தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் மூலம் சுமார் இரண்டு வருட இடைவெளி ஒன்றின் பின்னர் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் வாய்ப்பினைப் பெற்றுள்ள ஜொப்ரா ஆர்ச்சர் தனது உடல்நலம் குறித்து கருத்து வெளியிட்டிருக்கின்றார்.
>> ஒருநாள் பந்துவீச்சாளர்கள் முதலிடம் பெற்ற மொஹமட் சிராஜ்
தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி அங்கே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகின்றது. இந்த ஒருநாள் தொடர் நாளை (27) ப்ளூம்பொன்டைன் நகரில் ஆரம்பமாகவுள்ள நிலையிலையே ஜொப்ரா ஆர்ச்சர் தனது உடல்நிலை குறித்து கருத்து வெளியிட்டிருக்கின்றார்.
அந்தவகையில் தனது உடல்நிலையினை சுயமாக மதிப்பிட்டிருக்கும் ஜொப்ரா ஆர்ச்சர் தான் 80% உடற்தகுதியுடன் இருப்பதாக கூறியிருக்கின்றார்.
”கடந்த காலத்தை திரும்பி பார்க்க தேவையில்லை. எனக்கான நேரத்தினை நான் செயல்படுத்தி தற்போது இங்கே இருக்கின்றேன். அதுவே தற்போது மிக முக்கியமான விடயம். என்னால் சுமார் 80% உறுதியுடன் உள்ளேன் எனக் கூற முடியும். நான் தற்போது நல்ல நிலையில் காணப்படுகின்றேன்.”
”இந்த ஆண்டும் 2019 போன்று இருக்கும் என நம்புகின்றேன்.” ”இம்முறை எங்களுக்கு மீண்டும் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர் ஒன்று இருப்பதோடு, மீண்டும் ஆஷஸ் போட்டிகளும் இருக்கின்றன.”
ஜொப்ரா ஆர்ச்சர் இறுதியாக 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணத்தை இங்கிலாந்து முதன் முறையாக வெற்றி கொள்வதற்கு முக்கிய பங்காற்றியிருந்ததோடு, அந்த ஆண்டில் இங்கிலாந்து அணி பல கிரிக்கெட் தொடர்களில் வெற்றிபெற முக்கிய காரணமாக அமைந்திருந்தார்.
எனினும் ஆர்ச்சரினால் 2021ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தின் பின்னர் இங்கிலாந்து அணிக்காக உபாதை காரணமாக விளையாட முடியாமல் போயிருந்தது. அத்துடன் இங்கிலாந்து அணி கடந்த ஆண்டில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத் தொடரினை வெற்றி கொண்ட போது அந்த குழாத்திலும் கூட அவரினால் இடம்பெற்றிருக்க முடியவில்லை.
>> பங்களாதேஷுடன் முதல் டெஸ்டில் விளையாடவுள்ள அயர்லாந்து!
இவ்வாறான நிலையில் தற்போது இங்கிலாந்து குழாத்திற்குள் மீண்டிருக்கும் ஆர்ச்சர் இம்முறை அவ்வணிக்கு அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இனி வரும் நாட்களில் பலம் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான மார்க் வூடிற்கு தென்னாபிரிக்க ஒருநாள் தொடரில் ஓய்வு வழங்கப்பட்டிருப்பதன் காரணமாக, ஜொப்ரா ஆர்ச்சரே இங்கிலாந்து அணியின் பிரதான வேகப்பந்துவீச்சாளராக செயற்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<