அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் ஹெசல்வூட் முதுகு உபாதை ஒன்றின் காரணமாக, அடுத்த வாரம் இடம்பெறவுள்ள இலங்கை அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரிலிருந்து முழுமையாக வெளியேறியிருக்கின்றார்.
ஹேசல்வூட்டிற்கு பதிலாக மேற்கு அவுஸ்திரேலிய பிராந்தியத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஜை றிச்சார்ட்ஸனுக்கு, அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கையுடனான டெஸ்ட் போட்டிகளில் விளையாட அழைப்பு விடுத்திருக்கின்றது.
ஹேசல்வூட்டின் உபாதை தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் உடற்பயிற்சி நிபுணர் டேவிட் பேக்லி, ஹேசல்வூட் இப்போது உபாதையில் இருக்கின்ற போதிலும் அவரினால் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் அவுஸ்திரேலிய அணிக்காக பூரண உடற்தகுதியுடன் ஆட முடியும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கை – ஆஸி. பகலிரவு டெஸ்ட் போட்டியை பார்வையிட இலவச அனுமதி
அவுஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஜோஸ் ஹேசல்வூட் முன்னதாக, கடந்த ஆண்டின் மே மாதத்தின் போதும் முதுகு உபாதை ஒன்றினை சந்திந்திருந்ததோடு, 2010 ஆம் ஆண்டில் இந்திய அணியுடனான டெஸ்ட் தொடர் ஒன்றின் போதும் இதேமாதிரியான உபாதையினால் அவுஸ்திரேலிய அணிக்காக விளையாடும் சந்தர்ப்பத்தினை இழந்திருந்தார்.
இதுவரையில் ஹேசல்வூட் அவுஸ்திரேலிய அணிக்காக 27 என்ற சிறந்த பந்துவீச்சு சராசரியோடு 164 விக்கெட்டுக்களை சாய்த்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் ஹேசல்வூட்டின் இடத்தினை நிரப்ப வந்திருக்கும் 22 வயதேயான ஜை றிச்சர்ட்ஸன், இந்திய அணியுடன் இடம்பெற்று முடிந்திருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 6 விக்கெட்டுக்களை கைப்பற்றி அசத்தலாக செயற்பட்டிருந்ததார்.
அத்தோடு அவுஸ்திரேலிய உள்ளூர் முதல்தரப் போட்டிகளிலும் ஜொலித்திருக்கும் றிச்சர்ட்ஸன் அவற்றில், 19.03 என்ற சராசரியுடன் 27 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜை றிச்சர்ட்ஸன் டெஸ்ட் அணியில் உள்வாங்கப்பட்டது தொடர்பில் பேசியிருந்த அவுஸ்திரேலிய அணியின் சிரேஷ்ட தேர்வாளர் ட்ரெவர் ஹோன்ஸ் “ஜை றிச்சர்ட்ஸனே ஜோஸின் இடத்தினை நிரப்ப மிகவும் பொருத்தமானவர் “ எனக் குறிப்பிட்டிருந்தார்.
றிச்சர்ட்ஸன் கடந்த ஆண்டு இடம்பெற்ற தென்னாபிரிக்க டெஸ்ட் தொடருக்காக, அவுஸ்திரேலிய அணிக்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும் எந்தவொரு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியிருக்கவில்லை. அதன்படி அவர், இலங்கை அணியுடனான தொடர் மூலமே தனது கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடவிருக்கின்றார்.
அவுஸ்திரேலிய அணி இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரினை எதிர்வரும் 23 ஆம் திகதி பிரிஸ்பேனில் பகலிரவு ஆட்டமாக நடைபெறும் போட்டியுடன் ஆரம்பம் செய்கின்றது.
பிரிஸ்பேன் போட்டியின் பின்னர், இரண்டு அணிகளும் கென்பரா நகரில் பெப்ரவரி 1 ஆம் திகதி டெஸ்ட் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டியில் மோதுகின்றன.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<