ஜோ ரூட்டுக்கு இங்கிலாந்தின் மிகச்சிறந்த தொழில்முறை வீரருக்கான விருது

PCA Player of the Year 2021

239

இங்கிலாந்து தொழில்முறை கிரிக்கெட் சங்கத்தின் (PCA) வருடாந்த விருது வழங்கும் விழாவில், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவர் ஜோ ரூட் 2021ம் ஆண்டுக்கான சிறந்த வீரராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து தொழில்முறை கிரிக்கெட் சங்கத்தின் வருடாந்த விருதுகளை பெற்றுக்கொள்ளும் வீரர்கள் விபரம் இன்றைய தினம் (28) அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்னா ஸ்டாலியன்ஸின் புதிய உரிமையாளராக லைக்காவின் அல்லிராஜா சுபாஸ்கரன்

அதன்படி, ஜோ ரூட் இந்த பருவகாலத்தில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், 3 சதங்களையும் பதிவுசெய்திருந்தார். இதன் காரணமாக, இந்த ஆண்டின் சிறந்த வீரராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

ஜோ ரூட் இந்த பருவகாலத்தில் 66.1 என்ற ஓட்ட சராசரியில் 661 ஓட்டங்களை குவித்துள்ளதுடன், துணைக்கண்டத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், 150 ஓட்டங்களை தாண்டியும் சாதித்திருந்தார். இவர், அனைத்து ஆடுகள, காலநிலைகளிலும் சிறப்பாக துடுப்பெடுத்தாடக்கூடியவர் என்பதையும் நிரூபித்து, வருகின்றார். எனவே, இந்த ஆண்டுக்கான சிறந்த வீரராக ரூட் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த விருது தொடர்பில் கருத்து பகிர்ந்த ஜோ ரூட், “தொழில்முறை கிரிக்கெட் சங்கத்தின் சிறந்த வீரராக தெரிவுசெய்யப்பட்டமையை கௌரவமாக எண்ணுகிறேன். சக தொழில்முறை வீரர்களிடமிருந்து இந்த விருது கிடைப்பது மிகப்பெரிய விடயமாகும். அவர்களுடன் நீண்ட காலம் விளையாடுவதுடன், அவர்களின் வாக்குகளால், தெரிவுசெய்யப்பட்டமையை எண்ணி மேலும் பெருமையடைகிறேன். முன்னணி வீரர்கள் பலர் இந்த விருதுகளை வென்றுள்ளனர். அவர்களின் பட்டியலில் நானும் இணைந்துக்கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

இங்கிலாந்து தொழில்முறை கிரிக்கெட் சங்கத்தின் சிறந்த வீராங்கனையாக, ஈவ் ஜோன்ஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவர் சர்வதேச போட்டிகளில் விளையாடாவிட்டாலும், உள்ளூர் போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ளார். எனவே, இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் வரலாற்றில், சர்வதேச கிரிக்கெட் விளையாடாமல், இந்த விருதை வெற்றிக்கொள்ளும் முதல் வீராங்கனை என்ற பெருயையையும் இவர் பெற்றுக்கொண்டார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<