கொவிட் – 19 விதிமுறைகளை மீறிய ஆர்ச்சருக்கு அபராதத்துடன் எச்சரிக்கை

198
Getty image

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது கொவிட் – 19 பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய இங்கிலாந்து அணியின் இளம் வேகப் பந்துவீச்சாளரான ஜொப்ரா ஆர்ச்சருக்கு அபராதம் விதிக்க அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன், அவருக்கு எதிராக எழுத்து மூலமாக எச்சரிக்கையும் இங்கிலாந்து கிரிக்கெட் சபையினால் விடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு விதிகளை மீறிய ஆர்ச்சர் மேற்கிந்திய தீவுகளுடன் விளையாடத்தடை

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டி சவுத்ஹம்ப்டனில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், போட்டி முடிந்த பின்னர் இங்கிலாந்து வீரர்கள் நேரடியாக இரண்டாவது போட்டி நடைபெறும் மான்செஸ்டர் மைதானத்திற்கு செல்ல வேண்டும். ஆனால் இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜொப்ரா ஆர்ச்சர் நேரடியாக தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

அதன் பின்னர் இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் மான்செஸ்டர் மைதானத்திற்கு வந்துள்ளார். இதுதொடர்பில் தகவல் அறிந்த இங்கிலாந்து கிரிக்கெட் சபை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் சபை உடனடியாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து அவரை நீக்கிவிட்டு அவருக்கு ஐந்து நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவும் உத்தரவிட்டது.

அத்துடன், குறித்த காலப்பகுதியில் அவர் இரண்டு முறை பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அந்த அறிக்கையில் அவருக்கு கொவிட் – 19 வைரஸ் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டால் மாத்திரமே 3ஆவது டெஸ்ட் போட்டியில் அவர் இணைத்துக் கொள்ளப்படுவார் என அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்தது.

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 123

இந்த விவகாரம் குறித்து இங்கிலாந்து அணியின் நிர்வாக இயக்குனர் ஆஷ்லே ஜைல்ஸ் கூறுகையில், ‘ஆர்ச்சரின் நடத்தை இந்த ஆண்டுக்கான இங்கிலாந்து கிரிக்கெட்டின் ஒட்டுமொத்த உள்ளூர் கிரிக்கெட் திட்டங்களை (அடுத்து 3 அணிகள் இங்கிலாந்து வந்து விளையாட உள்ளன) இல்லாமல் செய்து இருக்கும். 

சிறிய செயல் என்றாலும் அதன் மூலம் எங்களுக்கு பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கக் கூடும். ஆர்ச்சர் திறமையான இளம் வீரர். இளைஞர்கள் தவறு செய்வது இயல்பு. இந்த தவறில் இருந்து அவர் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அவருக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம். இருப்பினும், அவர் ஒழுக்க நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும்’ என்றார்.

எது எவ்வாறாயினும், தன்னால் தெரிந்து கொண்டே செய்த தவறுக்கு வருத்தம் தெரிவித்த ஜொப்ரா ஆர்ச்சர், இங்கிலாந்து வீரர்கள் மற்றும் அந்நாட்டு கிரிக்கெட் சபையிடம் பகிரங்கமாக மன்னிப்பும் கோரினார். 

மில்லியன் பவுண்ட்களை கேள்விக்குறியாக்கிய ஜொப்ரா ஆர்ச்சர்

இதனிடையே, குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய இங்கிலாந்து கிரிக்கெட் சபை இன்று (18) வெளியிட்டிருந்த அறிக்கையில், ஒழுக்க நடவடிக்கை குழு, விசாரணைகள் முடிவில் ஆர்ச்சருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 

ஆனால் எவ்வளவு தொகை என குறிப்பிடவில்லை. அதுதவிர, தனது தவறை ஆர்ச்சர் ஏற்றுக் கொண்ட போதும், எழுத்துப் மூலமாக அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, தற்போது சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள ஆர்ச்சருக்கு இரண்டு தடவைகள் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. 

இதன் அறிக்கையில் அவருக்கு கொவிட் – 19 வைரஸ் இல்லை என உறுதி செய்யப்பட்டால் எதிர்வரும் 21 ஆம் திகதி இங்கிலாந்து அணியுடன் இணைந்துகொள்ள அவருக்கு அனுமதி கொடுக்கப்படும். 

அதன்பிறகு மேற்கிந்திய தீவுகள் அணியுடன் 24 ஆம் திகதி நடைபெறவுள்ள மூன்றாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<