அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நேற்றைய தினம் (28) நடைபெறவிருந்த போட்டி கைவிடப்பட்டமை ஏமாற்றமளித்த போதிலும், தற்போதைய நிலைமையைப் பார்க்கும்போது இந்த முடிவைப் புரிந்துகொள்ள முடியும் என இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
T20 உலகக் கிண்ணத் தொடரில் மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக கைவிட தீர்மானிக்கப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வீதம் பகிர்ந்தளிக்கப்பட்டது.
முன்னதாக மழையின் இடையூறு காரணமாக டக்வர்த் லூவிஸ் முறைப்படி அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 5 ஓட்டங்களால் தோல்வியையும் சந்திக்க வேண்டியிருந்தது.
எவ்வாறாயினும், இந்தப் போட்டியுடன் இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் மழை காரணமாக இதுவரை 4 போட்டிகள் கைவிடப்பட்டன. எனவே இவ்வாறு கனமழை காரணமாக சுபர் 12 சுற்று லீக் போட்டிகள் கைவிடப்படுவது அணிகளின் வெற்றி வாய்ப்பை பாதிப்பதுடன் ரசிகர்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
- “அரையிறுதிக்கான ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்த வேண்டும்” – நவீட் நவாஸ்
- ஆஸி.யின் முன்னணி வீரருக்கு கொவிட்-19 தொற்று!
இந்த நிலையில், அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்ட இங்கிலாந்து அணித் தலைவர் ஜோஸ் பட்லர், போட்டியை கைவிடுவதற்கு எடுத்த முடிவு சரியானது என்றும், மைதானத்தின் நிலை விளையாடுவதற்கு ஏற்றதாக இல்லை என்றும் கூறினார்.
‘நடுவர்களுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டி ஏற்பட்டது என்னைப் பொறுத்தமட்டில் அது சரி என்று நான் நினைக்கிறேன். ஆடுகளத்துக்கு வெளியே உள்ள பகுதிகள் ஈரமாக இருந்தது, மேலும் 30 மீட்டர் எல்லைக்குள் சில பகுதிகள் விளையாடுகின்ற நிலைமையில் இருக்கவில்லை. நாம் கிரிக்கெட் விளையாட விரும்பும் அளவுக்கு அது பாதுகாப்பாக இருக்க வேண்டும். அந்த பாதுகாப்பு இருக்கவில்லை.
அங்கு பந்து வீச வேண்டிய ஒவ்வொரு பந்து வீச்சாளரும் அதிக கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன். வீரரின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. குறிப்பாக எமது பந்துவீச்சாளர்களுக்கும் அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்களுக்கும் அங்கு விளையாடுவதற்கு ஏற்ற சூழல் இல்லை. எனவே, இது சரியான முடிவு என்று நான் நினைக்கிறேன் என்று அவர் கூறினார்.
மெல்பெர்ன் இந்த ஆண்டு எதிர்பாராத மழையை சந்தித்துள்ளது, இது வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் அவுஸ்திரேலியாவில் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகும் பருவமாகும்.
இதற்கிடையில், அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டது இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு செல்வதை மேலும் கடினமாக்குமா என்ற கேள்விக்கு ஜோஸ் பட்லர் பதில் அளிக்கையில்,
‘எனக்கு எந்தவொரு வருத்தமும் இல்லை. அவுஸ்திரேலியாவின் தற்போதைய காலநிலையைப் பற்றி உங்களுக்குச் சொல்ல நான் வானிலை முன் அறிவிப்பாளர் அல்ல. ஆனால் நாம் அனைவரும் முழுமையான கிரிக்கெட் போட்டிகளை விளையாட விரும்புகிறோம்.
பொதுவாக நாங்கள் வெளி மைதானத்தில் விளையாடுகிறோம், வெளிப்புற சூழ்நிலைகள் எங்கள் விளையாட்டுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நாம் நினைக்காத விதங்களில் கூட நாம் விளையாடும் ஆடுகளத்தை இது பாதிக்கிறது. இது போன்ற விடயங்களால் தான் கிரிக்கெட் விளையாட்டு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. ஆனால், துரதிஷ்டவசமாக எமது குழுவில் இன்று நடைபெறவிருந்த இரண்டு போட்டிகளும் மழையால் தடைப்பட்டன. அவ்வாறான போட்டிகளில் விளையாட யாரும் விரும்ப மாட்டார்கள். ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் உலகில் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம்’ என அவர் தெரிவித்தார்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<