மஹேலவின் கனவு T20 அணியில் இடம்பிடிக்கும் 5 வீரர்கள் யார் தெரியுமா?

Sri Lanka Cricket

514

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன, தன்னுடைய கனவு T20  அணியில் இடத்தை பிடிக்கக்கூடிய தற்போதைய 5 வீரர்களின் பெயர்களை குற்றிப்பிட்டுள்ளார்.

தற்போது விளையாடிவரும் சர்வதேச கிரிக்கெட் வீரர்களில், T20 போட்டிகளை பொருத்தவரை தங்களுக்கென அடையாளமொன்றை உருவாக்கியுள்ள 5 வீரர்களின் பெயர்களில் இந்திய வீரரும், தன்னுடைய பயிற்றுவிப்பின் கீழ் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளருமான ஜஸ்பிரிட் பும்ராவின் பெயரையும் தெரிவித்துள்ளார்.

சச்சின் சாதனையை சமன்செய்த ருதுராஜ் கெய்க்வாட்!

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் நேர்காணல் ஒன்று இடம்பெற்றபோது, மஹேல ஜயவர்தன தன்னுடைய கனவு அணியில் இடம்பெறக்கூடிய முதல் 5 வீரர்களை குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே கூறியது போன்று, சர்வதேச கிரிக்கெட்டிலும், லீக் கிரிக்கெட்டிலும் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளராக உருவெடுத்துள்ளவர் ஜஸ்பிரிட் பும்ரா. இறுதி ஓவர்களில் அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுக்கக்கூடிய இவர், மஹேல ஜயவர்தனவின் பந்துவீச்சாளர்களில் ஒருவராக இடம்பெற்றுள்ளார்.

அதேநேரம், ஆப்கானிஸ்தான் அணியின் சுழல் பந்துவீச்சாளர் ரஷீட் கான், மஹேலவின் 5 வீரர்களில் ஒருவராக பெயரிடப்பட்டுள்ளதுடன், T20 போட்டிகளில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மிகச்சிறப்பாக பந்துவீசக்கூடிய வீரர் என ரஷீட் கானை குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள் இருவருடன் மூன்றாவது பந்துவீச்சாளராக பாகிஸ்தான் அணியின் ஷஹீன் ஷா அப்ரிடியை குறிப்பிட்டுள்ளார். நடைபெற்றுமுடிந்த T20 உலகக்கிண்ணத்தில் மிகச்சிறந்த பந்துவீச்சினை வெளிக்காட்டிய இவர் தொடர்ந்தும் எதிரணிகளுக்கு சவாலாக விளங்குகின்றார்.

பந்துவீச்சாளர்களை தாண்டி துடுப்பாட்ட வீரர்களை பெயரிட்ட மஹேல ஜயவர்தன, இங்கிலாந்து அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் ஜோஸ் பட்லர் தன்னுடைய முதற்தர தெரிவாக இருப்பார் என சுட்டிக்காட்டியுள்ளார். பட்லர் வேகமாக ஓட்டங்களை குவிக்கக்கூடியவர் என்பதுடன், வேகப்பந்துவீச்சு மற்றும் சுழல் பந்துவீச்சு என இரண்டையும் மிகவும் நேர்த்தியாக எதிர்கொள்ளும் வீரராக மாறியுள்ளார்.

அதேநேரம் விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரராக கடந்த T20I உலகக்கிண்ணத்தில் பிரகாசித்திருந்த பாகிஸ்தான் வீரர் மொஹமட் ரிஷ்வானை குறிப்பிட்டுள்ளார். ரிஷ்வான் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக மாத்திரமின்றி, மத்தியவரிசையிலும் வேகமாக ஓட்டங்களை குவிக்கக்கூடிய திறமையை கொண்டிருப்பதாக மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

மேற்குறித்த ஐவரையும் தவிர்த்து, ஓய்வுபெற்றுள்ள ஒரு வீரர் மஹேல ஜயவர்தனவின் கனவு அணியில் இடம்பெறுவார் என்றால் அது யாராக இருப்பார் என்ற கேள்வியை நேர்காணலில் கேட்டபோது, மஹேல ஜயவர்தன உடனடியாக மேற்கிந்திய தீவுகளின் அதிரடி ஆட்டக்காரர் கிரிஸ் கெயிலின் பெயரை குறிப்பிட்டிருந்தார்.

அதேநேரம், கிரிஸ் கெயில் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் தன்னுடைய கனவு அணியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக செயற்படுவதற்கு விரும்புவதாகவும் மஹேல ஜயவர்தன இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<