இலங்கை மெய்வல்லுனர் சங்க நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக ஏற்பாடு செய்திருந்த கனிஷ்ட தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் நேற்று (10) வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது.
கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் கடந்த 7ஆம் திகதி ஆரம்பமாகிய கனிஷ்ட தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் நாடளாவிய ரீதியில் இருந்து சுமார் 2500 வீர, வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
16, 18, 20 மற்றும் 23 ஆகிய நான்கு வயதுப் பிரிவுகளுக்காக நடைபெற்ற இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனர் தொடரில் 15 போட்டி சாதனைகள் நிலைநாட்டப்பட்டன.
இதில் ஆண்கள் பிரிவில் 6 புதிய சாதனைகளும், பெண்கள் பிரிவில் 9 புதிய சாதனைகளும் நிலைநாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
>> கனிஷ்ட மெய்வல்லுனரில் ஹெட்ரிக் தங்கம் வென்ற மிதுன்ராஜ்
அதிலும் குறிப்பாக வடக்கைச் சேர்ந்த நான்கு வீரர்கள் புதிய கனிஷ்ட தேசிய சாதனைகளை நிலைநாட்டியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இதனிடையே, இம்முறை கனிஷ்ட தேசிய மெய்வல்லுனர் போட்டியில் அதிசிறந்த ஆற்றல் வெளிப்பாட்டாளருக்கான விருதை பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரியின் ஹிருஷ ஹஷேன் பெற்றுக்கொண்டார்.
20 வயதின்கீழ் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் 7.76 மீட்டர் தூரம் பாய்ந்ததன் மூலம் அதிகபட்ச புள்ளிகளைப் பெற்று அதிசிறந்த ஆற்றல் வெளிப்பாட்டாளராக அவர் தெரிவானார். அத்துடன் 20 வயதின்கீழ் ஆண்கள் பிரிவில் அதிசிறந்த மெய்வல்லுனருக்கான விருதையும் தட்டிச்சென்றார்.
நீளம் பாய்தலைப் போல குறுந்தூர ஓட்டத்திலும் முன்னணி கனிஷ்ட வீரர்களில் ஒருவராக வலம்வந்து கொண்டிருக்கின்ற ஹிருஷ, இன்று பிற்பகல் நடைபெற்ற 20 வயதின்கீழ் ஆண்களுக்கான 100 மீட்டரில் 2ஆவது இடத்தைப் பிடித்தார். குறித்த போட்டியை அவர் 11.25 செக்கன்களில் நிறைவு செய்தார்.
இதனிடையே, 20 வயதின்கீழ் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியை 54.34 செக்கன்களில் ஓடி முடித்து புதிய சாதனை நிலைநாட்டிய வலல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரியின் தருஷி கருணாரட்ன, பெண்கள் பிரிவில் அதிசிறந்த மெய்வல்லுனர் விருதை தனதாக்கிக்கொண்டார்.
முன்னதாக போட்டிகளின் இரண்டாவது நாளன்று நடைபெற்ற பெண்களுக்கான 800 மீட்டரில் பங்குகொண்ட அவர், போட்டியை 2 நிமிடங்கள் 10.18 செக்கன்களில் நிறைவு செய்து முதலிடம் பிடித்தார்.
இதுஇவ்வாறிருக்க, 16 வயதின்கீழ் ஆண்களுக்கான குண்டு எறிதலில் 15.50 மீட்டர் தூரத்தைப் பதிவு செய்த அநுராதபுரம் மத்திய கல்லூரி வீரர் எச்.யூ. ஜயசிங்க 16 வயதின்கீழ் ஆண்கள் பிரிவில் அதிசிறந்த மெய்வல்லுனருக்கான விருதைப் வென்றெடுத்தார்.
அதே வயதுப் பிரிவில் பெண்களுக்கான நீளம் பாய்தலில் 5.53 மீட்டர் தூரம் பாய்ந்த நீர்கொழும்பு புனித லோரன்ஸ் கன்னியாஸ்திரிகள் மடம் பாடசாலையின் ஓஷினி காவிந்தியா கொடிகார பெண்கள் பிரிவில் அதிசிறந்த மெய்வல்லுனராகத் தெரிவானார்.
18 வயதின்கீழ் ஆண்களுக்கான குண்டு எறிதலில் 16.98 மீட்டர் தூரத்தைப் பதிவு செய்து புதிய கனிஷ்ட சாதனை படைத்த பாணந்துறை றோயல் வீரர் ஜயவி ரன்ஹிந்து அல்விஸ், 18 வயதின்கீழ் ஆண்கள் பிரிவில் அதிசிறந்த மெய்வல்லுனராக தெரிவாக, 18 வயதின்கீழ் பெண்களுக்கான நீளம் பாய்தலில் 5.98 மீட்டர் தூரம் பாய்ந்து புதிய சாதனை நிலைநாட்டிய பிபில நன்னபுராவ மகா வித்தியாலயத்தின் மதுஷானி ஹேரத் பெண்கள் பிரிவில் அதிசிறந்த மெய்வல்லுனராகவும் தெரிவாகினார்.
இதேவேளை, 23 வயதின்கீ;ழ் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் 7.78 மீட்டர் தூரத்தைப் பதிவு செய்த கே. பியசிறி குறித்த வயதுப் பிரிவில் அதிசிறந்த மெய்வல்லுனராகத் தெரிவானார்.
அதேபோல, 23 வயதின்கீழ் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியை 2 நிமிடங்கள் 08.44 செக்கன்களில் ஓடிமுடித்து புதிய சாதனை நிலைநாட்டிய இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த ஷானிக்கா லக்ஷானி பெண்கள் பிரிவில் அதிசிறந்த மெய்வல்லுனராக தெரிவானார்.
>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<