ICC இன் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் பேரவை டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசைப் பட்டியலை இன்று (01) வெளியிட்டுள்ளது.
78 ஓட்டங்களில் சுருண்ட இந்தியா மோசமான சாதனை
இதில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர்ந்து 3 சதங்களை அடித்த ஜோ ரூட், 916 புள்ளிகளுடன் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடர் ஆரம்பமாவதற்கு முன் டெஸ்ட் தரவரிசையில் 5ஆவது இடத்தில் இருந்த ஜோ ரூட், 3 டெஸ்ட் போட்டிகளில் 3 சதங்கள் உட்பட 507 ஓட்டங்களை எடுத்து, கோஹ்லி, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்ஸன் ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இதற்கு முன் கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பரில் முதலிடத்தைப் பிடித்திருந்த ஜோ ரூட் 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியள்ளார். அதுமாத்திரமின்றி, இந்த ஆண்டில் மட்டும் ஆறு சதங்கள் அடித்து அவர் சாதனை படைத்துள்ளார்.
இந்திய அணியைப் பொறுத்தவரை இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி முதலிடத்தைப் பிடித்திருந்த நிலையில் இங்கிலாந்து தொடரில் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக தற்போது 766 புள்ளிகளுடன் 6ஆவது இடத்துக்குப் பின்தள்ளப்பட்டுள்ளார்.
டெஸ்ட் சதங்களில் பவாத் அலாம் புதிய சாதனை
அதேசமயம், ரோஹித் சர்மா 3ஆவது டெஸ்ட் போட்டியில் அரைச்சதம் அடித்தன் மூலம் தரவரிசையில் கோஹ்லியைப் பின்தள்ளி முதன் முறையாக 773 புள்ளிகளை எடுத்து 5ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
பந்துவீச்சாளர்களில் இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சன் 5ஆவது இடத்துக்கும் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா 10ஆவது இடத்திலிருந்து 9ஆவது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.
இதனிடையே, இன்று வெளியிடப்பட்டுள்ள ஐசிசி இன் புதிய தரவரிசைப் பட்டியலில் எந்தவொரு இலங்கை வீரரும் முதல் 10 இடங்களுக்கு இடம்பெறவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…