ஜோஸ் பட்லருக்கு சச்சித்ரவை ஞாபகப்படுத்திய அஷ்வின்

1295
IPLT20.COM, Espncricinfo.com

இந்தியாவில் நடைபெற்றுவரும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இம்முறை ஆரம்பத்திலிருந்து சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதிலும் நேற்று (25) ஜெய்பூரில் நடைபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி மேலும் சுவாரஷ்யத்தை தரக்கூடிய போட்டியாக மாறியிருந்தது.

ரிஷாப் பாண்ட்டின் அதிரடி ஆட்டத்தால் டெல்லி அணிக்கு முதல் வெற்றி

ஐ.பி.எல். தொடரில் இன்று (24) நடைபெற்ற……..

“யுனிவர்ஸ் பொஸ்“ என வர்ணிக்கப்படும் கிரிஸ் கெயிலின் அதிரடியையும் தாண்டி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவர் ரவிச்சந்திரன் அஷ்வின் மூலமாக மேற்கொள்ளப்பட்ட ஜோஸ் பட்லரின் ரன்-அவுட் ஆட்டமிழப்பு பல விமர்சனங்களையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

நேற்றைய தினம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, ராஜஸ்தான் றோயல்ஸ் அணியை அவர்களது சொந்த மைதானத்தில் எதிர்கொண்டது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 185 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது. சற்று கடினமான ஓட்ட எண்ணிக்கையாக இருந்தாலும், ஜோஸ் பட்லர் மிகச்சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தார். அரைச்சதம் கடந்து பட்லர் களத்தில் நிற்க, ராஜஸ்தான் அணி 12.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 108 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இந்த நிலையில், தனது நான்காவது ஓவரை வீசிக்கொண்டிருந்த அஷ்வின், பந்து வீச்சு எல்லையில் இருந்த ஜோஸ் பட்லரை, பந்து வீசுவதற்கு முன் ரன்-அவுட் செய்து, நடுவரிடம் ஆட்டமிழப்பு கோரினார். பிரதான நடுவர், மூன்றாவது நடுவரிடம் அறிவிக்க, பட்லர் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த ஆட்டமிழப்பானது மைதானத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியதுடன், ராஜஸ்தான் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாகவும், பட்லர் மற்றும் அஷ்வினுக்கு இடையில் கடும் வாக்குவாதத்தினை ஏற்படுத்துவதாகவும் அமைந்தது.

IPLT20.COM

இறுதியாக, துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்த ஜோஸ் பட்லர், அஷ்வினுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்னர், கோபத்துடன் அரங்கு திரும்பினார். கிரிக்கெட் விதிமுறையின் படி, பந்து வீசுவதற்கு முன்னர் பந்து வீச்சு முனையில் உள்ள துடுப்பாட்ட வீரர் தனது எல்லையில் இருந்து வெளியேறினால், பந்து வீச்சாளரால் ரன்-அவுட் செய்ய முடியும் என்ற புதிய விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

மாலிங்க மும்பை அணியுடன் இணைவார்: மஹேல நம்பிக்கை

உலகக் கிண்ணத்தை இலக்காகக் கொண்டு ……

குறிப்பிட்ட விதிமுறையின்படி அஷ்வின், பட்லரின் விக்கெட்டினை கைப்பற்றியிருந்தாலும், கிரிக்கெட்டின் மகிமையை இழிவுப்படுத்தும் வகையில் அஷ்வினின் செயற்பாடு அமைந்ததாக ராஜஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளர் கருத்து வெளியிட்டிருந்தார். அத்துடன், இந்த விடயத்தை தங்களது அணி விட்டுவிட்டதாகவும், கிரிக்கெட் உலகம் மற்றும் இரசிகர்கள் அஷ்வினின் இந்த செயற்பாட்டினை கவனித்திருப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அஷ்வின் குறிப்பிடுகையில், இதனை திட்டமிட்டு தான் செய்யவில்லை எனவும், இவ்வாறான ஆட்டமிழப்புக்கு கிரிக்கெட் விதிமுறையில் இடம் இருப்பதாகவும், அந்த விதிமுறையின் அடிப்படையில் தான் நடந்துக்கொண்டதாகவும் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இவ்வாறான ஆட்டமிழப்புகள் கிரிக்கெட்டுக்கு புதிதில்லை என்பதுடன், அஷ்வின் மற்றும் ஜோஸ் பட்லருக்கும் புதிதில்லை என்றுதான் கூறவேண்டும். கடந்த 2011-12ம் பருவகாலத்தில் நடைபெற்ற CB கிரிக்கெட் தொடரில், இலங்கை அணியின் லஹிரு திரிமான்னவை இதே முறையில் அஷ்வின் ரன்-அவுட் செய்திருந்தார். எனினும், அனுபவ வீரர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் மூலம் ஆட்டமிழப்பு வழங்கப்படவில்லை.

ESPNCRICINFO.COM

அதேநேரம், 2014ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை – இங்கிலாந்து தொடரின் போது, சச்சித்ர சேனநாயக்க, ஜோஸ் பட்லரை இதே முறையில் ஆட்டமிழக்க செய்திருந்தார். சச்சித்ர சேனநாயக்க இரண்டு முறை ஜோஸ் பட்லருக்கு எச்சரிக்கை வழங்கிய போதும், பட்லர் மீண்டும் எல்லையில் இருந்து வெளியேறினார். இதனால், சச்சித்ர சேனநாயக்க மூன்றாவது முறை பட்லரை ஆட்டமிழக்கச் செய்திருந்தார். தற்போது, அதே போன்றதொரு ரன்-அவுட்டினை அஷ்வின் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<