தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் இன்று (07) ஆரம்பமான 63ஆவது தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் 5 போட்டிச் சாதனைகள் முறியடிக்கப்பட்டன.
18 வயதின்கீழ் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியைச் சேர்ந்த துஷேன் சில்வா, 4.50 மீட்டர் உயரத்தைத் தாவி புதிய கனிஷ்ட சாதனையை நிலைநாட்டி தங்கப் பதக்கம் வென்றார்.
முன்னதாக 2019இல் யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி வீரர் அருந்தவராசா பவிதரன் நிலைநாட்டிய 4.40 மீட்டர் என்ற சாதனையை துஷேன் சில்வா 4 ஆண்டுகளுக்குப் பிறகு முறியடித்தார்.
இதனிடையே, உஸ்பெகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற 5ஆவது ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் (4.70 மீட்டர்) துஷேன் சில்வா வெள்ளிப் பதக்கம் வென்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
16 வயதின்கீழ் ஆண்களுக்கான 300 மீட்டர் சட்டவேலி ஓட்டப் போட்டியை 40.55 செக்கன்களில் நிறைவு செய்ததன் மூலம் அம்பகமுவ மத்திய கல்லூரி வீரர் ஏ. சந்தீப புதிய போட்டிச் சாதனையை நிலைநாட்டினார். இதே வயதுப் பிரிவில் பெண்களுக்கான 300 மீட்டர் சட்டவேலி ஓட்டப் போட்டியை 47.30 செக்கன்களில் நிறைவு செய்த அம்பகமுவ மத்திய கல்லூரி வீராங்கனை எஸ். ஹிமாஷனி புதிய போட்டிச் சாதனையை நிலைநாட்டியிருந்தார்.
இதனிடையே, 20 வயதின்கீழ் பெண்களுக்கான 300 மீட்டர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் கண்டி மஹமாயா பெண்கள் கல்லூரியைச் சேர்ந்த டி. கஹங்கம (14.45 செக்.) மற்றும் அதே போட்டி நிகழ்ச்சியில் வயதின்கீழ் பெண்கள் பிரிவில் கண்டி ஸ்வர்ணமாலி பெண்கள் கல்லூரியைச் சேர்ந்த எல். திஸாநாயக (14.51 செக்.) ஆகிய இருவரும் புதிய போட்டிச் சாதனையை நிலைநாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
- ஜப்பானில் மீண்டும் முதலிடம் பிடித்த கயன்திகா
- ஜப்பானில் மற்றுமொரு மைல்கல்லை எட்டிய அருண தர்ஷன
- தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் தொடர் தியகமவில்
இதேவேளை, இன்று நடைபெற்ற மைதான மற்றும் சுவட்டு நிகழ்ச்சிகளில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் வீரர்களும் திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களை சுவீகரித்தனர்.
18 வயதின்கீழ் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி வீரர் எஸ். கஜணன் 3.80 மீட்டர் உயரம் தாவி வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
23 வயதின்கீழ் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரியின் சுகுமார் திசாந்த், 4.00 மீட்டர் உயரம் தாவி தங்கப் பதக்கத்தையும், அதே கல்லூரியின் இடியமீன் அபினயன் 3.90 மீட்டர் உயரம் தாவி வெள்ளிப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.
இதனிடையே, 18 வயதின்கீழ் பெண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் வல்வெட்டித்துறை – பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையைச் சேர்ந்த செல்வகுமார் செவ்வானம், 29.46 மீட்டர் தூரத்தை எறிந்து தங்கப் பதக்கத்தை வென்றார்.
20 வயதின்கீழ் ஆண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டப் போட்டியை 16 நிமிடங்கள், 07.14 செக்கன்களில் நிறைவுசெய்த மாத்தளை இந்து தேசிய கல்லூரி வீரர் எஸ். துதிஹர்ஷிதன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
அதே போட்டியில் பங்குகொண்ட கிளிநொச்சி, முழங்காவில் தேசிய பாடசாலை வீரர் சுமன் கீரண் (16:12.63 செக்.) வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுததமை குறிப்பிடத்தக்கது.
16 வயதின்கீழ் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் வத்தளை ழுமுஐ சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த உமர் அர்ஷாத் தங்கப் பதக்கம் வென்றார். குறித்த போட்டியில் அவர் 6.45 மீட்டர் தூரத்தைப் பதிவுசெய்தார்.
நாளை (08) போட்டியின் இரண்டாவது நாளாகும்.
>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<