தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்ற 63ஆவது தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது நாளான இன்று (08) 4 புதிய போட்டிச் சாதனைகள் நிலைநாட்டப்பட்டன.
இதில் இன்று காலை நடைபெற்ற 23 வயதின்கீழ் ஆண்களுக்கான தட்டெறிதலில் யாழ். பருத்தித்துறை ஹார்ட்லிக் கல்லூரியைச் சேர்ந்த சுசீந்திரகுமார் மிதுன்ராஜ், 43.61 மீட்டர் தூரத்திற்கு தட்டை எறிந்து புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
முன்னதாக 2010இல் இலங்கை இராணுவம் சார்பில் போட்டியிட்ட சரித் கப்புகொட்டுவவினால் நிலைநாட்டப்பட்டிருந்த 42.64 மீட்டர் என்ற போட்டிச் சாதனையை 13 ஆண்டுகளுனுக்குப் பிறகு மிதுன்ராஜ் புதுப்பித்துள்ளார்.
இதனிடையே, மிதுன்ராஜின் சக கல்லூரி வீரர் பிரேம்குமார் மிதுஷன், 35.32 மீட்டர் தூரத்திற்கு தட்டை எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
இந்த நிலையில், இன்று மாலை நடைபெற்ற 23 வயதின்கீழ் ஆண்களுக்கான குண்;டெறிதல் போட்டியில் பங்குபற்றிய மிதுன்ராஜ், 13.06 மீட்டர் தூரத்தைப் பதிவு செய்து தங்கப் பதக்கம் வென்றார்.
தேசிய மட்டப் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிகளை ஈட்டி வருகின்ற மிதுன்ராஜ், தட்டெறிதல், ஈட்டி எறிதல் மற்றும் குண்டெறிதல் ஆகிய போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றி பதக்கங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவருக்கு ஹார்ட்லி கல்லூரியின் மைதான நிகழ்ச்சிக்கான பயிற்சியாளரான ஹரிஹரன் பயிற்சி அளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- கோலூன்றிப் பாய்தலில் பதக்கங்களை வென்ற யாழ். வீரர்கள்
- ஆசிய இளையோர் மெய்வல்லுனரில் அயோமாலுக்கு வெண்கலப் பதக்கம்
அம்பகமுவ மத்திய கல்லூரியின் அயோமால் அகலங்க, 18 வயதின்கீழ் ஆண்களுக்கான 400 மீட்டர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்
குறித்த போட்டியை 52.66 செக்கன்களில் நிறைவு செய்த அவர், 2016ஆம் ஆண்டு அக்குரம்பொட வீரகெப்படிப்பொல மகா வித்தியாலய வீரர்
ஏ. தர்ஷன (52.92 செக்.) நிகழ்த்திய சாதனையை 7 ஆண்டுகளுக்குப் பிறகு முறியடித்தார்.
முன்னதாக கடந்த வாரம் உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 5ஆவது ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் ஆண்களுக்கான400 மீட்டர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் (51.40 செக்.) அயோமால் வெண்கலப் பதக்கம் வென்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
வத்தளை லைசியம் சர்வதேசப் பாடாலை வீரர் தரூஷ மெண்டிஸ் 16 வயதின்கீழ் ஆண்களுக்கான உயரம் பாய்தலில் 1.94 மீட்டர் உயரத்தை தாவி புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
இதேவேளை, 16 வயதின்கீழ் பெண்களுக்கான 300 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியை 46.44 செக்கன்களில் நிறைவு செய்ததன் மூலம் கண்டி மஹமாயா பெண்கள் கல்லூரி வீராங்கனை எஸ். சேனவிரத்ன புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.
ரிபாய்க்கு இரட்டைப் பதக்கம்
18 வயதின்கீழ் ஆண்களுக்கான 110 மீட்டர் சட்டவேலி ஓட்டப் போட்டியை 15.01 செக்கன்களில் நிறைவு செய்ததன் மூலம் கண்டி திருத்துவக் கல்லூரி வீரர் ரிபாய் அதீப் தங்கப் பதக்கம் வென்றார்.
இதனையடுத்து நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீட்டர் சட்டவேலி ஓட்டத்தில் பங்குபற்றி அவர், போட்டித் தூரத்தை 56.05 செக்கன்களில் நிறைவு செய்து வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தார்.
3000 மீட்டரில் கலக்கிய கண்டி வீரர்கள்
இதேவேளை, 18 வயதின்கீழ் ஆண்களுக்கான 3000 மீட்டர் ஓட்டப் போட்டியை 9 நிமிடங்கள் 26.09 செக்கன்களில் நிறைவுசெய்த ரஜவெல்ல இந்து தேசிய கல்லூரி வீரர் எச். அபினேஷ் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். அவருடன் குறித்த போட்டியில் பங்குபற்றிய பதுளை சரஸ்வதி மத்திய கல்லூரி வீரர் கெ. திவாகர் (9:26.39 செக்.) வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
இந்த நிலையில், கண்டி திகன, இந்து தேசிய கல்லூரி வீராங்கனை என். அபிநயா, 18 வயதின்கீழ் பெண்களுக்கான 3000 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார். போட்டியை நிறைவு செய்ய 11 நிமிடங்கள், 19.07 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார்.
இதுஇவ்வறிருக்க, 23 வயதின்;கீழ் ஆண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் தடை தாண்டல் ஓட்டப் போட்டியில் ரஜவெல்ல இந்து தேசிய கல்லூரி வீரர் ஆர். யதீஷான் (10 நிமி. 16.17 செக்.) வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தார்.
கோலூன்றிப் பாய்தலில் யாழ். வீரர்கள் பதக்க மழை
23 வயதின்கீழ் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் சார்பில் பங்குபற்றிய என். டக்சிதா தங்கப் பதக்கம் வென்றார். குறித்த போட்டியில் அவர் 3.40 மீட்டர் உயரத்தை பதிவுசெய்தார்.
யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரியின் பழைய மாணவியான இவர், கடந்த ஆண்டு தேசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் 20 வயதின்கீழ் பிரிவில் இதே உயரத்தைத் தாவி தங்கப் பதக்கம் வென்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
20 வயதின்கீழ் பெண்களுக்கா கோலூன்றிப் பாய்தலில் யாழ். சுழிபுரம், விக்ரோறியாக் கல்லூரி வீராங்கனை எஸ். கிறிஸ்டேஜ், 2.60 மீட்டர் உயரம் தாவி வெள்ளிப் பதக்கம் வென்றார். கனிஷ்ட தேசிய மட்ட கோலூன்றிப் பாய்தலில் அந்தக் கல்லூரி பதக்கம் வென்றது இதுவே முதல் தடவையாகும்.
இதனிடையே, 18 வயதின்கீழ் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி வீராங்கனை பி. அபிலாஷினி, 2.90 மீட்டர் உயரம் தாவி தங்கப் பதக்கம் வென்றார்.
அவருடன் குறித்த போட்டியில் பங்குகொண்ட அதே பாடசாலையைச் சேர்ந்த கே. மாதங்கி, 2.30 மீட்டர் வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார்.
ஆதிப்புக்கு தங்கம்
18 வயதின்கீழ் ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப் போட்டியை 22.74 செக்கன்களில் நிறைவு செய்த கொழும்பு ஏசியன் சர்வதேச பாடசாலை வீரர் ஆதிப் மொஹிடீன் தங்கப் பதக்கம் வென்றார்.
தேவமதுமிதன், ஹம்தான், சங்கீதாவுக்கு வெண்கலப் பதக்கம்
20 வயதின்கீழ் ஆண்களுக்கான குண்டெறிதலில் பங்குபற்றிய திருகோணமலை புனித ஜோசப் கல்லூரி வீரர் கே. தேவமதுமிதன் வெண்கலப் பதக்கம் வென்றார். போட்டியில் அவர் 12.68 மீட்டர் தூரத்தைப் பதிவு செய்தார்.
இதேவேளை, 20 வயதின்கீழ் ஆண்களுக்கான 400 மீட்டர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி வீரர் அலா ஹ்மதான் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.
கடந்த சில வாரங்களுக்கு முன் இதே விiயாட்டாரங்கில் நடைபெற்ற ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் தொடருக்கான தகுதிகாண் போட்டியிலும் பங்குகொண்ட அவர், ஆண்களுக்கான 400 மீட்டர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் 2ஆவது இடத்தைப் பிடித்தமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கின் நட்சத்திர குறுந்தூர வீரர் அஷ்ரப் லதீப் மற்றும் எம்.எச் சபீர் அலி ஆகிய இருவரும் ஹம்தானுக்கு ஆரம்ப காலத்திலிருந்து பயிற்சிகளை வழங்கி வருகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இதேவேளை, 20 வயதின்கீழ் பெண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் நெல்லியடி மத்திய கல்லூரி வீராங்கனை விநாயகமூர்த்தி சங்கீதா (30.48 மீற்றர்) வெண்கலப் பதக்கம் வென்றார்.
முப்பாய்ச்சலில் அசத்திய அபிலேஷ்கா
16 வயதின்கீழ் பெண்களுக்கான முப்பாய்ச்சலில் பங்குபற்றிய வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை வீராங்கனை சத்தியமூர்த்தி அபிலேஷ்கா 12.98 மீட்டர் தூரத்தைப் பாய்ந்து தங்கப் பதக்கத்தை வென்றார்.
நாளை (09) போட்டியின் 3ஆவது நாளாகும்.
>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<