இங்கிலாந்தில் உள்ளூர் கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் கௌண்டி கிரிக்கெட் தொடரில், மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஜேசன் ஹோல்டர் முதன்முறையாக பங்கேற்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஹோல்டர் நோர்தெம்டன்ஷையர் அணிக்காக விளையாடவுள்ளார் என அந்த அணி நிர்வாகம் உத்தியோகபூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது.
மேற்கிந்திய தீவுகளின் ஒரு நாள் அணிக்கு திரும்பியுள்ள கெயில், ஈவின் லூயிஸ்
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை (CWI) சுற்றுலா..
நோர்தெம்டன்ஷையர் அணிக்காக அழைக்கப்பட்டுள்ள ஹோல்டர், எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள இரண்டு சம்பியன்ஷிப் போட்டிகளிலும், இதனையடுத்து நடைபெறவுள்ள 8 றோயல் லண்டன் ஒருநாள் போட்டிகளிலும் விளையாடுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 7ம் திகதி நடைபெறவுள்ள மிட்ல்செக்ஸ் மற்றும் ஏப்ரல் 11ம் திகதி ஆரம்பமாகவுள்ள கிளேமர்கன் அணிகளுக்கு எதிரான சம்பியன்ஷிப் போட்டிகளில் ஹோல்டர் விளையாடுவார் என தெரிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஜேசன் ஹோல்டர் கௌண்டி கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை இதுவரை அனுமதி வழங்கவில்லை. உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் மே மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளது. இதற்கு முன்னர் மே மாத ஆரம்பப் பகுதியில், மேற்கிந்திய தீவுகள் அணி, உலகக் கிண்ண தயார்படுத்தல்களுக்காக அயர்லாந்து செல்லவுள்ளது. இந்த நிலையில், மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை ஹோல்டருக்கு அனுமதி வழங்கும் பட்சத்திலேயே, அவரால் கௌண்டி கிரிக்கெட் போட்டியில் விளையாட முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
கௌண்டி தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளமை குறித்து ஜேசன் ஹோல்டர் கருத்து தெரிவிக்கையில்,
“இங்கிலாந்தின் கௌண்டி கிரிக்கெட் தொடரில் விளையாட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. நீண்ட நாட்கள் கௌண்டி கிரிக்கெட் தொடரில் விளையாடி, எமக்கு பழக்கமற்ற ஆடுகளங்களில் எப்படி விளையாட வேண்டும் என்ற அனுபவத்தை பெறுவதற்கும் நினைத்திருந்தேன். இங்கிலாந்து சூழ்நிலைகளை பழக்கப்படுத்திக்கொள்வதற்கு ஒரு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதை நம்புகிறேன். அதுவும் உலகக் கிண்ணம் நெருங்கும் சந்தர்ப்பத்தில், இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்த நோர்தெம்டன்ஷையர் அணிக்கு எனது நன்றிகளை தெரிவிக்கிறேன்” என்றார்.
டெஸ்ட் சகலதுறை வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்த ஜேசன் ஹோல்டர்
சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) வெளியிட்டுள்ள..
இதேவேளை ஜேசன் ஹோல்டரின் வருகை குறித்து நோர்தெம்டன்ஷையர் அணியின் தலைவமை பயிற்றுவிப்பாளர் டேவிட் ரிப்ளேவ் கருத்து வெளியிடுகையில்,
“கடந்த சில வாரங்களாக ஹோல்டருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தோம். உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர் ஒருவர் எமது அணியுடன் இணைவதில் மகிழ்ச்சி. ஹோல்டர் ஒரு சிறந்த பந்து வீச்சாளர். அதுமட்டுமன்றி அவர் போட்டியின் முடிவை மாற்றக்கூடிய துடுப்பாட்ட வீரர். அவரின் களத்தடுப்பு மற்றும் தலைமைத்துவம் என்பன அணிக்கு மேலும் பலமாக அமையும்” என்றார்.
ஜேசன் ஹோல்டர், இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் சிறப்பாக செயற்பட்டு, அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுக்க முக்கிய காரணமானார். அத்துடன், டெஸ்ட் சகலதுறை வீரர்கள் பட்டியலில் முதலிடத்தையும் பிடித்தார். எனினும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி, மெதுவாக ஓவர்களை வீசியதன் காரணத்தால், அவருக்கு மூன்றாவது போட்டியில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளைமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<