இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இங்கிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஜோன் லிவிஸ் (ஜொனதன் லிவிஸ்) நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணிக்கு புதிய களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் நியமனம்
இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய…
இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வந்த திலான் சமரவீரவின் இடத்துக்கு, ஜோன் லிவிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளரான ஜோன் லிவிஸ் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் தொடரின் போது தேசிய அணியுடன் இணைந்துக்கொள்வார் என கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
அதேநேரம், ஜோன் லிவிஸ் இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக எதிர்வரும் (2019) உலகக்கிண்ண போட்டிகள் வரை பணியாற்றுவார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை அணி கடந்த இரண்டு வருடங்களாக துடுப்பாட்டத்தில் பின்தங்கிய நிலையை எட்டியிருக்கிறது. குறிப்பாக ஆசியக் கிண்ணத் தொடரில் ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளின் தோல்வியடைந்து, முதல் சுற்றில் வெளியேறியது. குறித்த தொடரில் இலங்கை அணியின் துடுப்பாட்டம் விமர்சிக்கப்பட்டு வந்தது. பின்னர், சொந்த மண்ணில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்டு விளையாடிய தொடரிலும், இலங்கை அணி மோசமான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தது.
உலகக்கிண்ணத் தொடர் நெருங்கி வரும் நிலையில், இலங்கை கிரிக்கெட் அணிக் கட்டமைப்பில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது. இதன் முதற்கட்டமாக களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் ரிக்ஸனை கடந்த வாரம் நியமித்திருந்த கிரிக்கெட் சபை, தற்போது துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளரையும் மாற்றியுள்ளது.
நியூசிலாந்து அணியுடன் இலங்கையின் கடந்தகாலப் போட்டிகள் எப்படி இருந்தன?
கடந்த ஆண்டில் மிகவும் கசப்பான…
ஜோன் லிவிஸ் கௌண்டி அணியான துர்ஹாம் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வந்ததுடன், இவரின் பயிற்றுவிப்பின் கீழ் அந்த அணி, 2013ம் ஆண்டு கௌண்டி சம்பியன்ஷிப், 2014ம் ஆண்டு ரோயல் இலண்டன் ஒருநாள் தொடர் என்பவற்றை வென்றிருந்ததுடன், 2016ம் ஆண்டு நெட்வெஷ்ட் T20 பிளாஸ்டில் இரண்டாவது இடத்தையும் பிடித்திருந்தது.
ஜோன் லிவிஸ், தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டமை குறித்து கருத்து வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் சபையின் தலைமை நிர்வாக அதிகாரி ஏஷ்லி டி சில்வா, “லிவிஸ் அவரது அனுபவத்தைக் கொண்டு, இலங்கை அணியின் துடுப்பாட்ட உத்வேகத்தை அதிகரித்து, அதனை ஸ்திரப்படுத்துவார் என நம்புகிறேன்” என்றார்.