தேசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் மிதுன்ராஜுக்கு ஹெட்ரிக் பதக்கம்

187

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்ற 62ஆவது தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் இரண்டாவது நாளான இன்றைய தினம் (03) ஐந்து போட்டி சாதனைகள் முறியடிக்கப்பட்டன.

இதில் 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் குருநாகல் சேர். ஜோன் கொத்தலாவல கல்லூரி மாணவன் ஆர்.எஸ் ஜயசுந்தர புதிய போட்டி சாதனையை நிகழ்த்தியிருந்தார்.

தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் முதல் நாளில் வடக்கு வீரர்கள் அபாரம்

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றுவருகின்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளின் முதல் நாளில்

அத்துடன், 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி தகுதிச் சுற்று ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட கொழும்பு றோயல் கல்லூரியின் நதுன் கவீஷ பண்டார புதிய போட்டிச் சாதனை படைத்தார். போட்டியை அவர் 14.37 செக்கன்களில் நிறைவுசெய்தார். 

இந்த நிலையில், இன்று நடைபெற்ற மைதான நிகழ்;ச்சிகளில் நான்கு போட்டிச் சாதனைகள் முறியடிக்கப்பட்டன. 

16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் பங்குகொண்ட மருதானை புனித ஜோசப் கல்லூரியின் நவீன் மாரசிங்க (16.54 மீற்றர்), 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான சம்மெட்டி எறிதலில் மாத்தறை யட்டியான மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த செவ்மினி சக்ஷிலா (30.34 மீற்றர்) மற்றும் 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தலில் அம்பாந்தோட்டை – சூரியவெவ மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த இஷாரா சமன்மலி (5.74 மீற்றர்) ஆகியோர் புதிய போட்டிச் சாதனைகளை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இது இவ்வாறிருக்க, மைதான நிகழ்ச்சிகளைப் போல வேகநடைப் போட்டிகளிலும் வடக்கு, கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த வீர வீராங்கனைகள் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்ததுடன், 2 தங்கம், 6 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியிருந்தனர்.

மிதுன்ராஜுக்கு ஹெட்ரிக் பதக்கம்

மைதான நிகழ்ச்சிகளான குண்டு எறிதல், தட்டெறிதல் மற்றும் ஈட்டி எறிதல் நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வருகின்ற யாழ். பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த எஸ். மிதுன்ராஜ், இன்று காலை நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதலில் 14.76 மீற்றர் தூரத்தை எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். 

குறித்த போட்டியில் பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரி மாணவர்களான அகலங்க விஜேசூரிய (14.94 மீற்றர்) தங்கப் பதக்கத்தையும், ஜனித் பொனிபஸ் (14.18 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தினையும் வெற்றி கொண்டனர். 

இதனையடுத்து நடைபெற்ற ஆண்களுக்கான சம்மெட்டி எறிதல் போட்டியில் பங்குகொண்ட மிதுன்ராஜ், 32.85 மீற்றர் தூரத்தை எறிந்து தங்கப் பதக்கத்தை தனதாக்கியதுடன், இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனரில் ஒரு தங்கம் மற்றும் 2 வெள்ளிப் பதக்கங்கள் உள்ளடங்கலாக 3 பதக்கங்களை வென்று அசத்தினார். 

முன்னதாக நேற்று (02) நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதலில் பங்குகொண்ட அவர், வெள்ளிப் பதக்கத்தினை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தனது மீள்வருகையை வெற்றியுடன் ஆரம்பித்த அனித்தா : டக்சிதாவுக்கு இரண்டாமிடம்

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 97ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்

இதேநேரம், குறித்த போட்டியில் பங்குகொண்ட அதே கல்லூரியைச் சேர்ந்த டி. சந்தோஷ் 31.07 மீற்றர் தூரத்தை எறிந்து வெள்ளிப் பதக்கத்தையும், பன்னிப்பிட்டிய தர்மபால கல்லூரி மாணவன் குவிந்து வெலிகல 26.39 மீற்றர் தூரத்தை எறிந்து வெண்கலப் பதக்கத்தையும் வெற்றி கொண்டனர். 

புவிதரனுக்கு தங்கம்

20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குகொண்ட யாழ். சாவகச்சேரி இந்து கல்லூரி மாணவன் ஆ. புவிதரன், 4.40 மீற்றர் உயரத்தைத் தாவி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

இறுதியாக கடந்த வருடம் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் 4.70 மீற்றர் உயரம் தாவி புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற புவிரதனுக்கு இம்முறை போட்டிகளில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்க முடியவில்லை

இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய புவிதரன், முதல் தடவையாக தேசிய மட்டப் போட்டியொன்றில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இதேநேரம், குறித்த போட்டியில் பங்குகொண்ட யாழ். தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி மாணவன் எஸ். சுகிகேரதன், 4.10 மீற்றர் உயரத்தைத் தாவி வெள்ளிப் பதக்கத்தையும், யாழ். மானிப்பாய் இந்து கல்லூரியின் எஸ்.கபில்ஷன் 4.00 மீற்றர் உயரத்தைத் தாவி வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். 

நிஷோபனுக்கு முதல் பதக்கம்

20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் வவுனியா மாவட்ட மெய்வல்லுனர் சங்கம் சார்பாக பங்குகொண்ட கே. நிஷோபன் வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தார். போட்டியை நிறைவுசெய்ய 16 நிமிடங்கள் 27.69 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார்.

கடந்த 2 வருடங்களாக வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் மரதன் ஓட்ட வீரரான நவனீதனிடம் பயிற்சிகளைப் பெற்று வருகின்ற நிஷோபன், பாடசாலை மட்டப் போட்டிகளில் 10 ஆயிரம் மற்றும் 5 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றிகளையும் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், குறித்த போட்டியில் பங்குகொண்ட புஸ்ஸல்லாவ இந்து தேசிய பாடசாலையைச் சேர்ந்த ஜே. குகேந்திர பிரசாத் ஐந்தாவது இடத்தையும், அக்கரைப்பற்று பாயிஸா மகா வித்தியாலயத்தின் ஜாஸிக் அக்தர் 9 ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர். 

தெற்காசிய போட்டிகளுக்குத் தகுதி பெற்ற சண்முகேஸ்வரன்: சபான், அரவிந்த் வெற்றி

தெற்காசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டத்தில்

மொஹமட் ரிலாவுக்கு முதல் வெற்றி 

கிழக்கு மாகாணம், திருகோணமலை மாவட்டம், கிண்ணியா மத்திய கல்லூரியைச் சேர்ந்த மொஹமட் ரிலா போட்டிகளின் இரண்டாவது நாளான இன்று (03) நடைபெற்ற 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார். போட்டியை நிறைவு செய்ய 23.28 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார்.

தேசிய மட்ட போட்டியொன்றில் ரிலா வென்றெடுத்த முதலாவது பதக்கம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், குறித்த போட்டியில் பங்குகொண்ட குருநாகல் சேர். ஜோன் கொத்தலாவல கல்லூரி மாணவன் ஆர்.எஸ் ஜயசுந்தர புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். போட்டியை அவர் 22.36 செக்கன்களில் நிறைவுசெய்தார். 

அத்துடன், போட்டியை 23.25 செக்கன்களில் நிறைவுசெய்த நுகேகொட சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவன் ஹசரின்த தென்னகோன் வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார். 

பாஷயூர் மாணவிகளுக்கு இரு பதக்கங்கள்

தேசிய மட்டத்தில் நடைபெறுகின்ற பளுதூக்கல் போட்டிகளில் அண்மைக்காலமாக திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்று வருகின்ற யாழ். பாஷயூர் புனித அந்தோனியார் ரோமன் கத்தோலிக்க மகளிர் வித்தியாலய மாணவிகளான ஜே. சுகன்யா மற்றும் மேரி லக்ஷிகா ஆகிய வீராங்கனைகள் இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனரில் பெண்களுக்கான சம்மெட்டி எறிதலில் பதக்கங்களை வென்று அசத்தியிருந்தனர்.

இதில் 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான சம்மெட்டி எறிதலில் பங்குகொண்ட ஜே. சுகன்யா, 30.40 மீற்றர் தூரத்தை எறிந்து வெள்ளிப் பதக்கத்தையும், 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான சம்மெட்டி எறிதலில் பங்குகொண்ட மேரி லக்ஷிகா 23.51 மீற்றர் தூரத்தை எறிந்து வெள்ளிப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்.

 மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க