ஐசிசியின் ஆகஸ்ட் மாத விருதை வென்றார் ஜோ ரூட்

244
Sri Lanka Cricket

ஐசிசியின் ஆகஸ்ட் மாதத்துக்கான சிறந்த வீரராக இங்கிலாந்தின் ஜோ ரூட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கிரிக்கெட் வீரர்களின் சாதனைகள் மற்றும் சிறந்த ஆட்டங்களை கௌரவிக்கும் விதமாக, ஐசிசி மாதந்தோறும் சிறப்பாக விளையாடிய வீரர்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது.

இந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தின் சிறந்த வீரர், வீராங்கனைக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி கடந்த வாரம் வெளியிட்டது.

இதில் ஆண்கள் பிரிவில் இங்கிலாந்தின் ஜோ ரூட், இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் பாகிஸ்தானின் ஷஹீன் அப்ரிடி ஆகிய மூவரும், பெண்கள் பிரிவில் கேபி லூயிஸ், எமியர் ரிச்சர்ட்சன், நடாயா ஆகிய மூவரும் பரிந்துரைக்கப்பட்டார்கள்.

அந்த வகையில் ஆண்களுக்கான கிரிக்கெட்டில் ஆகஸ்ட் மாதத்துக்கான சிறந்த வீரராக இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ICC இன் ஆகஸ்ட் மாத சிறந்த வீரர் விருதுக்கான பெயர்கள் அறிவிப்பு

ஜோ ரூட் ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவுக்கு எதிராக மூன்று சதங்களுடன் 507 ஓட்டங்களைக் குவித்தார். அத்துடன், ஐசிசி இன் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு முதலிடத்தையும் பிடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை 109 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட் 9,278 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் 23 சதங்கள், 5 இரட்டைச் சதம் மற்றும் 50 அரைச் சதங்களை எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் முன்னணி வீரர்களில் ஒருவராக வலம்வந்து கொண்டிருக்கின்றார்.

இந்த நிலையில், பெண்கள் பிரிவில் அயர்லாந்து அணியின் சகலதுறை வீராங்கனை எமியர் ரிச்சர்ட்சன் ஆகஸ்ட் மாதத்தின் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<