தலைவர் பதவியிலிருந்து விலகினார் ஜோ ரூட்

267

தொடர் தோல்விகளின் எதிரொலியாக இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து ஜோ ரூட் விலகியுள்ளார்.

இந்த ஆண்டு முற்பகுதியில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி மிக மோசமாக தோற்றது. அதன்பிறகு டெஸ்ட் தரவரிசையில் 8ஆம் இடத்தில் உள்ள மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 1-0 என்ற கணக்கில் தொடரை இங்கிலாந்து அணி இழந்தது. இதையடுத்து ஜோ ரூட்டின் தலைமைத்துவம் மீது கடும் விமர்சனங்கள் எழும்பியது.

இதன் காரணமாக ஜோ ரூட்டின் தலைவர் பதவியைப் பறிக்க வேண்டும், இங்கிலாந்து டெஸ்ட் அணிக்குப் புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. ஆனாலும் தொடர்ந்து தலைவராக இருக்க ஜோ ரூட் விருப்பம் தெரிவித்திருந்தார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகும் கிறிஸ் சில்வர்வூட்

இந்த நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவர் பதவியிலிருந்து ஜோ ரூட் விலகுவதாக இன்று (15) அறிவித்துள்ளார். இதனை இங்கிலாந்து கிரிக்கெட் சபை உறுதிசெய்துள்ளது.

இதுகுறித்து பேசிய ஜோ ரூட் ‘எனது நாட்டிற்கு தலைவராக இருந்ததற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளை மகத்தான பெருமையுடன் திரும்பிப் பார்க்கிறேன். அந்த வேலையைச் செய்ததற்கும், இங்கிலாந்து கிரிக்கெட்டின் உச்சம் என்ன என்பதற்குப் பாதுகாவலராக இருந்ததற்கும் பெருமையாக இருக்கிறது.

எனது நாட்டை வழிநடத்துவதை நான் மிகவும் விரும்பினேன். ஆனால் அது எனக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியது மற்றும் விளையாட்டில் இருந்து விலகியிருந்த என்னை அது ஏற்படுத்திய தாக்கத்தை சமீபகாலமாகத் தாக்கியது.

என்னுடன் வாழ்ந்து, அன்பு மற்றும் ஆதரவின் நம்பமுடியாத தூண்களாக இருந்த எனது குடும்பத்தினரான கேரி, ஆல்ஃபிரட் மற்றும் பெல்லா ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறேன். எனது பதவிக் காலத்தில் எனக்கு உதவிய வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஊழியர்கள் அனைவரும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் பயணத்தில் அவர்களுடன் இருந்ததே பெரிய பாக்கியம்’ என்று தெரிவித்துள்ளார்.

ஜோ ரூட் 2017ஆம் ஆண்டு அலெய்ஸ்டர் குக்கிடம் இருந்து இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவர் பதவியைப் பொறுப்பேற்றார். வரலாற்றிலேயே அதிக டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணியை வழிநடத்திய தலைவர் என்ற பெருமை ஜோ ரூட்டையே சாரும். இதுவரை 64 போட்டிகளில் இங்கிலாந்து அணியை வழிநடத்தியுள்ள ஜோ ரூட், 27 போட்டிகளில் வெற்றிகளையும், 26 போட்டிகளில் தோல்விகளையும் சந்தித்தார். அதேபோல, 11 போட்டிகள் சமநிலையில் முடிவுற்றது. தலைவராக அவரின் வெற்றி சதவீதம் 42.18 ஆகும்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் தலைவராக அவர் விளையாடி 5,295 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவர்கள் வரிசையில் இது அதிகபட்ச ஓட்டங்கள் என சொல்லப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த அளவில் ஸ்மித், அலன் போர்டர், ரிக்கி பொண்டிங் மற்றும் விராட் கோஹ்லியைத் தொடர்ந்து டெஸ்ட் அணித்தலைவராக அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்களில் ஜோ ரூட் 5ஆவது இடத்தில் உள்ளார்.

எனவே, ஜோட் ரூட்டின் தலைமையில் இங்கிலாந்து அணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிகளை குவித்திருந்தாலும் அண்மைக்காலமாக இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடர்களை இழந்து தடுமாறி வருகிறது. இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிராக இங்கிலாந்து அணி தொடர் தோல்விகளைத் தழுவியது.

குறிப்பாக, தலைவர் பதவியை ஏற்றதன் பிறகு அதிக வெற்றிகளைக் குவித்த ஜோ ரூட்டிற்கு கடைசி 2 ஆண்டுகள் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. ரூட் தலைமையில் இங்கிலாந்து விளையாடிய கடைசி 18 டெஸ்ட் போட்டிகளில் 2 இல் மாத்திரம் வெற்றியை சந்தித்து 11 தோல்வியை சந்தித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<