின்ற திறமை அவரிடம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, 2016ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணியின் மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப்பயணத்தின் போது முன்னாள் பயிற்றுவிப்பாளர் டெரன் லீமன் தனிப்பட்ட காரணங்களுக்காக அங்கு செல்லவில்லை. இதனால் அவுஸ்திரேலிய அணியின் தற்காலிக பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் கடமையாற்றினார். அத்துடன், கடந்த 2017இல் இலங்கை அணியுடனான T-20 தொடரின் போதும் அவ்வணியின் பயிற்றுவிப்பாளராக அவர் செயற்பட்டார்.

இதேநேரம், 2012 முதல் மேற்கு அவுஸ்திரேலிய மாநில மற்றும் பேர்த் ஸ்கோச்சர்ஸ் அணிகளின் பயிற்றுவிப்பாளராகவும் அவர் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அவுஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஜஸ்டிக் லாங்கர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  

”அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த ஆறு வருடங்களாக எனக்கு ஆதரவு அளித்த மேற்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம் மற்றும் பேர்த் ஸ்கோர்ச்சர்ஸ் அணி நிர்வாகத்திற்கு நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறேன். அதிலும் குறிப்பாக, எனது கிரிக்கெட் வாழ்க்கையின் வெற்றிக்குக் காரணமாக இருந்த அவுஸ்திரேலிய அணிக்கு பயிற்சியாளராக செயற்படுவதற்கு நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன். எமது அணியில் திறமையான வீரர்கள் இருந்தாலும், அணியை வெற்றிப் பாதையில் கொண்டு செல்வதற்கு பல சவால்களையும் சந்திக்க வேண்டியுள்ளது.

ஆனால், அவுஸ்திரேலிய மக்களின் ஆதரவு மற்றும் மரியாதையுடன் அனைத்து விதமான போட்டிகளிலும் உலகின் முன்னிலை அணியாக இருப்பதற்கு நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்வோம்” எனத் தெரிவித்தார்.

47 வயதான லாங்கர், 1993ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். இந்நிலையில், அவுஸ்திரேலிய அணிக்காக 105 டெஸ்ட் மற்றும் 8 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடியுள்ள அவர் கடந்த 2007ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

காணொளிகளைப் பார்வையிட…