இலங்கை சாதனையை மீண்டும் தவறவிட்ட புவிதரன்

Junior National Athletics Championship 2022

263

கொழும்பு சுகததாச அரங்கில் நடைபெற்று வருகின்ற கனிஷ்ட தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் மூன்றாவது நாளான இன்று (08) நடைபெற்ற 23 வயதின்கீழ் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குபற்றிய யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் முன்னாள் வீரர் அருந்தவராசா புவிதரன், 5.00 மீட்டர் உயரம் தாவி புதிய கனிஷ்ட தேசிய சாதனை நிலைநாட்டினார்.

இந்தப் போட்டியின் முதல் முயற்சியில் 4.70 மீட்டர் உயரத்தைத் தாவிய புவிதரன், அதன்பிறகு 4.80, 4.90, 5.00 மீட்டர் உயரங்களை முதல் முயற்சியிலேயே தாவி அசத்தினார்.

இதனையடுத்து, இஷார சந்தருவன் 2017ஆம் ஆண்டு 5.11 மீட்டர் உயரத்தைத் தாவி நிலைநாட்டிய இலங்கை சாதனையை முறியடிப்பதற்கான முயற்சியில் புவிதரன் களமிறங்கினார். எனினும், தனக்கு கிடைத்த மூன்று முயற்சியிலும் 5.11 மீட்டர் உயரத்தைத் தாவுகின்ற வாய்ப்பை அவர் நூழிலையில் தவறவிட்டார்.

இறுதியில் 5.00 மீட்டர் உயரம் தாவிய புவிதரன் தங்கப் பதக்கத்துடன் ஆறுதல் அடைந்தார்.

எவ்வாறாயினும், 2015ஆம் ஆண்டு இஷார சந்தருவன் 4.70 மீட்டர் உயரம் தாவி நிலைநாட்டிய 23 வயதின்கீழ் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் நிகழ்ச்சிக்கான கனிஷ்ட சாதனையை 6 ஆண்டுகளுக்குப் பிறகு முறியடித்த அவர் புதிய கனிஷ்ட தேசிய சாதனை படைத்தார்.

இறுதியாக கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவுக்கான 2ஆவது தகுதிகாண் போட்டியில் 5.10 மீட்டர் உயரத்தைத் தாவி முதலிடத்தைப் பிடித்த அவர், இலங்கை சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை 0.1 மீட்டரினால் துரதிஷ்டவசமாக தவறவிட்டார்.

இப்போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற புவிதரன், தற்போது இலங்கை இராணுவ விளையாட்டுக் கழகத்தில் இணைந்து கொண்டாலும், யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் பயிற்சியாளர் கணாதீபன் அவருக்கு தொடர்ந்து பயிற்சி அளித்துவருகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

கோலூன்றிப் பாய்தலில் யாழ் மாணவி அபிலாஷினி புதிய சாதனை

இதேநேரம், 4.40 மீட்டர் உயரங்களைத் தாவிய யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரியின் சுகுமார் திஷாந்த் வெள்ளிப் பதக்கத்தினையும், யாழ். மகாஜனா கல்லூரியின் முன்னாள் வீரரான சுரேஷ்குமார் சுகிகேரதன் வெண்கலப் பதக்கத்தினையும் வெற்றிகொண்டனர்.

இதேவேளை, 20 வயதின்கீழ் ஆண்களுக்கான சம்மெட்டி எறிதலில் யாழ். பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த எஸ். மிதுன்ராஜ் புதிய கனிஷ்ட தேசிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

குண்டு எறிதல், ஈட்டி எறிதல், சம்மெட்டி எறிதல் மற்றும் தட்டெறிதல் என நான்கு வகையான மைதான நிகழ்ச்சிகளில் அண்மைக்காலமாக தொடர்ந்து ஜொலித்து வருகின்ற 19 வயதான மிதுன்ராஜ், 40.45 மீட்டர் தூரம் எறிந்து, அதே பாடசாலையின் முன்னாள் வீரரான எஸ். பிரகாஷ்ராஜினால் கடந்த 2018ஆம் ஆண்டு நிலைநாட்டிய கனிஷ்ட தேசிய சாதனையை (39.73 மீட்டர்) அவர் இவ்வாறு முறியடித்து கனிஷ்ட பிரிவில் இலங்கை சாதனைக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார்.

முன்னதாக நேற்று நடைபெற்ற 20 வயதின்கீழ் ஆண்களுக்கான குண்டு எறிதலில் பங்குகொண்ட எஸ். மிதுன்ராஜ் 15.13 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.

இதனிடையே, இந்தப் போட்டித் தொடரின் கடைசி நாளான நாளை (10) நடைபெறவுள்ள 20 வயதின்கீழ் ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியிலும் அவர் களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 23 வயதின்கீழ் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். மெய்வல்லுனர் சங்கம் சார்பில் பங்குகொண்ட என். டக்சிதா தங்கப் பதக்கம் வென்றார். குறித்த போட்டியில் அவர் 3.40 மீட்டர் உயரத்தை பதிவுசெய்தார்.

அவருடன் போட்டியிட்ட யாழ். மகாஜனா கல்லூரியின் சி. ஹெரினா, 2.80 மீட்டர் உயரம் தாவி வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தார்.

கனிஷ்ட மெய்வல்லுனரில் மிதுன், அபினயன், ஜதூஷிகாவுக்கு தங்கம்

இது இவ்வாறிருக்க, இன்று நடைபெற்ற போட்டிகளின் முடிவில் புவிதரன் மற்றும் மிதுன்ராஜின் போட்டி சாதனைகளை விட இன்னும் 2 போட்டி சாதனைகள் புதுப்பிக்கப்பட்டன.

20 வயதின்கீழ் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் ஈட்டியை 69.30 மீட்டர் தூரம் எறிந்ததன் மூலம் பம்பலப்பிட்டிய புனித பேதுரு கல்லூரி வீரர் ருமேஷ் தரங்க புதிய சாதனையை நிலைநாட்டினார்.

அதேபோல, 20 வயதின்கீழ் பெண்களுக்கான சம்மெட்டி எறிதல் போட்டியில் 37.47 மீட்டர் தூரத்தைப் பதிவு செய்த மாத்தறை – யடியான மகா வித்தியாலய வீராங்கனை நிஹின்சா மந்தினி புதிய போட்டி சாதனையை நிலைநாட்டினார்.

நாளை (10) போட்டியின் நான்காவது மற்றும் கடைசி நாளாகும்.

>>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<