விளையாட்டில் ஆர்வம் காட்டும் ஓவ்வொரு வீர வீராங்கனையும் குறித்த விளையாட்டில் சிறப்பாக செயற்பட்டு, அந்தந்த விளையாட்டுக்களில் தனது தாயக தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக தங்களது திறமைகளை வெளிக்காட்டி, சொந்த நாட்டிற்கு பெருமை சேர்ப்பதையே பொதுவான இலட்சியமாக  கொண்டிருப்பர்.

அந்த வகையில் எமது நாட்டில் மிகவும் ஜனரஞ்சகமான விளையாட்டாக காணப்படும் கிரிக்கெட்டில் தனது குறுகிய கால கடின பயிற்சிகள் மூலம் கிழக்கிலங்கையிலிருந்து வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் அணிக்குத் தெரிவு செய்யப்பட்டு, இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியிருந்த மட்டு நகர், நாவற்குடா பிரதேசத்தைச் சேர்ந்த நொபெட் ஜோன்சன் ஜடாவின் தற்போதைய கிரிக்கெட் பற்றிய ThePapare.com இன் பார்வையே இது.

கிரிக்கெட்டில் வடக்கு இளைஞர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக வர வேண்டும் : எட்வார்ட் எடின்

வடக்கின் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு சிறந்த ஒரு வழிகாட்டியாக தன்னை மாற்ற வேண்டும் என்ற பெருந்தன்மையோடு உள்ளார்,

யார் இந்த ஜோன்சன் ஐடா?

மீன்பாடும் தேன் நாடுஎன அழைக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தின் நாவற்குடாவில் 1993ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் திகதி பிறந்த ஜோன்சன் ஐடா, 6 பேர் கொண்ட வறுமையான ஓர் குடும்பத்தின் இறுதி மகளாவார்.

சிறுவயதில் இருந்தே, ஒரு வீராங்கனைக்குரிய உடல்வாகினை கொண்டிருந்த ஜோன்சன் ஐடா, ஆரம்பம் முதல் கரப்பந்தாட்டம் மற்றும் ஏனைய மெய்வல்லுனர் விளையாட்டுக்களில் ஆர்வம் காட்டி வந்தார்.

இந்த நிலையில், குருத்தலாவ புனித தோமியர் கல்லூரியின் கிரிக்கெட் அணியில் விளையாடிய ஐடாவின் மூத்த சகோதரரான பி.ரோய் அவர்களின் ஆட்டத்தினை தொடராக பார்வையிட்டதன் காரணமாகவும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் உள்ள ஈடுபாடு காரணமாகவும் கிரிக்கெட் விளையாட்டில் ஐடா ஆர்வம் காட்டத் தொடங்கினார்.  

ஐடாவின் கிரிக்கெட் ஆரம்பம்

மட்டக்களப்பு மகாஜன மகளிர் கல்லூரியில் தனது பாடசாலை கல்வியினை ஆரம்பித்த ஐடா, தனது பாடசாலையில் இருந்த மென்பந்து மகளிர் குழாத்தில் இணைந்து முதலில் மென்பந்து போட்டிகளிலேயே விளையாடினார். தனது பாடசாலை அணியின் தலைவியாக செயற்பட்டு பாடசாலை ரீதியாக நடைபெற்ற பல போட்டித் தொடர்களில் அணியை வெற்றி பெற வைத்து தேசிய மட்ட அளவில்  தனது பாடசாலைக்கு பெருமை சேர்த்திருந்தார்.

இன்னும், அவர் கிழக்கு மாகாண அணி சார்பாகவும் பல போட்டித் தொடர்களில் பங்குபற்றி அவ்வணியினையும் வெற்றிப்பாதையில் வழிநடாத்தியிருந்தார்.

திருப்பு முனையாக அமைந்தவை

கடினப்பந்து கிரிக்கெட்டில் மட்டு நகரை பொறுத்த அளவில் வீரர்களோ அல்லது வீராங்கனைகளோ பயிற்சிகளை மேற்கொள்வதற்கான மைதான வசதிகள் மிகவும் குறைவாகவே உள்ளன.

இதனால், மென்பந்து போட்டிகளிலேயே விளையாடி வந்த வலது கை வேகப்பந்து வீச்சாளரான ஐடா, தனது தன்னம்பிக்கை, விடாமுயற்சி, ஆற்றல் வெளிப்பாடு என்பவற்றின் காரணமாகவே கடினப்பந்து விளையாடும் அணி ஒன்றிற்கு  முதலில் தெரிவாகினார். இதனால் அவர் மென்பந்து கிரிக்கெட்டில் இருந்து கடினப்பந்து கிரிக்கெட்டிற்கு தனது பயணத்தை மாற்றினார்.

கடந்த 2009ஆம் ஆண்டில் இருந்தே, கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த ஐடா, அதற்கு அடுத்த வருடத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தினால் நடாத்தப்பட்டடேப் போல்மென்பந்து கிரிக்கெட் தொடரில் தன்னை பிரதிநிதித்துவப்படுத்தினார். அவர் விளையாடிய அணியினை தேசிய ரீதியில் வெற்றி பெறச் செய்ததோடு குறித்த போட்டித் தொடரில் வெளிக்காட்டிய சிறப்பாட்டம், திறமைகள் என்பவற்றின் காரணமாக, பிற்காலத்தில் கண்டி இளையோர் கழகத்தின் சார்பாக விளையாடுவதற்கு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

தேசிய அணி வாய்ப்பினை பெற்றுக்கொண்ட ஐடா

தொடர்ந்து கண்டி இளையோர் கழகத்திற்காக விளையாடிய அவர், கழக மட்ட அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் சிறப்பாக செயற்பட்டு வர, அவரது ஆட்டத்தினை கவனித்து வந்த தேர்வாளர்கள் அவருக்கு இலங்கை மகளிர் கூட்டு அணிக்குள் விளையாட அழைப்பு விடுத்தனர்.  

அங்கும் சிறப்பான திறமையை வெளிக்காட்டிய காரணத்தினால், இலங்கை மகளிர் அபிவிருத்தி குழாத்தில் விளையாடும் வாய்ப்பினையும் ஐடா பெற்றுக்கொண்டார். இதனால் 2010, 2011ஆம் ஆண்டுகளில் இலங்கை மகளிர் அபிவிருத்தி குழாம் விளையாடும் போட்டிகளில் ஐடா பங்குபற்றினார்.

சிறந்த விளையாட்டு வீரனின் எதிர்காலம் என்றும் சிறப்பானதாகவே அமையும் – கௌரிபாகன் தேவராஜா

தடைகளைத் தாண்டி வென்ற கிரிக்கெட் வீரன் என சிறப்பித்துக் கூறக்கூடிய புனித ஜோன்ஸ் கல்லூரியின் அணித்தலைவரும்….

அதேசமயம், தற்போதைய பருவ காலத்தில் இலங்கை மகளிர் அணியின் முன்னணி வீராங்கனைகளில் ஒருவராகக் காணப்படும் இனோக்கா ரணவீர விளையாடும் தென்மாகாண மகளிர் அணி சார்பாகவும் பல போட்டிகளில் ஐடா பங்குபற்றி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.  

தேசிய அணியில் முதல் வாய்ப்பு

மகளிர் கழக அணிகளுக்கு இடையிலான போட்டித் தொடர்களில் தனது பந்து வீச்சு மற்றும் சிறப்பான களத்தடுப்பு என்பவற்றின் மூலம் அசத்தி வந்த ஐடாவிற்கு, இலங்கை தேர்வாளர்கள் குழாம் 2013ஆம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி சார்பாக விளையாடுவதற்காக தெரிவு செய்யப்பட்டிருந்த 18 பேர் கொண்ட குழாத்தில் வாய்ப்பினை வழங்கியது.

Ida-1இருப்பினும், அந்த உலகக் கிண்ணத்தில் விளையாடும் வாய்ப்பு ஐடாவிற்கு துரதிஷ்டவசமாகக் கிடைக்கவில்லை. எனினும், அதனை அடுத்து 2013ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற இலங்கை மகளிர் அணி மற்றும் தென்னாபிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடும் வாய்ப்பு ஐடாவிற்கு கிடைத்தது.  

இதன்மூலம், கிழக்கு மாகாணத்தில் இருந்து முதல் தடவையாக இலங்கை தேசிய மகளிர் அணியில் விளையாடும் வாய்ப்பினை பெற்ற பெருமையை ஐடா பெற்றுக்கொண்டார்.

இதன் அடிப்படையில், அந்த தொடரி’ன் முதல் ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி சார்பாக ஐடா விளையாடினார். அப்போட்டியில் இலங்கை அணி தோல்வியுற்ற அதேவேளை, ஐடாவும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருக்கவில்லை.

இதனால், இத்தொடரில் அடுத்து இடம்பெற்ற போட்டிகளில் ஐடாவிற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.  

தனது கிரிக்கெட் வாழ்வில் மாற்றம் கண்டுள்ள ஐடா

தென்னாபிரிக்காவுடனான தொடரினை அடுத்து மீண்டும் உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்திய ஐடா, கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் சார்பாக உள்ளூர் போட்டிகளில் தற்போது வரை விளையாடி வருகின்றார். மேலும், அவ்வணியின் தலைவராகவும் செயற்பட்டிருந்தார்.

எனினும், சில தனிப்பட்ட காரணங்களுக்காக ஐடா தான் கிரிக்கெட் விளையாடுவதை குறைத்துள்ளார். எனினும் தற்போது மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் கிரிக்கெட் குழாத்தின் பயிற்சியாளராக தனது கிரிக்கெட் வாழ்க்கையினை முன்னெடுக்கின்றார்.

விளையாட்டில் மாத்திரம் அல்லாது கல்வியிலும் சிறந்து விளங்கியிருக்கும் ஜோன்சன் ஐடா, கலைப் பிரிவில் சித்திபெற்றிருப்பதோடு, விளையாட்டு டிப்ளோமா கற்கை நெறி ஒன்றினையும் பூர்த்தி செய்துள்ளார்.

2013/16 ஆம் ஆண்டின் பருவ காலத்தில் 14 உள்ளூர் ஒரு நாள் போட்டிகள் வரையில் விளையாடியிருக்கும் ஐடா 10 விக்கெட்டுக்கள் வரையில் கைப்பற்றியிருப்பதோடு 102 ஓட்டங்கள் வரையில் குவித்துள்ளார் என்பதும் நினைவு படுத்தத்தக்க விடயமாகும்.

இறுதியாக,

ஐடா முடியுமாயின் எதிர்காலத்தில் தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளில் உள்நுழைவார் எனின், எதிர்காலத்தில் மீண்டும் ஒரு சாதனையாளராக மாறி மட்டு மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வாய்ப்பு அவரிற்கு அதிகம் காணப்படுகின்றது.

எவ்வாறிருப்பினும், தான் பயணித்து வந்த பாதையில் மாற்றம் காணாமல் கிரிக்கெட் விளையாட்டுடன் இணைந்து நிற்கும் இவர், எதிர்காலத்தில் இத்துறைக்கு பல சேவைகளை வழங்க நாமும் அவரை வாழ்த்துகின்றோம்.