சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள புதிய T20I வீரர்கள் தரவரிசையில், பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருந்த இலங்கை அணி வீரர் வனிந்து ஹஸரங்க மூன்றாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.
சுற்றுலா இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட T20I தொடரின் முதல் 3 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவுஸ்திரேலிய அணி தொடரை 3-0 என கைப்பற்றியுள்ளது.
>>T20I தொடரினைக் கைப்பற்றிய அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி
அதன்படி, முதல் இரண்டு போட்டிகளில் விளையாடி வனிந்து ஹஸரங்க 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த போதும், கொவிட்-19 தொற்று காரணமாக மூன்றாவது போட்டியில் விளையாடவில்லை. எனவே, தரவரிசையில் மூன்றாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான T20I தொடரின் முதல் போட்டியில் 12 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், இரண்டாவது போட்டியில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியதுடன், மொத்தமாக 8 விக்கெட்டுகளை சாய்த்த அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஜோஷ் ஹெஷல்வூட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், தென்னாபிரிக்காவின் டெப்ரைஷ் ஷம்ஷி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
அதேநேரம், இலங்கை அணிசார்பில் சிறந்த பந்துவீச்சு பிரதிகளை பதிவுசெய்துவரும் துஷ்மந்த சமீர ஒரு இடம் முன்னேறி 28வது இடத்தையும், மஹீஷ் தீக்ஷன 5 இடங்கள் முன்னேறி பந்துவீச்சாளர்கள் வரிசையில் 29வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
துடுப்பாட்ட தரவரிசையை பொருத்தவரை இலங்கை அணிக்காக தொடர்ந்தும் T20I போட்டிகளில் ஓட்டங்களை குவித்துவரும் பெதும் நிஸ்ஸங்க 21வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இவருடன் தசுன் ஷானக 8 இடங்கள் முன்னேறி 86வது இடத்தை பிடித்துள்ளதுன், சரித் அசலங்க 42வது இடத்திலிருந்து 3 இடங்கள் பின்தள்ளி 45வது இடத்தை பிடித்துள்ளார். துடுப்பாட்ட தரவரிசையில் பாகிஸ்தான் அணியின் தலைவர் பாபர் அஷாம் தொடர்ந்தும் முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.
சகலதுறை வீரர்கள் தரவரிசையிலும் இலங்கை அணியின் வனிந்து ஹஸரங்க ஒரு இடம் பின்தள்ளி 5வது இடத்தை பிடித்துள்ளார். இந்த தரவவரிசையில் முதலிடத்தை ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் மொஹமட் நபி தக்கவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<