56ஆவது இளையோர் (கனிஷ்ட) மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் இம்மாதம் 27ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும், இத்தொடரினை ஏற்பட்டாளர்கள் தற்போது ஏப்ரல் 3ஆம் திகதி தொடக்கம் 5ஆம் திகதி வரை நடைபெறும் விதமாக ஒத்திவைத்துள்ளனர்.
இலங்கை மெய்வல்லுனர் விளையாட்டு சங்கத்தின் (AASL) அறிக்கையின்படி, சுகததாச அரங்கு சீர் செய்யும் பணிகள் எதிர்பார்த்த காலத்திற்குள் முழுமையாக பூர்த்தியாகாத காரணத்தினாலேயே தொடர் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆசிய நகர்வல ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர்களுக்கு ஏமாற்றம்
ஆசிய நகர்வல ஓட்ட சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கையின் சமன்த புஷ்பகுமார…
தேசிய இளையோர் மெய்வல்லுனர் விளையாட்டு தொடரினை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட திகதிகளில் தியகமவில் நடத்த முடியுமாக இருந்த போதிலும், அடுத்தடுத்த மாதங்களில் சர்வதேச மட்டத்தில் நடைபெறும் தொடர்களினை கருத்திற்கொண்டு, தரமான விளையாட்டு அரங்கில் இளம் வீரர்களை பழக்கப்படுத்தும் நோக்கிலேயே சுகததாச அரங்கு முழுமையாக பூர்த்தியாகிய பின்னர் அங்கேயே இந்த தொடரினை நடாத்த திகதிகளை மாற்றியதாக இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.
சுகததாச அரங்கின் சீர் செய்யும் பணிகள் ஏற்கனவே பல தடவைகள் தொடர்ச்சியாக பிற்போடப்பட்டு வந்த நிலையில், அதிகளவான தேசிய மட்டப் போட்டிகளை சிறந்த முறையில் நடாத்த முடியாத ஒரு நிலைமை கடந்த சில வருடங்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.