இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவர் ஜோ ரூட் மற்றும் துடுப்பாட்ட வீரர் ஜோஸ் பட்லர் ஆகியோர் அவுஸ்திரேலியாவில் டிசம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள பிக்பேஷ் லீக் கிரிக்கெட் தொடரில் சிட்னி தண்டர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட்டின் பிரபல T-20 தொடர்களில் ஒன்றாக பார்க்கப்படும் பிக்பேஷ் லீக்கின் 8வது பருவகால (2018-19) போட்டிகள் இவ்வருடம் டிசம்பர் மாதம் தொடக்கம் 2019ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை நடைபெறவுள்ளன.
சங்கக்காரவின் வரலாற்று சாதனையை நெருங்கும் கோஹ்லி
இந்தப் போட்டித் தொடரில் விளையாடும் அணிகள், சர்வதேச வீரர்களை ஒப்பந்தம் செய்வதில் கவனத்தை செலுத்தி வருகின்றன. இந்த நிலையில் 2015-16 பருவகாலத்தின் சம்பியன் கிண்ணத்தை வென்ற சிட்னி தண்டர்ஸ் அணி இங்கிலாந்தின் முன்னணி வீரர்களான ஜோஸ் பட்லர் மற்றும் ஜோ ரூட் ஆகியோரை இணைத்துள்ளது.
ஜோஸ் பட்லரை பொருத்தவரையில் சர்வதேச நாடுகளில் நடைபெற்று வரும் T-20 லீக் தொடர்களில் விளையாடியுள்ளார். அத்துடன் குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டிகளில், மிகவும் எதிர்பார்க்கப்படும் துடுப்பாட்ட வீரராகவும் தன்னை அடையாளப்படுத்தியுள்ளார். இதனால் இவருக்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
எனினும், இங்கிலாந்து அணியின் டெஸ்ட் தலைவரான ஜோ ரூட், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மிக பலமான துடுப்பாட்ட வீரராக இருந்தாலும், T-20 போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்த தவறி வருகின்றார். சர்வதேசத்தில் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் இவர், வெளிநாடுகளில் நடைபெற்று வரும் T-20 தொடர்களில் இதுவரையில் விளையாடவில்லை.
இறுதியாக நடைபெற்ற ஐ.பி.எல். ஏலத்தில் இவரது பெயர் சேர்க்கப்பட்டிருந்த போதும், எந்த அணிகளும் இவரை வாங்குவதற்கு முன்வரவில்லை. தற்போது சிட்னி தண்டர்ஸ் அணி ஜோ ரூட்டை ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தமானது இவரின் முதலாவது வெளிநாட்டு ஒப்பந்தமாக அமைந்துள்ளது.
நான் சஹீட் அப்ரிடி போன்று பந்துவீச விரும்புகின்றேன் – ஸ்டீவ் ஸ்மித்
T-20 போட்டிகளில் தொடர்ந்து அசமந்தமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஜோ ரூட் இவ்வருடம் அணிக்காக மூன்று போட்டிகளில் மாத்திரம் விளையாடி 14.66 என்ற சராசரியில் வெறும் 44 ஓட்டங்களை பெற்றுள்ளார். இதனால் கடைசியாக நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான T-20 தொடரின் இறுதி பதினொருவரில் இவர் இணைக்கப்படவில்லை.
தற்போது, பிக்பேஷ் லீக்கில் இடம்பிடித்துள்ள ஜோ ரூட், ஐ.பி.எல். தொடருக்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள எதிர்பார்த்துள்ளதுடன், இங்கிலாந்து T-20 அணியில் முழுமையான இடமொன்றை தக்கவைக்க வேண்டும் எனவும் எதிர்பார்த்துள்ளார்.
இலங்கை தொடரின் பின்னர் பிக்பேஷ் லீக்கில் விளையாடவுள்ள ஜோ ரூட் மற்றும் ஜோஸ் பட்லர், முதல் 7 போட்டிகளில் மாத்திரம் விளையாடவுள்ளனர். பின்னர் ஜனவரியில் ஆரம்பமாகும் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான தொடருக்கான இங்கிலாந்து குழாமுடன் இருவரும் இணையவுள்ளனர்.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க