ஆஸி.க்கு எதிரான T20I தொடரிலிருந்து ஜோஸ் பட்லர் விலகல்

4
JOS BUTTLER JOE ROOT,

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான T20i தொடரிலிருந்து இங்கிலாந்து அணித்தலைவர் ஜோஸ் பட்லர் விலகியுள்ளார்.

இங்கிலாந்து அணியானது தற்சமயம் இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதனையடுத்து அந்த அணி அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட T20i தொடரிலும் விளையாடவுள்ளது.

இந்த நிலையில், இத்தொடருக்கான ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதில் அந்த அணியின் சிரேஷ்ட வீரர்களான மொயின் அலி, ஜொனி பேர்ஸ்டோவ், கிறிஸ் ஜோர்டன் உள்ளிட்டோர் மோசமான போர்ம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அதேசமயம் ஜோஷ் ஹல், ஜேக்கப் பெதெல், ஜோன் டர்னர், டான் மௌஸ்லி மற்றும் ஜோர்டன் கொக்ஸ் உள்ளிட்ட 5 இளம் வீரர்களுக்கு முதல் தடவையாக அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்தத் தொடர் ஆரம்பமாவதற்கு முன்பே, இங்கிலாந்து அணிக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோஸ் பட்லர் காயம் காரணமாக அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான T20i தொடரில் இருந்து விலகியுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்க்பட்டுள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்று வரும் T20i பிளாஸ்ட் தொடரில் லங்கஷையர் அணிக்காக பட்லர் விளையாடி வந்த நிலையில், காயம் காரணமாக அவர் அத்தொடரில் இருந்து விலகினார்.

தற்சமயம் காயத்தில் இருந்து ஜோஸ் பட்லர் முழுமையாக குணமடையாத காரணத்தால் அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான T20i தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதனையடுத்து இங்கிலாந்து T20i அணியின் தலைவராக அதிரடி துடுப்பாட்ட வீரர் ஃபில் சோல்ட் நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம், ஜோஸ் பட்லருக்கான மாற்று வீரராக சகலதுறை வீரர் ஜேமி ஓவர்டனிற்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்க அந்நாட்டு தேர்வாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் T20i போட்டி செப்டம்பர் 11 ஆம் திகதி சௌத்தாம்டனில் நடைபெறவுள்ளது.

இங்கிலாந்து T20i அணி விபரம்: ஃபில் சோல்ட் (தலைவர்), ஜொப்ரா ஆர்ச்சர், ஜேக்கப் பெதெல், பிரைடன் கார்ஸ், ஜோர்டன் கொக்ஸ், சாம் கரண், ஜோஷ் ஹல், வில் ஜெக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், சகிப் மஹ்மூத், டான் மௌஸ்லி, ஆதில் ரஷித், ரீஸ் டாப்லி, ஜோன் டர்னர், ஜேமி ஓவர்டன்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<